logo

அத்தியாயம் 6

Mars

Administrator
சாரா அந்த உடைக்கு ஏற்ப வெள்ளியில் நகை வாங்கினாள். கொஞ்சம் விலை உயர்வாக இருந்தாலும், ஆசை கொண்ட மனது வாங்கச்சொன்னது. அவளுக்கு என்று அவள் வாங்கிய முதல் விலை உயர்ந்த பொருள். சந்தோசமாக இருந்தது.

சேர்த்து மட்டுமே வைத்துக்கொண்டு இருப்பதில் இருக்கும் ஆனந்தம் விட…அவ்வப்போது பிடித்ததை வாங்கிக்கொண்டு தன்னை தானே சந்தோச படுத்திக்கொள்ளும் போது தான் மேலும் சம்பாதிக்க ஒரு வேகம் எழுவதை உணர்ந்தாள் சாரா.

அந்த ஆண்டின் கடைசி நாள் அன்று இரவு பார்ட்டிக்கு செல்ல தயாராகிக்கொண்டு இருந்தாள் சாரா. அப்போது ஃபோனில் மெசேஜ் வந்ததுக்கான ஒலி கேட்க… எடுத்துப் பார்த்தால் அர்ஜுன் தான் மெசேஜ் செய்து இருந்தான்.

கார் டிரைவர் வந்து பிக்கப் செய்வார் எனவும் டிரைவர் ஃபோன் நம்பர், கார் நம்பர் என எல்லாம் அனுப்பி இருந்தான். அதற்கு பதில் அனுப்பிவிட்டு தன்னை தானே ஒரு முறை கண்ணாடியில் பார்த்தாள்.

கண்களை நம்பவே முடியவில்லை.. அவள் தானா அது என்று ஆச்சரியமாக இருந்தது. கருப்பு கலரில் வெள்ளைக் கற்கள் ஒளி பட்டதும் மின்னின. அழகான பிரோசன் எல்சா (Frozen Elsa) ஹேர் ஸ்டைல் செய்தது அவளுக்கு எடுப்பாக இருந்தது. மேக் அப் இல்லாமலே முகம் பளிச்சென்று இருந்தது.

கார் ஹாரன் ஒலி கேட்க… கையில் ஃபோன் மட்டும் எடுத்துக்கொண்டு கதவை பூட்டி விட்டு… சாவியை ஃபோன் கேஸில் வைத்தாள். பின் வண்டி நம்பர் இதுதானா என சரிபார்த்து விட்டு புறப்பட்டாள்.

போகும் வழியில் எல்லாம் ஆதி அர்ஜுன் தன்னை பார்த்து கிண்டல் செய்வார்களோ என தோன்றியது. ஏனெனில் இதுவரைக்கும் அவர்கள் இவளை புடவையில் பார்த்தது இல்லை. இதுவே முதல் முறை என நகத்தை கடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்.

முதல் முதலில் இப்படி நகை போட்டு இருக்க… அது அதிகப்படியோ என ஃபோன் கேமராவில் எடுத்து பல முறை பார்த்தாள். அவ்வபோது அதனை தொட்டும் பார்த்துக்கொண்டாள் இருக்கிறாதா என்று. அவளைப் பொறுத்த வரை அவளிடம் இருக்கும் விலையுயர்ந்த பொருள்.

வெளியே மக்கள் தீபாவளிக்கு என வாங்கி வைத்த வெடியை கொஞ்சம் எடுத்து வைத்து இருப்பார்கள் போல்… நாளைக்கு புது வருடம் பிறக்க போகிறது என்பதால் வெடித்துக்கொண்டு இருந்தனர். இரவில் வானவேடிக்கை பார்த்தவாறு பார்ட்டி நடக்கும் இடமான ஹோட்டல் வந்து இறங்கினாள். இறங்கும் முன் மறக்காமல் டிரைவருக்கு நன்றி மற்றும் புதிய வருட வாழ்த்துக்களும் சொல்லிவிட்டு தான் சென்றாள்.

இயற்க்கை அழகு சூழ, ஆங்காங்கே விளக்குகள் ஒளிர, கிறிஸ்துமஸ் அப்போதுதான் முடிந்தது என்பதால் அப்போ போட்டு இருந்த ஸ்டார் வடிவ விளக்குகள் அப்படியே இருக்க…. இரவின் குளிரில் பார்க்க வசீகரமாக இருந்தது.

பார்ட்டி ஹால் இருந்தாலும், வெட்டவெளியிலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கொஞ்சம் தயக்கத்துடன் நடைபாதையில் நடந்து பார்ட்டி ஹால் வாயிலைநோக்கி சென்றாள். பின்னாடி இருந்த கருமையான வானம் பட்டாசின் வெளிச்சத்தில் ஜொலிக்க… அவள் நடந்து வரும் போது அவளுக்கென போடப்பட்டது போல் வானவேடிக்கை வெடித்தது.

அவளை தூரத்தில் இருந்த பார்த்த கண்கள் தான் பார்ப்பது உண்மை தான என வியப்பாக பார்த்தன. தோட்டத்தில் இருந்தது அர்ஜுன்… எனவே சாராவின் தரிசனம் அவனுக்கு தான் முதலில் கிடைத்தது. உறைந்த படி நின்றுவிட்டான்.

அவனின் டிரைவர் தாங்கள் வந்துவிட்டதாக சொல்லிவிட சாராவை ரிசிவ் செய்ய தான் வெளியே வந்தான். இதுவரைக்கும் பார்த்த பார்வை இன்று வேறு ஒரு கோணத்தில் அவளை பார்த்தது. என்றும் நட்பை தாண்டி வேறு ஒரு உணர்வு வந்தால் அதனை வளர விட மாட்டான். ஆனால் இன்றோ அவனுக்கு அந்த உணர்வு பிடித்தது. தன்னை நினைத்தே சிரித்துக்கொண்டான். சாரா கண்கள் இவர்களையே தேட அதனை புரிந்துகொண்டு அவளை நோக்கி நடந்தான்.

அர்ஜுன் சாராவை பார்த்த இரண்டொரு நொடிகளில் ஆதி அவளை பார்த்துவிட்டான். அவன் பார்ட்டி ஹால் உள்ளே இருந்தான். எனவே நடைபாதை நேர் எதிரே இருப்பதால் பார்க்க நேர்ந்தது. கண்ணின்மணிகள் அவளை விட்டு நகர்வேனா என்றது. வேக எட்டுக்கள் வைத்து அவளை நோக்கி நடந்தான்.

இவர்கள் இருவரில் சாரா முதலில் பார்த்தது ஆதியை தான். அவன் தான் நேர் எதிரில் இருந்தான். அர்ஜுன் தோட்டம் பக்கத்ததில் வந்ததால் அவள் கவனிக்கவில்லை. ஆதி சாராவை நெருங்கிய நொடி அவளை தோளோடு அணைத்து விடுவித்தான்.

இதனை தூரத்தில் இருந்து பார்த்த அர்ஜுன் நடை ஒரு நொடி நின்று அவர்கள் இருந்த நிலையை பார்த்தான். என்றும் இல்லாமல் இன்று மனம் ஏதோ செய்ய ‘ச்ச என்ன இது.. ஆதி என்னைமாதிரி அவளுக்கு ஒரு நல்ல ப்ரெண்ட். இப்படி எல்லாம் நினைக்க கூடாது‘ என தனக்கு தானே சொல்லிக்கொண்டு அவர்களை நோக்கி வந்தான்.

“அடியே சாரா, நீ தானா இது? என்னால நம்பவே முடியல. சூப்பர் ஆ இருக்க” என ஆதி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அர்ஜுன் அவர்களுடன் இணைந்து விட்டான்.

“எங்க சாரா பெரிய பொண்ணா தெரியுரா. தேவதை மாதிரி இருக்க சாரா மா. “ என அர்ஜுன் சொல்ல…

இருவரின் பாராட்டிலும் அவளுக்கு புதிதாக வெட்கம் எட்டிப்பார்க்க எதுவும் சொல்லாமல் சிரித்த வாரு தலையை குனிந்து கொண்டாள்.

“ என்ன சாரா நீ இப்படியே தலைய தொங்க பொட்டா நாங்க எப்படி தெரிவோம்?! நாங்க எப்படி இருக்கோம்னு சொல்லவே இல்ல” என அர்ஜுன் அவள் நாடியை தொட்டு தலையை நிமிர்த்தி கேட்ட…

ஆதி வேணும் என்றே அவன் கோட் பாக்கெட்டில் உள்ள கூலர்ஸ் எடுத்து போட்டு ஸ்டைல் செய்து காட்ட… அவனின் முயற்சியை பார்த்து மற்ற இருவரும் சிரித்தனர்.

இருவரையும் சாரா மேல இருந்து கீழே வரை பார்த்து “ உங்க ரெண்டு பேருக்கும் என்ன? ஹீரோ மாதிரி இருக்கீங்க. அப்படியே இந்த பார்ட்டிக்கு வந்து இருக்கிற பொண்ணு யாருன்னா பார்த்து பேசி முடிச்சிடுவோமா?” என விளையாட்டாக சொன்னாலும்

“ அதுக்கு என்ன சாரா. எனக்கு ஓகே தான். பொண்ணு மட்டும் ரெடியா இருந்தா போதும்” என ஆதி சிரித்துக்கொண்டு சொன்னான்.

அர்ஜுன் எதுவும் சொல்லாமல் அவளையே ஆழந்த பார்வை பார்த்தான். ‘அதான் நீ இருக்கியே. நம்ம கல்யாணம் பண்ணிப்போம்‘ என மனதில் சொல்லிப்பார்த்து விட்டு…. வாய் விட்டு சொல்ல வரும் போதும் தூரத்தில் இருந்து ஆதி என்றும் அர்ஜுன் என்றும் குரல் வந்தது.

மூவரின் கவனமும் அங்கு செல்ல அந்த நபர் கையை அசைத்து வர சொன்னார். அதனை புரிந்து கொண்டு பார்ட்டி ஹால் நோக்கி நடந்தனர்.

“அப்புறம் சாரா, டிரைவர் அண்ணா கரெக்ட் டைம்க்கு பிக்கப் பண்ண வந்துட்டாங்களா?” என அர்ஜுன் கேட்ட

“ ஆமா அர்ஜுன். வந்ததும் ஹாரன் சவுண்ட் கேட்டது நானும் அப்போ ரெடியா தான் இருந்தேன். அவங்க கூப்பிட்டு வந்து விட்டுட்டாங்க.” என ஏதேதோ பேசிக்கொண்டு உள்ளே வந்தனர்.

அழகாக என்று சொல்வதை விட ஆடம்பரமாக அலங்கரிக்க பட்டு இருந்தது. மேடை ஒன்று நிகழ்ச்சிக்காக போடப் பட்டிருந்தது. கீழே தனியாக டேபிள் போடப்பட்டு, ஒரு டேபிளுக்கு நான்கு சேர் என இருந்தது. குளிர் பானம் பரிமாற வேலை செய்பவர்கள் நடந்துக் கொண்டு இருந்தனர்.

சுற்றி முற்றி பார்க்கும் போது எல்லாம் வித்தியாசமாக பட்டது. இது போன்ற இடங்களுக்கு வருவது இதுவே முதல் முறை. இவள் வயது பெண்களும் இருக்கத்தான் செய்தனர், ஆனால் ஆடைகளில் கண்ணியம் இல்லை அதனை அவர்கள் பெற்றவர்களும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அந்த பெண்களை அர்ஜுன் மற்றும் ஆதி பார்க்கிறார்களா என சாரா ஓரக்கண்ணால் பார்க்க… ஏதோ கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் தான் இருந்தனர் இருவரும். அவர்கள் சிங்கிள் ஆ சுற்றுவதற்கு காரணம் புரிந்தது.

நோட்டம் விடும் போது தான் கல்பனா அவள் கண்ணில் பட்டாள். முறைத்த படி நின்றுக்கொண்டு இருந்தாள். சாரா பார்வை சென்ற திசையில் மற்ற இருவரும் பார்க்க அவளின் முறைப்பு இன்னும் ஜாஸ்தி ஆகத்தான் செய்தது. இதனை கவனித்த அர்ஜுன்

“ஆதி நீ சாரா கூட இருடா. நான் இப்போ வந்துறேன்” பின் சாராவிடம் திரும்பி “ ட்ரிங்க்ஸ் ஏதாவது குடி சாரா. ஒரு 2 மினிட்ஸ்” என சொல்லிவிட்டு கல்பனா நோக்கி சென்றான்.

“எதுக்கு அவளையே முறச்சு பாக்குற. உன்னால இன்னைக்கு எந்த ஒரு பிரச்சனையும் நடக்க கூடாது புரியுதா?! “ என சொல்லிக்கிட்டு இருக்கும் போதே வரதராஜன் வந்தார்.

“ரெண்டு பேரும் இங்க நின்னு என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க. போய் உட்காரலாம்ல” என பொதுவாக சொல்லிவிட்டு “ என்ன அர்ஜுன். ஏன் டென்ஷன் ஆ இருக்குற மாதிரி தெரியுது. எதுவும் பிரச்சனையா?”

“பிரச்சனை எதுவும் வர கூடாதுனு தான் கல்பனா கிட்ட பேசிட்டு இருக்கேன். சாரா வந்து இருக்க பா. ஆனால் இவா அவளையே முறச்சு பார்த்துட்டே இருக்கா. அன்னைக்கு மாதிரி எதுவும் பிரச்சனை ஆகிட கூடாது அதான் முதல்லயே கல்பனா கிட்ட சொல்லிட்டு இருக்கேன்” என சாரா இருக்கும் திசையை பார்த்து சொன்னான்.

“ முன்னாடி என்ன பிரச்சினை ஆச்சு?” என கல்பனா மற்றும் அர்ஜுனை கூர்ந்து பார்த்த படி கேட்ட…

கல்பனா நடுங்க ஆரம்பித்து விட்டாள். அன்று அவள் நண்பர்களுடன் போனது அர்ஜுன் அடித்தது எதுவும் அப்பாவுக்கு தெரியாது. தெரிந்தால் கண்டிப்பாக அன்று கிடைத்த அடியை விட பல மடங்கு கிடைக்கும். அர்ஜுன் ஏதோ ஒரு நியாபகத்தில் உளறி விட்டான். சொல்லணும் என்று சொல்லவில்லை வாய் தவறி வந்துவிட்டது.

உடனே சமாலிப்பாக “அது ஒன்னும் இல்ல ப்பா. கல்பனாக்கு சாராவ பிடிக்காது. நான் அன்னைக்கு ஃபோன் பேசிட்டு இருந்த அப்போ இவா பின்னாடி வந்து கத்தி சாரா மனச காயப்படுத்திட்டா அதான் அப்படி சொன்னேன். பா இங்கையே இருங்க சாராவ இன்ட்ரோ (intro) தர்றேன்” என அர்ஜுன் நகர்ந்து விட்டான்.

அப்போது தான் கல்பனாவுக்கு போன உயிர் திரும்ப வந்தது.

அர்ஜுன் கல்பனாவை எச்சரிக்கை சென்ற நேரம் ஆதி, சாராவை அவன் அப்பா ரவீந்திரனுக்கு அறிமுகம் செய்ய அழைத்து போனான். அவர் பெரியதாக எதையும் கண்டுகொண்டதைப் போல் தெரியவில்லை. “ஹவ் ஃபன், ஹேப்பி நியூ இயர்” என்றதோடு முடித்துக்கொண்டார்.

ஆதியை யாரோ கூப்பிட நிமிடத்தில் வந்துவிடுவதாக சொல்லிவிட்டு சென்றான். அப்போது ரவீந்தர் மேனேஜர் சாராவை அடையாளம் கண்டுவிட்டு

“மா நீ செல்வராஜ் பொண்ணு தான?” என கேட்ட.

“ஆமா, நீங்க?” என குழப்பமாக சாரா எதிர்கேள்வி கேட்டாள்.

“நான் தான் மா ரவீந்தர் சார் மேனேஜர். உங்க அப்பா…சார் ஓட கெஸ்ட் ஹவுஸ் ல தான் மெயின்டெய்ன்ஸ் வேலை பார்த்தாங்க. அப்போது தான் பழக்கம்”

“ஓ அப்படிங்களா. சரி சார்” என சொன்னாலும் மனதில் ‘அப்பா ஆதியோட அப்பாகிட்ட தான் கொஞ்ச நாள் வேலை பார்த்தாங்களா. இது ஏன் அப்பா சொல்லல? ஒருவேளை அவங்களுக்கு ஆதி தான் ரவீந்தர் சார் பையன்னு தெரியாம இருந்திருக்குமோ. அப்போ ஆதிக்கு இந்த விஷயம் தெரியுமா’ என யோசித்தாள்.

“அதுவும் இல்லாமல் உனக்கு ஸ்காலர்ஷிப் குடுக்குறதும் ஐய்யா கம்பனில இருந்து தான் மா…. நல்லா படி. படிப்ப முடிச்சதும் பெரிய ஆளா வரணும் சரியா” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அப்போ ஆதி அப்பா தான் என்ன படிக்க வைக்காங்களா?! நான் இந்த இடத்தில இருக்க தகுதியான பொண்ணு தானா என தாழ்வான மனப்பான்மை தோன்றியது. அவள் போட்டு இருந்த உடை நகை என எல்லாமே பாரமாக தோன்றியது. அந்த இடத்தில் அவள் பொருந்தாமல் இருப்பது போல் ஒரு பிரம்மை. இது எல்லாம் இரண்டு நிமிடங்களில் நடந்து இருக்க… ஆதி வந்ததும் அவர்கள் சென்று நாற்காலியில் அமர்ந்தனர்.

அப்போது சரியாக அர்ஜுனும் வர சாராவை அழைத்து சென்று வரதராஜன் இருக்கும் இடத்துக்கு கூட்டி சென்றான்.

“ப்பா, இவா தான் ப்பா எங்க ப்ரெண்ட். பேரு சரஸ்வதி ஆனா சாரானு கூப்பிடுவோம்” என அர்ஜுன் சாராவை காட்டி சொன்னான்.

சாரா மரியாதை நிமிர்த்தமாக வணக்கம் வைத்தாள். அருகில் இருந்த கல்பனாவை பார்த்து லேசாக புன்னகை செய்தாள்.

“ம்ம்… பார்ட்டில கலந்துகிட்டதுக்கு சந்தோசம். நல்லா என்ஜாய் பண்ணுங்க” என்றார் அவரும் சிரித்தவாறு.

இரண்டொரு வார்த்தை பேசினாலும் அவர் சாராவை கவனித்தபடி தான் இருந்தார். முகத்தில் இருந்த வெகுளி தனம், கண்ணியமான உடை, அழகாக புன்னகை, அளவான பேச்சு என அவள் மேல் தனி மதிப்பு வரத்தான் செய்தது. அதுவும் கல்பனாவுக்கு இவளை பிடிக்காது என்று அவளுக்கு தெரிந்த போதிலும் பொதுஇடம் என்றும் நன்னாள் என்றும் லேசாக அவளை பார்த்து புன்னகை செய்தது அவள் குணத்தை சொன்னது.

பின் மூவருமாக அமர்ந்து அங்கு நடப்பவற்றை வேடிக்கை பார்த்தனர். இவர்களை பார்த்து வயிறு எறிந்தது ரூபினி தான். அவளுக்கு எதுவெல்லாம் நடக்கணும் என்று ஆசை பட்டாளோ அது எல்லாம் சாராவுக்கு நடந்து கொண்டு இருந்தது. கல்பனாவை அர்ஜுன் எச்சரிக்கை செய்தது தங்கச்சி என்ற முறையில். ஆனால் ரூபினி பொறாமை பார்வையை ஆதி மற்றும் அர்ஜுன் கவனித்தாலும் எதுவும் சொல்லவில்லை. ‘அவளிடம் போய் மனுஷன் பேசுவானா’ என எண்ணினார்கள் போலும்.

அவ்வபோது அர்ஜுன் சாராவை யாரும் பார்க்காத வாரு ரசித்துக்கொண்டு இருந்தான். ஆதி எப்போதும் போல் பழகினாலும் அவளை ஓரக்கண்ணால் பார்ப்பதை நிறுத்தவில்லை.


ஸ்டேண்ட் அப் காமெடி, டான்ஸ் போன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரவு மணி பன்னிரெண்டை நெருங்க எல்லோரும் கார்டன் சென்று பாப்பரஸ் (Poppers) வெடித்து, மதுபானம் பாட்டிலில் நன்றாக குலுக்கி தெறிக்க விட்டு புத்தாண்டை வரவேர்த்தனர். தற்காலிகமாக அந்த மேனேஜர் சொன்னது மறந்து போனது.

சாரா சந்தோச மிகுதியில் இருந்தாள். இப்படி ஒரு இரவை என்று பார்த்தது இல்லை. 12 மணி ஆனதால் வானவேடிக்கை இடை விடாமல் வெடித்தது அதையே முதல் முறை பார்ப்பது போல் கண்களை விரித்து வானத்தை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தாள். இதனை அர்ஜுன் மற்றும் ஆதி கண்ணெடுக்காமல் பார்த்தனர். அவளின் புன்னகையில் இந்த வருடத்தை ஆரம்பித்தனர்.


அனைவருக்கும் கேக் எல்லாம் கொடுக்க பட்டது. அவரவர் இடத்துக்கு வந்து அதனை சாப்பிட்டனர். கேளிக்கை எல்லாம் முடிந்தது என்பதால் வந்திருப்பவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தனர். சாரா, அர்ஜுன் , ஆதி மூவரும் செல்ஃபி எடுத்தனர். ரூபினி வழிய சென்று வரதராஜனிடமும், ரவீந்திரனிடமும் அவள் தந்தை பேசும் போது பேசினாள். அது பார்ப்பதற்கு செயற்கையாக இருப்பது பச்சையாக தெரிந்தது.

இடையில் அர்ஜுன் சென்று அவன் டிரைவரிடம் இருந்து கார் சாவியை வாங்கி வைத்துக்கொண்டான். அவன் சென்று சாராவை வீட்டில் விட எண்ணினான். அவனுக்கே அவன் செயல் வியப்பாக இருந்தது.

மற்றவர்கள் எல்லாம் பிசினஸ் சம்மந்தமாக பேச ஆரம்பித்துவிட கூட்டத்தில் இருந்து நேக்காக மூவரும் கழண்டுவிட்டனர். ஒருவழியாக கார் பார்க்கிங் வந்துவிட

“ ரொம்ப தேங்க்ஸ். நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருந்தேன் அது உங்க ரெண்டு பேராலையும் தான். இந்த நாள் நான் மறக்கவே மாட்டேன்” என உணர்ச்சி மிகுதியில் சொன்னாள் சாரா.

அவள் சொல்வதையே சிரிப்போடு இருவரும் கேட்டனர்.

பின் எதுவோ நினைத்து அவள் முகம் மாற

“என்ன ஆச்சு சாரா, நல்லா தான பேசிட்டு இருந்த?” என அர்ஜுன் கேட்க

கொஞ்சம் தயக்கமாக ஆதியை பார்த்து “ஆதி அப்பா தான் நான் படிக்க ஸ்பென்சர் பண்றாங்க. எங்க அப்பா அவங்க கெஸ்ட் ஹவுஸ் மெயின்டெய்னன்ஸ் பண்ணிருக்காங்க அப்போதுல இருந்து பழக்கம் போல. அந்த மேனேஜர் தான் சொன்னாரு, அது உங்களுக்கு தெரியுமா?”

ஆதி மற்றும் அர்ஜுன் ஒருவரை ஒருவரை அதிர்ச்சியாக பார்த்தனர்.

“என்ன எதுவும் பேச மாட்டிக்கீங்க. வேலைகாரங்க பொண்ணா உங்க அப்பா அவர் பையன் படிக்கிற காலேஜ் ல சேர்த்து விட்டுறுக்காங்க. நான் நினைச்சது போல பணக்காரங்க எல்லாரும் மோசமானவங்க இல்லை. இது உங்க அப்பாக்கு சொல்ல வேண்டியது தான் இருந்தாலும் உன்கிட்ட சொல்றேன் ஆதி ரொம்ப தேங்க்ஸ்” என மனமார சொல்ல…

ஆதி வந்து தோளோடு அணைத்துக்கொண்டான். இதனை பார்வையாளராக மட்டுமே அர்ஜுன் நின்று பார்த்துக்கொண்டு இருந்தான்.


“ஏய் லூசு, என்ன பேசுற? தேங்க்ஸ் சொல்றாளம் தேங்க்ஸ்… அத நீயே வெச்சிக்கோ. வீக் எண்ட உன் வீட்டுக்கு வர்ற அப்போ சமச்சு கொடு. அப்புறம் நாங்க மார்க் கம்மியா வாங்குற அப்போ நைட்டு காலேஜ் உள்ள போய் பாஸ் மார்க் போட எங்க கூட வா. அதுவே போதும் எங்களுக்கு. என்ன டா அர்ஜுன் சரி தான? என கடைசி கேள்வியை மட்டும் அர்ஜுன் பார்த்து கேட்டான். ஆதி அவனையும் பேச்சில் இழுக்கவே அவ்வாறு கேட்டான்.

“அப்போ உங்க ரெண்டு பேருக்கும் இந்த விஷயம் தெரியும். ஆனால் என்கிட்ட மட்டும் சொல்லல” என முறைப்போடு கேட்க…

“அப்படி இல்ல டி, நாங்க சொன்ன… நீ லூசு மாதிரி நீங்க பெரிய இடம் நாங்க சின்ன இடம்னு வலவலனு பேசுவ. அதான் சொல்லல” என ஆதி விளையாட்டாக சொன்னான்…

அர்ஜுன் சாரா தலையை கோதிவிட்டு “ ஆமா சாரா. நீ எங்க கூட இருக்குறதுல தான் எங்களுக்கு பெருமையே. எங்களுக்கு நீ தான் என்னைக்கும் மிக பெரிய சொத்து. தேங்க்ஸ் எல்லாம் சொல்லாத டி” என அவனும் சொல்ல…. அப்போது தான் சமாதானம் ஆனாள்.

சரியா அர்ஜுன் ஃபோன் அடித்தது. அவன் அப்பா தான் கூப்பிட்டு இருந்தார்.

அதனை கவனித்த ஆதி “ மச்சி நீ வேனா போ டா. உங்க அப்பா கூப்டுறாங்கல்ல. சாராவ நான் என்னோட கார்ல ட்ராப் பண்ணிடுறேன்”

“ஆமா அர்ஜுன். நாங்க பார்த்துக்கிறோம். நீ போய்ட்டு வா” என சாராவும் சொல்லிவிட… வேறு வழி இல்லாமல் அர்ஜுன் அங்கு இருந்து செல்லும் படி ஆகிவிட்டது.

ஆதி சாராவை ஒரு பக்கம் அணைத்த நிலையில் தான் இருந்தான். இதனை தூரத்தில் இருந்து திரும்ப பார்த்த அர்ஜுன் மனம் கனத்தது.. அதில் தானும் ஒருவனாக இல்லயே என்று. எப்போதும் மூவருமாகத்தான் அனைத்துக்கொள்வர். ஆனால் இன்றோ அவன் மட்டும் தனித்து நின்றான். ஆதி அப்பா உதவி செய்தது சாரா மனதில் முதலில் இருப்பது ஆதி என்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கியது. கையில் உள்ள கார் சாவியை பார்க்க… அதனை மீண்டும் எடுத்து பாக்கெட்டில் வைத்து விட்டு உள்ளே சென்றான்.

இங்கு ஆதி சாராவை அவன் காரில் அவள் வீட்டில் விட்டான். நள்ளிரவு என்பதால் நிசப்தமாக இருந்தது. காரில் இருந்து ஆதிக்கு ‘பை’ சொல்லிவிட்டு திரும்பி வீட்டை நோக்கி நடந்தாள். அவள் உள்ளே போகும் வர காரை கிளப்பாமல் காத்திருந்தான் ஆதி.

அமைதியை உடைத்தது அவனின் “சாரா” என்ற அழைப்பு.

திரும்பி பார்க்க… அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் ஆதி. என்றும் இல்லாமல் இன்று சாரா பேச்சற்று நிற்க “ அழகா இருக்க டி” என சொல்ல…. லேசாக வெட்கப்பட்டு “போடா” என செல்லமாக சொல்ல… சிரித்துவிட்டு சென்றுவிட்டான்.

துங்கும் முன் அன்றைய நாள் பற்றி தான் சிந்தித்துக்கொண்டு இருந்தனர்.

சாரா மனதில் ஆதி ஒரு முக்கிய இடத்தை பிடித்தான் அவன் அப்பா மூலம் தான் அவள் படிக்கிறாள் என்று தெரிந்தபின். அவர்கள் குடும்பத்துக்கு தான் நன்றிக்கடன் பட்டதாக எண்ணினாள். ஒரு நாள் ஏதோ ஒரு சூழ்நிலையில் அதனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அவளையும் அறியாமல் வேரூன்றியது.
மேலும் அர்ஜுன் அவளுக்காக கல்பனாவின் பிரச்சனை செய்ய கூடாது என்று சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது. அவளின் சிறு உணர்வுக்கு என்று அர்ஜுன் முக்கியத்துவம் கொடுப்பான் என அறிவாள்.

அர்ஜுன்…சாராவை முதன் முதலில் புடவையில் பார்த்ததில் இருந்து திரும்பி அவள் செல்லும் வரை நினைத்ததை மனதில் ஓட்டிப் பார்த்தான். அவளை பற்றி நினைக்கும் போதும் உதட்டில் புன்னகை அதுவாகவே தோன்றியது. ஆனால் அவனை விட்டுவிட்டு அவர்கள் இருவரும் அணைத்து நின்றது வேதனையாக இருந்தது. அவர்கள் இருவருக்கும் நெருக்கம் கூடியது போல் தோன்றியது. அவனை மற்றும் விட்டுவிட்டது எதற்சியாக கூட இருக்கலாம் என சமாதானம் செய்துக் கொண்டான்.

ஆதி எண்ணம் எல்லாம் சாராவை வீட்டில் விட்ட போது அவள் வெட்கப்பட்டது தான். அந்நேரம் மிகவும் அழகாக இருந்தாள். அவன் மனதில் அதுவே நன்றாக பதிந்து. ஒருவேளை காதல் என்று வந்தால் அவளிடம் சொல்லலாம்… இந்த உணர்வுக்கு இன்னும் சிறிது நேரம் கொடுக்க எண்ணினான்.
 
Top