logo

அத்தியாயம் 9

Mars

Administrator
அந்த ஒருவாரம் அமைதியாக சென்றது. மூவரும் பேசிக்கொள்ளவில்லை..இத்தனை நாட்கள் பேசாமல் இருந்தது இதுவே முதல் முறை. அர்ஜுன் அவன் அப்பா கம்பெனிக்கு சென்றான் எப்போது போல் ரூபினி பார்வை இவன் பக்கம். ஆனால் முன்பைவிட அதிகமாக அவன் மேல் பட்டது. அர்ஜுன் முடிந்த அளவு தவிர்த்து விடுவான்.

ரூபினி என்னதான் தொல்லை செய்தாலும் அதற்கான எதிர்வினை மட்டுமே அவனிடம் இருக்கும்...காதல் கைகூடாத கோவத்தையோ, ஏமாற்றத்தையே அவளிடம் அவன் காட்டணும் என நினைக்கவில்லை.
அவன் தந்தை ஏதோ சரி இல்லை என்பதை உணர்ந்து கொண்டு முடிந்த அளவு ரூபினியையும், அர்ஜுனையும் ஒரே இடத்தில் இருக்காதா வாறு பார்த்துக்கொண்டார்.

சாரா பக்கத்துக்கு ஆபீஸ் தான் ஆனால் அவளை சென்று பார்க்க அவன் நினைக்கவில்லை. அவள் ஆதியிடம் என்ன பதில் சொன்னாள் என கண்டறிய முனையவில்லை. அதனை நினைக்க நினைக்க தனக்கு தான் வேதனை என புரிந்துகொண்டு மௌனமாக இருந்தான்.

ஆதி மிகவும் சோகமாக அமர்ந்திருந்தான். சாரா இன்னும் எந்த ஒரு பதிலும் சொல்லிருக்கவில்லை. காதலை சொல்லி… இருக்கிற நட்பை கெடுத்துக்கொண்டோமோ என பயம் பிடித்துக்கொண்டது. ஆதியின் நடவடிக்கையை அவன் தந்தை ரவீந்திரன் கவனித்துக்கொண்டு தான் இருந்தார். அவர் ஆள் வைத்து கல்லூரியில் நடந்துக்கொண்டதை தெரிந்த பின் ஆதியின் மாற்றம் அவருக்கு புரிந்தது. என்ன நினைத்தாரோ அடுத்த போன்-கால் அவர் மேனேஜருக்கு போன் செய்து சாராவை தொடர்புக்கொள்ள ஆணையிட்டார்.

சாரா இன்னும் யோசித்த பாடு இல்லை. குழப்பத்தில் தான் அமர்ந்து இருந்தாள். என்ன யோசித்தாலும் அன்று அர்ஜுன் வரும் போது பூ விழுந்தது நெருடலாகா இருந்தது எனவே முடிவு எடுக்க முடியாமல் திண்டாடினாள். மேலும் அவள் தந்தை இறக்கும் முன் ஆதி மற்றும் அர்ஜுன் உள் நுழையும் போதே எதுவோ சொல்ல முயற்சி செய்ததை கவனித்தாள்.


ஆதியின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள நினைத்தாலும் மற்றொரு மனம் ஏற்க மறுக்கிறது.

அப்போது தான் ரவீந்திரன் மேனேஜர் போன் செய்து சார் அவளை பார்க்க நினைப்பதாக சொன்னார். ஏதற்கு என கேட்டவளுக்கு அவள் கோல்ட் மெடல் வாங்கியதற்கான லஞ்ச் ட்ரீட் என சொன்னார். கண்டிப்பாக ஆதியை அங்கு வைத்து சந்திக்க நேரும்...அவன் பதிலை எதிர்நோக்கி காத்திருப்பான் எனவே முடிவு எடுத்துவிட்டு நாளை ஆதி வீட்டுக்கு போக மனதளவில் தயாராகினாள்.

பல மணி நேரம் யோசித்து முடிவு எடுத்த பின் தான் தூக்கமே வந்தது. கூடவே ஒரு நிம்மதியும் பிறந்தது. (என்ன முடிவாக இருக்கும்?!)

ரவீந்திரன் இந்த விடயத்தை ஆதியிடம் சொல்லவில்லை. அதுவே அவர்கள் மூவரின் நட்பில் விரிசல் விழும் என நினைக்கவில்லை.

சாரா ஒரு படபடப்புடன் தான் ஆதி வீட்டு ஹாலில் அமர்ந்து இருந்தாள். மேனேஜர் மட்டுமே அவளுடன் இருக்க

"ரொம்ப சந்தோசம் சரஸ்வதி. கோல்ட் மேடலாமே வாழ்த்துக்கள். கிடைச்ச வாய்ப்ப நல்லா உபயோகம் பண்ணிருக்க. உங்க அப்பா இருந்திருந்தா கொண்டாடிருப்பாரு" என நினைவலைகளை தூண்டியது போல் ஆனது அவர் வாழ்த்து.

"தேங்க்ஸ் சார்" என்பதோடு முடித்துக்கொண்டாள்.

அப்போது சரியாக ரவீந்திரன் வர...இருக்கையில் இருந்து எழுந்தாள்.

"கங்கிராட்ஸ் சாரா. அழைப்ப ஏற்று வந்ததுக்கு நன்றி" என சொல்லியபடியே சோபாவில் அமர்ந்தார். அவர் அமர்ந்த பின் தானும் அமர்ந்து "ஐயோ சார் நீங்க போய் ஏன் நன்றி எல்லாம் சொல்லிட்டு. நான் தான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுருக்கேன்" அவர் நன்றியில் பதறியபடி பதில் சொன்னாள்.

"ஹ்ம்ம். இந்த நன்றி உணர்ச்சி நினைவில் இருந்தா சரி" என கூறிய பார்வை ஒன்றைப் பார்க்க... அந்த பார்வையில் முதுகு தண்டில் சில் என்ற உணர்வு பரவியது.

எதற்காக இதனை சொல்கிறார் என சிந்திக்கும் வேளையில்... அதற்கான பதில் சொல்லும் விதமாக அவரே "ஆதி" என்றார்.

அதில் சடார் என்று அவள் அவர் கண்களை பார்க்க...அதே துளைக்கும் பார்வை. அவர் எதனை சொல்கிறார் என புரிந்துவிட்டது.

ஆனால் அவரோ "ஆதிய அழைச்சிட்டு வாங்க...அவனோட சாரா வந்திருக்கானு சொல்லி" என வேலையாட்களை அனுப்பி வைத்தார்.

மறைமுகமாக அவள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவளுக்கு உணர்த்தினார். செய்தி கேட்டு கீழே வேகமாக ஓடி வந்தான் ஆதி. பார்வையில் அத்தனை எதிர்ப்பார்ப்பு, உடலில் அத்தனை பரவசம். ஒரு வாரமாக அவளை பார்க்கவில்லை அல்லவா.

"சா..சாரா... நீ வர்றதா சொல்லவே இல்லை. ஒரு போன் பண்ணிருக்கலாமே நானே வந்து பிக்கப் பண்ணிருப்பேன். நீ... நீ... எப்படி இருக்க?" என அவசரமாக பேசினான்.

"ஆதி கூல், உங்க அப்பா தான் லஞ்ச்க்கு இன்விடே இன்வைட் பண்ணாங்க. உனக்கு தெரியும்னு நினைச்சேன் அதான்... "

அவன் அறையிலேயே இருந்ததால் யாரிடமும் பேசமுடியாமல் போய் விட்டது எனவே தன் தந்தை சாரா வரவை சொல்லவில்லை என்று நினைத்துக்கொண்டான்.

"ஒகே ஒகே சாரா. நீ வந்ததுல ரொம்ப சந்தோசம். அப்புறம்... " என அன்று நடந்த நிகழ்வை நினைத்து அவன் இழுக்க

சுற்றி அவன் தந்தை, மேனேஜர், வேலையாள் இருப்பதால் தயக்கமாக அவனைப் பார்க்க.. அதனை புரிந்து கொண்ட ஆதி பேச்சை மாற்றினான்.

"வா சாரா.. சாப்பிடலாம். நான் இன்னும் காலையிலையே சாப்பிடல. நான் உன்னோட சமையல ரொம்ப மிஸ் பண்றேன்" என பேசியவாறு அவளுக்கும் சேர்த்து பரிமாறினான்.

அவன் தந்தை முக்கிய வேலை என சென்றுவிட்டார். உதவிக்கு வந்த வேலையாளை அனுப்பிவிட்டான். இருவருக்கும் பேச தனிமை கிடைத்தது.

அமைதியை உடைப்பது தன்னோட முறை என உணர்ந்த சாரா... ஒரு மிரடு தண்ணீர் அருந்தி பேசத்தயாராகினாள். ஆதி அவன் தட்டில் கவனமாக இருப்பது போல் கட்டிக்கொண்டாலும் அவள் செய்கை எல்லாம் கிரகித்த வண்ணமே இருந்தான்.

உள்ளே சென்ற குரலில் "ஆ..ஆதி" என அழைக்க

எதிர்பார்ப்போடு ஆதி திரும்பிப் பார்த்தான்.

"அது வந்து... எனக்கு.." எப்படி சொல்ல என தெரியாமல் வார்த்தைகள் தேடினாள் சாரா.

அவள் எடுத்துக்கொண்ட நொடிகளில் ஆதி மனதில் பெரும் புயலே அடித்தது. சாரா மனதில் இருந்தது படபடப்பே தவிர எந்த ஒரு பிரத்யேகமான உணர்வு இல்லை என்பதை அவளும் உணர்ந்தே இருந்தாள். ஆனால் ஆதியின் தந்தை செயல்கள் வெகுவாக அவளை அவனுக்கு சாதகமான பதிலை சொல்ல தூண்டியது.

"எனக்கும் சம்மதம் ஆதி" என ஒருவழியாக சொல்லிவிட்டாள்.

ஆதி ஸ்தம்பித்துவிட்டான். அவன் எதிர்பார்த்த பதில் அவனின் சாராவிடம் இருந்தது. எகிறிக்குதித்து கத்த வேண்டும் போல் இருந்தது. பறந்த மனதை அடக்க பெரும்பாடு பட்டான். முகத்தில் பல நாள் கழித்து பிரகாசம். மனதில் நிம்மதி.

ஆனால் காதலை பெற்ற பிறகு வரும் தனிப்பட்ட எண்ணமோ, வார்த்தையையோ, தொடுகையோ எதுவும் அவனிடம் இல்லை. அவனுக்கு தோன்றியது எல்லாமே இனிமேல் அவனால் சாராவுடன் இறுதி வரை எந்த தடையும் இன்றி இருக்க முடியும். யாரும் இடையில் வந்து பிரிக்க முற்பட முடியாது என என்ற உரிமை உணர்வு மட்டுமே இருந்தது. மேலும் சாரா வாழ்க்கை தெரியாத நபரிடம் ஒப்படைக்க படவில்லை...தன்னிடம் தான் இருக்கிறது என ஆசுவாசம் பட்டுக்கொண்டான்.

பதிலுக்கு அவளை பார்த்து புன்னகைத்து...லேசாக அவளை தலையை இடக்கையால் கோதியவன் "ஹ்ம்ம்...சரி சாப்பிடு" இவ்வளவு தான் அவன் பதிலாக இருந்தது.

உணவை பார்த்து பார்த்து பரிமாறினான். சாரா கையை கழுவ சென்ற நேரம், அர்ஜுன் ஆதிக்கு போன் செய்ய

"மச்சி, ஒரு நல்ல பைக் வாங்கலாம்னு இருக்கேன். இப்போ வந்ததுல புது மாடல் எது டா நல்லா இருக்கு" என அர்ஜுன் கேட்டான்.

"டேய் டேய்...சாரா வீட்டுக்கு வந்துருக்கா டா" என ஆதி உச்சகட்ட சந்தோசத்தில் பேச... அர்ஜுன் தான் பேச்சற்று போனான்.

அவள் தன்னிடம் எதுவுமே சொல்லவில்லையே என மனம் ஏங்கத்தான் செய்தது. எப்போதும் அமைதியாக பேசும் அர்ஜுன் மனதின் பாரம் தாங்காமல்

"அவா வர்றான்னு சொல்லவே இல்லையே டா. நீ ஆச்சும் என்னையும் கூப்பிட்டிருக்கலாம்ல" என ஆதங்கமாக கேட்க..

"டேய் புரியாம பேசாத. அவா லவ் ப்ரொபோசல் அக்சப்ட் பண்ண வந்திருக்கா. அப்போ எப்படி உன்கிட்ட சொல்லிட்டு வர முடியும் அதான் என்னை தனியா பார்க்க வந்தா"

ஆதி அவனிருக்கும் சந்தோசத்தில் நண்பனின் மனதை அவன் வார்த்தை காயப்படுத்துவது தெரியாமல் பேசினான்.

"ஓஓஓ..."

"ஆமா டா. எங்க அப்பா தான் கோல்ட் மெடல் வாங்குனதுக்கு லஞ்ச்க்கு கூப்ட்டிருக்காங்க. அப்போ என்கிட்ட சம்மதம் சொல்லிட்டா டா"

கொஞ்சம் கொஞ்சமாக அர்ஜுன் அவன் கட்டுப்பாடை இழந்தான்.

"ஓஓ அப்போ குடும்பமா உக்காந்து எல்லாரும் லஞ்ச் சாப்பிட்டு இருக்கீங்க இல்ல??!!" என கோவமாக கேட்டிட

ஆதிக்கு அர்ஜுன் பேச்சு பிடிக்கவில்லை. தன் நண்பன் சந்தோசப்படுவான் என அவன் எதிர்பார்க்க அவனோ இப்படி சந்தோசமான சூழ்நிலையை கடினமாக மாற்றுவதாக நினைத்தான்.

"என்ன அர்ஜுன்.. ஒரு மாதிரி பேசுற.. நல்லா இல்லை சொல்லிட்டேன்"

"என்ன டா நல்லா இல்ல.. நீங்க பண்றது மட்டும் நல்லா இருக்கா. எப்பவும் மூணு பேரா சந்திக்கிறது தான வழக்கம். இப்போ மட்டும் என்ன டா புதுசா. சாரா அங்க வந்திருக்கானு தெரிஞ்ச உடனே என்னை ஏன் டா கூப்பிடல?" நண்பர்கள் தன்னை தனித்து விட்டுவிட்டனர் என்ற ஏமாற்றம் அவன் குரலில் நன்றாக தெரிந்தது.

ஆதி அப்போது தான் தவறை உணர்ந்தான். பொதுவாக சந்திப்பது என்றால் மூவரும் ஒரே இடத்தில் சந்திப்பது என்பது அவர்களிடம் இதுவரையில் சொல்லிக்காத சட்டம். காதல் தோல்வி விட நண்பர்கள் செய்ததது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. ஆதி பேசிக்கொண்டு இருக்கும் போதே சாரா வந்துவிட... இவன் பேசியதை வைத்தே என்ன நடக்கிறது என்பது புரிந்தது.

அர்ஜுன் சொல்வதில் இருக்கும் நியாயம் புரிய.m "டேய் சாரி அர்ஜுன். வேணும்னே பண்ணல டா. அந்நேரம் தோணவே இல்லை."

"மறந்துட்டீங்க... நீ மட்டும் தான் இப்படியா. இல்லை சாராவும் தானா??"

"டேய் டேய் புரிஞ்சிக்கோடா"

"எத ஆதி புரிஞ்சிக்க சொல்ற. ரெண்டு பேரும் ஒன்னு சேர்றதுக்கு முன்னாடியே என்னை மறந்து போனதையா??"

அர்ஜுன் எண்ணம் எல்லாமே அவள் ஆதி வீட்டுக்கு லஞ்ச்க்கு என்று தான் வந்திருக்கிறாள். வந்த இடத்தில் காதலை சொல்லிவிட்டாள். சாரா வந்த உடனே தனக்கு அவன் அழைக்கவில்லையே என ஆதியின் நண்பனாக கோவித்துக்கொண்டான்.

"அர்ஜுன் தப்பாவே யோசிச்சிட்டு இருக்க... சொல்லிட்டேன் " ஆதி விட்ட கோவத்தை தொடர... இடையில் சாரா ஆதியை சமாதானம் செய்ய...

அர்ஜுனுக்கு இப்போதும் சாரா போன் வாங்கி தன்னிடம் பேசாமல் இருக்கிறாள் என கோவம் உச்சிக்கு சென்றது. ஆதி மற்றும் அர்ஜுன் இருவருக்கும் இடையில் வார்த்தை முற்றிப்போக... ஆதி தான் "ஆமா டா. நாங்க பேமிலியா உட்கார்ந்து லஞ்ச் சாப்பிட நினைச்சோம் அதான் உன்ன கூப்பிடல" என சொல்லிவிட... சாரா "என்ன பேசுற ஆதி.... அர்ஜுன் கிட்ட ஏன் அப்படி சொன்ன. கொஞ்சமாச்சும் யோசிச்சு பேசு. போன் என்கிட்ட கொடு" என அவனிடம் கத்திவிட்டு கையில் இருந்த போன் வாங்கி காதில் வைத்து "ஹலோ" என்க அந்த பக்கம் தொடர்ப்பு துண்டிக்க பட்டதுக்கான சத்தம் தான் கேட்டது.

சாரா தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள். ஆதி இன்னும் கோவத்தில் தான் இருந்தான்... நல்ல சூழ்நிலையை இப்படி நாசம் செய்துவிட்டானே என்று.

*****

அர்ஜுன் வீட்டில் இவனுக்கு என்று பிரத்தியேகமாக செய்த ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்துக்கொண்டு இருந்தான். உடல் எல்லாம் வியர்த்து, முன்னேற்றி முடியில் இருந்து வியர்வை சொட்டு சொட்டக விழ பயிற்சி செய்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு ஆதி பேசியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சாரா ஆதிக்கு தான் என்ற நினைப்பை அவனுக்கு அவனே புரியவைத்துக்கொள்ள பல வித முயற்சி எடுத்தான். ஆனால் அவனுக்கு நண்பர்கள் என்றால் அவர்கள் இருவரும் தான்.

இருவரும் காதலித்தாலும் இவர்கள் நட்பில் எந்த மாற்றமும் வராமல் இருக்கும் என அவன் நினைத்திருக்க.. இடியென விழுந்தது ஆதியின் வார்த்தைகள், மற்றும் சாரா ஆதியிடம் மட்டுமே பேசிய விதமும்.

சாரா ஹாஸ்டலில் கண்ணீருடன் படுத்திருந்தாள். மூவரும் இப்படி மூன்று திசையில் போவார்கள் என கனவிலும் நினைக்கவில்லை. காதலுக்கு சரி சொன்னதே நண்பர்கள் உறவில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் புரிதல் இருக்கும் என்று நினைத்து தான். ஆனால் அதுவே இப்போது பாதகமாக அமைத்து விட்டது.

நாட்கள் சென்ற நிலையில் சாரா அர்ஜுனை எவ்வளவோ முறை தொடர்புகொள்ள முயன்றாலும் அவனிடம் பேச முடியவில்லை. இடையில் ஒரு முறை அவர்கள் ஆபீஸ் சென்று பார்க்க முயற்சி செய்ய... சாராவின் போதாத காலமோ என்னமோ ரூபினி தான் இருந்தாள். "அவரு பிஸியா இருக்காரு. நீ போ" என சொல்லிவிட எரிச்சலுடன் திரும்பி வந்துவிட்டாள். அதுவும் ரூபினி அர்ஜுனை அழைத்த விதம் சுத்தமாக பிடிக்கவில்லை.

சாரா மனதில் ஆதி தான் வாழ்க்கை துணை என பதியவைக்க முயற்சி செய்தாள். அவனின் இந்த ஒரு வாரம் மௌனம் விட அர்ஜுனின் மௌனம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எந்நேரம் அவன் நினைவில் தான் இருந்தாள்.

ஆதி அவன் பைக் ரேசிங் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தான். அந்த நிகழ்வு பின் சாராவும் கோவமாக சென்றுவிட... அவனும் அடுத்து பேசவில்லை.

காதலன் என்றால் காதலில் கோவமாக இருந்தால் குட்டிக்கரணம் அடித்தேனும் சமாதானம் செய்யவேண்டும் என்ற துளி எண்ணமும் பாவம் வரவில்லை. அர்ஜுன் போலத்தான் சாராவையும் நினைத்தான். இது காதல் தானா??!!!

ஆதி பைக் ரேசிங்ல் அலாதி பிரியம் உள்ளவன். அதனாலோ என்னவோ பல வருடம் முன்பே FMSCI லைசென்ஸ் பெற்றுவிட்டான். இதுவரையிலும் நிறைய பைக் ரேசிங்கில் பங்கேற்று பதக்கம் பெற்று அவர்கள் வீட்டு ஷோகேசில் இடம் இல்லாமல் நெருக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்காகவே உடல் பராமரிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவான். அந்த ஊரில் பைக் ரேசிங்கில் அவனைப் பற்றி தெரியாத ஆளே இருக்க முடியாது, அந்த அளவிற்கு அவன் பிரபலம்.

வெற்றி மட்டும் அல்லாமல் ரேசிங் செய்யும் போது அதிக காயங்களையும் பெற்றுருக்கிறான். அது அறுவை சிகிச்சை வரைக்குமே சென்றிருக்கிறது. ஆனால் உடல் சரியானதும் மீண்டும் ரேசிங்கில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதே அவனுக்கு ஒரு போதை.

இப்போது அவன் சேர்ந்த கிளப்பில் (club) உள்ளே தான் நடந்துக்கொண்டு இருந்தான். வயது நாற்பதை தொடும் தருவாயில் இருக்கும் நபர் ஆதியைப் பார்த்து கையை அசைக்க அவரை நோக்கி சென்றான், அவர் தான் இவனின் டிரைனர் (Trainer) ஜார்ஜ். பார்ப்பதற்கு உயரமாக, கட்டுமஸ்தானமாக, கண்டிப்பான ஆள் போல் தெரிந்தார்.

"என்ன ஜார்ஜ்... டென்மார்க் ட்ரிப் எப்படி போச்சு?" என ஆதி கைகுலுக்கிய படியே வினாவ

"அதுக்கு என்ன அசத்தலா போச்சு. ரொம்ப நாள் அப்புறம் நீ இந்த பக்கம் வர்றது போல தெரியுது?"

வெளிநாட்டுக்கு ட்ரிப் போயிருந்தாலும் இங்கு நடப்பவை அவர் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார் என்பது புரிந்தது. அவர் பேச்சு வெளிநாட்டவர் பேசும் தமிழ் போல் தான் இருக்கும் ஏனெனில் அங்கும் இங்கும் பயணத்தில் இருப்பதால்.

"ஆமா ஜார்ஜ், கொஞ்சம் பர்சனல் ப்ராப்லம் அதான். இனிமேல் ரெகுலரா வந்துருவேன்"

""குட் குட். ஹவ் எ நைஸ் ரைட்" என சுருக்கமாக பேசிவிட்டு நகர்ந்துவிட்டார்.

பைக் ஓட்ட அதற்க்கு தேவையான உபகரணங்களை மாட்டிக்கொண்டு வண்டியில் ஏறி முறுக்கினான். அவன் வைத்திருப்பது விலையுர்ந்த Kawasaki Ninja ZX-10R பல லட்ச இளைஞர்களில் கனவு இந்த வண்டி. வண்டி ஓட்டப்போகும் அந்த நிலம் வட்ட வடிவத்தில் வெள்ளை கோடுகள் போட்டு பிரிக்கப் பட்டு இருந்தது. ஸ்டார்டிங் பாயிண்ட் எனப்படும் ஆரம்ப இடத்தில் கருப்பு வெள்ளை சதுரங்கம் போட்ட கொடி பறந்து கொண்டு இருந்தது. ஆரம்பமும் அதுவே முடிவும் அதுவே. பைக் ஒட்டும் இடத்தை ட்ராக் (Track) என்பர், உலகிலேயே மிகப்பெரிய ட்ராக்கில் இதுவும் ஒன்றாகும்.

உச்சக்கட்டம் வேகத்தில் வண்டியில் பறந்தான் என்று தான் சொல்லவேண்டும். அவ்வளவு திடம் அவன் உடலில். சாராவின் புறக்கணிப்பு, அர்ஜுனின் செய்கை என எல்லாம் சேர்த்து அவனை ஒருவழிப் பண்ண... அதனை எல்லாம் வேகத்தில் காட்டினான். அப்போது காற்றைக்கை கிழித்துக்கொண்டு வந்தது ஒரு பெண்ணின் குரல்.

'ஆ..தி ஆ..தி ஆ...தி ' என வேடிக்கை பார்க்கும் இடத்தில் நின்று அவன் பெயர் சொல்லி உற்சாகப்படுத்திக்கொண்டு இருந்தாள் ஏஞ்சலா. காதில் பெண் குரல் விழுந்தாலும் கவனம் சிதறாமல் ஆரம்பித்த இடத்தில் வந்து வேண்டிய நிறுத்தினான். மெதுவாக ஹெல்மெட் கழட்டி முடியை கோதிவிட்டு படி சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்க்க... ஏஞ்சலா என்னும் ஆங்கிலோ இந்தியன் பெண் தெரிந்தாள்.

அவன் இன்னும் வண்டியில் இருந்து இறங்காமல் இருக்க... அவனருகில் ஓடியே வந்தால் ஏஞ்சலா.

"ஹாய்.. நான் ஏஞ்சலா. இப்போதான் இங்க புதுசா சேர்ந்துருக்கேன். ஒரு வாரம் ஆச்சு" என எடுத்த எடுப்பில் சரளமாக பேச.. அவளையே வினோதமாக பார்த்தான்.

அவன் அப்படி வினோதமாக பார்க்கும் அளவுக்கு எல்லாம் அவள் இல்லை... வெளீர் நிறத்தில், கழுத்து வரைக்கும் வெட்டப்பட்ட முடி, சட்டை பாண்ட், தொப்பி என மாடர்ன் மங்கையாக இருந்தாள். ஆதி பதிலுக்கு "ஹாய்" என்பதோடு நிறுத்திக்கொண்டான்.

"உங்களை பற்றி தான் இங்க எல்லாரும் பேசுறாங்க. நாங் இங்க சேர்ந்து 5 நாள் ஆச்சு. அதுக்குள்ள உங்க சாதனை பத்தி எல்லாம் தெரிஞ்சிக்கிட்டேன்." என படபடவென உற்சாகமாக பேசினாள். முகத்தில் நிரந்தரமாக இருக்கும் புன்னகை அவளை மேலும் அழகாக காட்டியது.

"ஒகே"

"ஆதி ரொம்ப ஷை டைப்(shy type) போல ரொம்ப அளந்து தான் பேசுறீங்க. நான் கொஞ்சம் டாக்கடிவ் (talkative)"

"தெரியுதுங்க"

"அப்படியா.."

"ஒகே பை" என சொல்லிவிட்டு முன்னே நடக்க ஆரம்பித்துவிட்டான்.

பின்னாடியே ஓடி வந்து "ஒரு நிமிஷம் நில்லுங்க ஆதி"

ஆதியின் மனமோ 'விட மாட்டா போலையே' என நினைத்துக்கொண்டது.

'என்ன' எனபது போல் புருவம் உயர்த்தி கேட்க.. "டெய்லி ஈவினிங் பிராக்டிஸ்க்கு இங்க தான் இருப்பேன். அடுத்து வர்ற ரேசிங்ல கலந்துக்க போறேன்." அவன் மேல் சின்ன ஆர்வம் வர.. அவனிடம் அவளை சந்திக்கும் நேரத்தை மறைமுகமாக தெரிவித்தாள்.

ஆதியோ "ஆல் தி பெஸ்ட்" அதற்கு மேல் அங்கு நிற்காமல் வேகமாக நடந்து சென்றுவிட்டான்.

ஏஞ்சலா மனதில் 'கஷ்டம் தான் போலயே' என நினைத்துக்கொண்டாள்.

***

சாரா ஹாஸ்டலில் உள்ள காதலிக்கும் பெண்களை பார்த்திருக்கிறாள் சதா எந்நேரமும் அந்த பையனிடம் பேசிக்கொண்டே தான் இருப்பர். அவளுக்கு அவளின் கதை வித்தியாசமாக தோன்றியது.. பின்னே இருக்காதா? காதலை சொன்ன சில நிமிடங்களை பிரச்சனை வந்து…பல நாளாக பேசாமல் இருக்கும் காதல்... எங்கே இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என நினைத்துக்கொண்டாள். காதல் என்ற ஒன்று அவள் வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு எதிர்பார்ப்புகள் முளை விட தொடங்கிவிட்டது.

காதலியின் மன்னிப்பை யாசிக்க காதல் எடுக்கும் முயற்சி எல்லாம் பார்த்திருக்கிறாள் அது எல்லாம் நிதர்சனத்தில் நடக்காது போல் என மனதை தேற்றிக்கொண்டாள். அர்ஜுனும் ஒரு பக்கம் வீஞ்சிக்கிட்டு சென்றுவிட தனிமை கொடூரமாகா இருந்தது.

வெள்ளிக்கிழமை மதியானத்தில் இருந்து சாரலாக ஆரம்பித்த மழை, பொழுது சாயும் நேரம் நன்றாக பெய்ய ஆரம்பித்துவிட்டது. அன்று ரூபினி வராததால் அர்ஜுன் மனம் கொஞ்சம் மட்டுப்பட்டு இருந்தது. அந்த கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே மழை பெய்வதை பார்த்த வாறு நின்றான். இது பிரைவேட் ரோடு என்பதால் வாகனங்கள் இடையூறு இல்லாமல் மழை தண்ணீர் சாலையில் விழுந்து தெரிந்தது. சாலையின் இருப்பக்கமும் வரிசையாக தெருவிளக்கு மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தது. விளக்கு எரியும் இடத்தில் மட்டுமே வெளிச்சம் தென்பட்டது மற்றம் இடம் எல்லாம் கருமேகங்கள் வேலையால் இருட்டி இருந்தது.

அப்போது அவன் கண்ணுக்கு தென்பட்டது சாரா. உள்ளங்கையை தேய்த்த சூடு பரப்பி கன்னங்களுக்கு ஒற்றிக்கொண்டாள். இந்த மழையில் எவ்வாறு ஹாஸ்டல் செல்ல போகிறோம் என்ற கவலை முகத்தில் தெரிந்தது. இல்லாத குடையை பையில் தேடி நொந்துவிட்டாள். வாய்க்குள் முணுமுணுவென அவளை அவளே திட்டுவது அர்ஜுனுக்கு சுவாரசியமாக தெரிந்தது.

தோழியா என் காதலியா என மனதில் விவாதம் நடத்தாமல்.. குடையை எடுத்துக்கொண்டு அவளை நோக்கி சென்றான். தன் மேல் ஏதோ நிழல் விழுவது போல் இருக்க என்ன என்று அண்ணார்ந்து பார்த்தாள் சாரா. அர்ஜுன் தான் விரித்த குடையுடன் மழையை வேடிக்கை பார்த்த வாறு நின்றிருந்தான்.

குடையை நகர்த்திவிட்டு மழையில் நடக்க ஆரம்பித்துவிட்டாள். இதனை எதிர்பார்க்காத அர்ஜுன் பின்னாடியே கத்திக்கொண்டு ஓடினான்.

"ஏய்ய் சாரா... மழையில நனையிற பாரு" என அவளுக்கும் சேர்த்து குடை பிடித்த படி நடந்தான்.

தெருவிளக்கு வெளிச்சத்தில், குளிர் காற்றில், மழையில் ரகசிய காதலியுடன் குடையில் நடப்பது ஏகாந்தமாக இருந்தது.

"ரொம்பத்தான் அக்கறை உனக்கு... பேசாத அர்ஜுன்" என கோவமாக சொன்னாலும் குரல் தடுமாறியது.

"பின்ன எனக்கு அக்கறை இருக்காம வேற யாருக்கு இருக்குமாம்?!"

"அப்புறம் ஏன் உங்க ரெண்டு பேரு சண்டையில நீயும் என்கூட இத்தனை நாள் பேசாம இருந்த!!!" உரிமையாக கோவித்துக்கொண்டாள்.

அர்ஜுனின் மனதில் 'அப்போ ஆதி இன்னும் சாராவிடம் அதற்கு பிறகு பேசவே இல்லையா' என நினைக்க கோவமாக வந்தது. ‘காதலை சொன்னால் மட்டுமே போதுமா அவனுக்கு’ என நண்பனை நினைத்து ஆயாசமாக வந்தது.

"எனக்கு உன்மேலையும் தான் கோவம். நீ அங்க போறத ஏன் என்கிட்ட சொல்லல? சொல்லிருந்தா நானும் வந்துருப்பேன்ல"

கவனமாக 'ஏன் என்னிடம் ஆதியை காதலிப்பதை தெரிவிக்கவில்லை ' என்பதை தவிர்த்துவிட்டான்.

"அந்த மேனேஜர் ஒரு நாள் முன்னாடி தான் சார் லஞ்சுக்கு கூப்பிடுறதா சொன்னாரு. தனிப்பட்ட முறையில கூப்பிட்டனால தான் சொல்லல. அப்போ ஆதியும் என்கிட்டே பேசிட்டு இல்லை ஆனா அவன் உன்ன கூப்டிருப்பானு நினைச்சேன் அர்ஜுன். அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவனுக்கே நான் வர்றது தெரியாதுனு"

"சாரி டி. விஷயம் தெரியாம தான் கோவமா இருந்துட்டேன். இனிமேல் இப்படி ஆகாது" பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல... அதற்கு பதில் ஒரு உதடு சுழிப்பு மட்டுமே அவளிடம்.

கொஞ்சம் மனம் இறங்கிவிட்டாள் என்பது புரிய.. அவள் செய்கையை ரசித்துக்கொண்டே அவள் மன்னிப்பு வேண்டி கண்களால் இரையை... சிரித்து அவன் மன்னிப்பை ஏற்றுக்கொண்டாள்.

சாரா கொஞ்சம் தயக்கத்துடன் "ஆதி பேசுவானா?"

'உனக்கு இது கூட தெரியாதா. என்ன லவ்வர்ஸ்' என கேட்டுவிடுவானோ என ஆதியைப் பற்றி அர்ஜுனிடம் கேட்க சங்கடமாக இருந்தது.

"இல்ல டி. அவன் அன்னைக்கு ரொம்ப ஜாஸ்தி பேசிட்டான். அதான் அடுத்து நானும் பேச முயற்சி செய்யல"

இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பேசாமல் இருக்க போகிறானோ? அவனுக்கு தன் மேல் உண்மையிலேயே காதல் இருக்கிறதா? நான் தான் அவசரப்பட்டுவிட்டேனோ? என பயம் பிடித்துக்கொண்டது. இந்த இடத்தில் ஆதி ஒரு காதலனாக தோற்று போய் விட்டான்.

பொதுப்படையாக பேச... விடுதி வந்துவிட்டது. வாயில் கதவு தாண்டி இன்னும் கொஞ்சம் நடந்தால் அவள் தங்கியிருக்கும் அறை வந்துவிடும். இந்த எல்லை தாண்டி வெளியாட்கள் வர கூடாது என்பதால் அங்கேயே நின்றான் அர்ஜுன். குடையில் இருந்தவாறே வினவினான்

"இந்த வாரம் வீட்டுக்கு போகலையா?"

"இல்ல டா. மழை வேறு பெய்யும்னு சொல்லிருக்காங்க. ஒருவேளை ஆதி என்னை தேடி இங்க வந்தா... அதான் போகல"

காதல் சொன்ன பிறகு ஒருவார்த்தை பேசாதவனுக்கு…காத்திருக்கும் பெண் என அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

"ஒகே சாரா. ஏதாவதுனா போன் பண்ணு பை" என குடையில் இருந்து விலகப்பார்க்க

"அர்ஜுன் நீ வெச்சிக்கோ எனக்கு இன்னும் ஒரு 10 ஸ்டெப் தான்... நீ தான் திரும்ப நடந்து போகணும்" என குடையை பிடித்த அவன் கையின் மேலே தன் கையை வைக்க... அர்ஜுன் உடலின் சிறு அதிர்வு. அவர்கள் நட்பில் தொடுத்தல் சாதாரணம் தான் ஆனால் இப்போது அவன் மனதில் பதிந்த உறவு வேறு.

"இருக்கட்டும் சாரா. நான் அதுலாம் போயிடுவேன். திரும்ப நீ நாளைக்கு பக்கத்துல கடைக்கோ இல்ல காலையில ஆபீஸ் போகும் போது மழை பெஞ்சா என்ன செய்வ" அவன் அக்கறை மனதுக்கு இதம் அளித்தது.

"சரி டி நான் கிளம்புறேன்" என அவள் கன்னத்தில் கட்டிவிட்டு வந்த வழியே ஓடினான். புள்ளியாக அவன் மறையும் வரையில் அவனையே புன்னகையுடன் பார்த்தாள் சாரா.


*****
ஆதியும் பெட்டில் புரண்ட வாறு சாராவை தான் நினைத்துக்கொண்டு இருந்தான். இவர்கள் பிரச்சனையில் அவளிடம் பேசாமல் விட்டது தப்போ என இப்போது தான் புரிந்தது. அவள் பேசவில்லை என்றாலும் தான் சென்று சமாதானாம் செய்திருக்க வேண்டும் என காலம் கடந்து நியானோதயம் வந்தது. மேலும் அவள் காதலை சொன்ன பிறகு அவள் தனக்கு தான் என்று ஆனா பின் அலட்சியம் வந்துவிட்டதோ என சுய அலசலில் ஈடுபட்டான்.

மணியைப் பார்க்க அது நள்ளிரவை காட்ட... காலையில் நேரில் சென்று அவளை எவ்வாறு சமாதானம் செய்யலாம் என சில பல திட்டங்களை வகுத்த பின் தூங்கிவிட்டான்.

இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையில் காரணமாக காலை மூடுபனியுடன் காணப்பட்டது. இரவு பெய்த மழையின் மிச்சமாக புல்லின் நுனியில் விழும் மழை துளியின் காட்சி காவியமாக இருந்தது. சாரா எழும் போதே மண்வாசனையை நுகர்ந்த வாறே அந்த நாளை ஆரம்பித்தாள். காலையில் அலாரம் அடிக்கும் என எதிர்பார்க்க அவளே ஆச்சரியப்படும் விதமாக ஆதி போன் செய்தான். போன் அட்டென்ட் செய்யும் முன் மனதில் அவனுக்கு நன்றாக அர்ச்சனை செய்த பின் தான் எடுத்தாள்.

"ஹலோ யாரு?" என சாரா வேணும் என்றே ஆரம்பிக்க..

ஆதி குழம்பி போயிட்டு காதில் இருந்த போனை எடுத்த நம்பர் சரிதானா என்று பார்க்க...அது சாரா நம்பர் தான் என்று காட்டியது. அவள் கோவமாக அப்படி கேட்கிறாள் என தாமதமாக புரிய

"சாரி டி. அன்னைக்கு இருந்த கோவத்துல தான்..."

"என்ன டா நினைச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் . என்னை பார்த்த எப்படி தெரியுது. நீங்க ரெண்டு பெரும் அடிச்சிக்கோங்க டா என்னை ஏன் உங்க ரெண்டு பேரு நடுவுல இழுக்கீங்க?" என கீச் குரலில் கத்த

"சரி டி சரி டி தப்பு தான். நீ தான் பெரிய மனுஷி ஆச்சே மன்னிச்சி விட்டுடு. வர்றியா வெளிய போயிட்டு வரலாம்..." என அவள் செய்ய வேண்டியதை அவனே சொன்னான்.

காதலில் அவன் தான் சில பல சாதனை செய்து மன்னிப்பை வாங்க வேண்டும் என அறியாமல் பேசினான். இவன் கெஞ்ச அவள் மிஞ்ச... அந்த உணர்வே தனி அழகு என புரியாமல் போனது. அப்படி செய்ய அவனுக்கு அது இயல்பாக அவளிடம் வரவில்லையோ என்னவோ!

"என்ன டா திடீருனு?"... அதற்கு மேல் அவளும் அந்த விஷயம் பற்றி பேசவில்லை. அவர்கள் இருவரையும் பேசிக்கொள்ளும் படி அறிவுரையும் சொல்லவில்லை... இது தான் சாரா. அதற்காகவோ என்னவோ இவளை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

"சும்மா தான் டி. அப்புறம் அர்ஜூனுக்கும் சொல்லலாம்னு இருக்கேன்"

சாரா மனதில் அப்போது தான் நிம்மதியே வந்தது. அவன் முதலில் கேட்டதும் அவளுக்கு அர்ஜுன் நினைவு தான்... எங்கே நாம் தனியாக போகலாம் என்று சொல்லிவிடுவானோ என லேசான கலக்கம் தோன்றியது.

"சூப்பர் டா. நாமளும் வெளிய போய் ரொம்ப நாள் ஆச்சு. நான் ரெடி ஆகுறேன்" என வைத்துவிட்டாள்.

ஆதி அர்ஜுனுக்கு போன் செய்ய இரண்டொரு ரிங்கில் எடுத்தான். தூங்கிக்கொண்டு இருந்தான் போல் குரலிலே தெரிந்தது.. ஆதி எப்படி ஆரம்பிப்பது என எதுவும் பேசாமல் இருந்தான்.

"ஹலோ ஹலோ " என அர்ஜுன் அழைப்புக்கு எந்த ஒரு பதிலும் இல்லை.

அர்ஜுன் அந்த பக்கம் யாரும் பேசாமல் இருப்பதால் கண்களை திறந்து போனில் யாரு என்று பார்க்க ஆதியின் பெயர் மின்னியது. தூக்கத்தில் எழுப்பிவிட்டுவிட்டான் என்ற கோவத்தில் ஒரு நல்ல வார்த்தை போட்டு அவனை கூப்பிட

ஆதிக்கு அப்போது தான் மனமே லேசானது.

"டேய் மச்சி. தூங்கிட்டியா?" என ஆதி பேச

அர்ஜுனுக்கு இன்னும் காண்டு ஏறியது மீண்டும் வேறு ஒரு நல்ல வார்த்தை அவன் வாயில் இருந்து வர

"போதும் டா. காலையில நல்லா வாழ்த்துர. சந்தோசமா இருக்கு மச்சி. வர்றியா வெளிய போயிட்டு வரலாம்? "

இவ்வளவு தான் ஆண்களின் சண்டை. மன்னிப்பை அர்ஜுனும் எதிர்பார்க்கவில்லை, நண்பனின் ஆதியும் மன்னிப்பை கூறவில்லை. புரிதலோடு சண்டையை முடித்துக்கொண்டனர்.

"சரி டா வர்ரேன்"

சாராவும் வருகிறாள் என்று தெரிந்தால் வருகிறேன் என்று சொல்லிருக்கமாட்டானோ??!!

சூரியன் இன்னும் மேகத்துக்குள்ளே தான் இருந்தது. வெயிலும் இல்லாமல் மழையும் இல்லாத மிதமான வானிலை.

ஆதி காரை எடுத்துக்கொண்டு அர்ஜுனை பிக்கப் செய்த பின் சாரா ஹாஸ்டல் இருக்கும் பாதைக்கு வண்டியை செலுத்த

"எங்க டா போறோம்?" என அர்ஜுன் சந்தேகமாக வினவ

"சாரா ரெடியா இருப்பா. அவளையும் கூப்பிட்டு இங்க இருக்குற மலையில வியூ பாயிண்ட் இருக்குல்ல அங்க போறோம். போற வழியில அப்படியே சாப்டுடலாம்" என ஆதி அடுக்கிக்கொண்டே போக

அர்ஜுன் அவன் ஏதோ உணவகம் தான் சொல்கிறான் அதுவும் இவர்கள் இருவரும் மட்டுமே என்று நினைத்திருக்க... சாராவும் உடன் வருகிறாளா? இல்லை இல்லை இவன் தான் காதலர்கள் உடன் செல்கிறான் என்ற நினைக்கவே கசப்பாக இருந்தது.

"டேய் அப்போ நீங்க ரெண்டு பேரு மட்டும் போயிட்டு வாங்க டா. இடையில நான் எதுக்கு. நீ இப்பவே கார் ஸ்டாப் பண்ணு நான் இறங்கிக்கிறேன்"

"ஏன் டா எங்க கூட வர்றதுல என்ன ஆகிட போகுது" என கார் ஒட்டிய படியே ஆதி வினவினான்.

ஆதி சொன்ன வாங்கியத்திலேயே 'நாங்க' என்று அவனையும் சாராவையும் சேர்த்து குறிப்பிட.. அந்த இடத்தில்
கண்டிப்பாக தன்னால் இருக்க முடியாது என மனம் அடித்துக்கொள்ள... முழுவதுமாக சொல்லவும் முடியாமல் திணறி போய் நின்றான் அர்ஜுன்.

"அதுக்கு இல்ல டா..."

"எதுவும் சொல்லாத. எதுவா இருந்தாலும் சாரா கிட்ட பேசிக்கோ" என ஆதி முடித்துவிட்டான்.

அர்ஜுனுக்கு தான் முள்ளின் மேல் அமர்ந்து இருப்பது போல் ஆனது.

சாரா தயாராக நின்றிருந்தாள். குளிரின் காரணமாக கன்னங்களும், மூக்கின் நுனியும் சிவந்து போய் இருந்தது. அவளின் ஆர்ப்பாட்டம் இல்லாத அழகில் மயங்கித்தான் போனான் அர்ஜுன். சிவத்த மூக்கின் நுனியை கிள்ளி இன்னும் சிவப்பாக்க கைகள் பரபரத்தது. இந்த உணர்வு எல்லாம் தவறு என்று தெரிந்தாலும் சிந்தனைகளுக்கு அணை போட முடியவில்லை. அதனாலேயே இந்த பயணத்தை தவிர்க்க நினைத்தான் அர்ஜுன்.

காரின் கண்ணாடி ஜன்னலை மட்டுமே இறக்கிய ஆதி "ஹாய் சாரா. அர்ஜுன் ஏதோ சொல்றான் என்னனு கேளு" என எடுத்ததும் ஆரம்பித்துவிட

"சொல்லு அர்ஜுன்"

"அது வந்து...நீங்க போயிட்டு வாங்க. நம்ம இன்னொரு நாள் சேர்ந்து போகலாம்"

"ஏன் அர்ஜுன் எப்போதும் மூணு பேரும் தான சாப்பிட போவோம் இப்போ என்ன புதுசா" அவளுக்கு நிஜமாலுமே புரியவே இல்லை.

"இல்ல சாரா. வியூ பாயிண்ட் எல்லாமே போறீங்களாமே"

சாரா அப்படியா என்பது போல் ஆதியை பார்க்க.. அவன் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினான். இவர்கள் கண் பாஷை அர்ஜுன் கண்களுக்கு தெரியத்தான் செய்தது. இப்போது அர்ஜுன் எதனால் வர மாட்டேன் என்று சொல்கிறான் என்பது புரிந்தது. ஆதியின் மேல் சிறு ஏமாற்றமும் தோன்றியது.

அர்ஜுனை வந்த வழியில் இறக்கிவிடுவது அநாகரீகமாக இருக்கும் என்பதால் "அதுனால என்ன அர்ஜுன்... நம்ம போறோம் அவ்வளவு தான்" என சொன்ன படியே பின்னிருக்கையில் ஏறிக்கொண்டாள். மேலும் ஒருவாரம் கழித்து பார்த்த ஆதி அவளை பற்றி எதுவும் சொல்லுவான் இல்லை அழகாக கிளம்பி வந்திருப்பதுக்கு பாராட்டுவான் என எதிர்பார்க்க அவன் அவளை முழுவதாக பார்த்த மாதிரி தெரியவில்லை.

ஆனால் சைட் மிரர் வழியே சாராவின் முகத்தை தான் பார்த்துக்கொண்டு இருந்தான் அர்ஜுன். கஷ்டப்பட்டு கண்களை ரோடு பக்கம் திருப்பினான். மனதில் எல்லாம் சோகம் மட்டுமே. புதுசாக காதலிப்பவர்கள் மலை பிரதேசம் செல்லும் போது தோன்றும் உணர்வு எல்லாம் தெரியாத அளவுக்கு அவன் ஒன்னும் குழந்தை இல்லையே. அங்கே வைத்து அவர்களின் நெருக்கத்தை தன்னால் பார்க்க முடியுமா?! என நினைக்கும் போதே மூச்சு வாங்கியது. வேகமாக துடித்த இதயத்தில் கையை வைத்து சமன் படுத்த முயன்றான்.
 
Top