logo

அத்தியாயம் 12

Mars

Administrator
காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் கரைய...

ஆதி கொஞ்சம் மாறுதலுக்காக அவன் தந்தை கம்பனிக்கு செல்ல ஆரம்பித்துவிட்டான், எங்கே கிளப் சென்றால் ஏஞ்சலாவை பார்க்க நேரிடுமோ என பயந்து தள்ளியே இருந்தான். அவனுக்கு இப்போது தனிமை அவசியமாக பட்டது. அவன் எதிர்பார்த்த மாற்றம் கம்பனியில் கிடைக்க, அங்கே செல்வது வாடிக்கை ஆகிவிட்டது. மனதளவில் ஏஞ்சலா உடன் செலவிட்ட நாட்கள் நினைவில் எழ, இதயம் தாளம் தப்பி துடித்தது. அவனுக்கு அவளை பிடிக்கும்.. கட்டிக்கொள்ளும் அவளுக்கு பிடிக்கும் ஆனால் அவளிடம் சொல்ல பயமாக இருந்தது, எங்கே மீண்டும் அதே போல் ஒரு தவறு நடந்துவிடுமோ என்று.

அர்ஜுன் அன்று வழமை போல் ஆபீஸ் வர, சாரா நடந்து வளாகத்துக்குள் நுழைவது தெரிந்தது. காரின் உள்ளே அமர்ந்த வாறு

"சாரா, சாரா... நில்லு" என சத்தமாக அழைத்தான்.

காற்றில் முடி பார்க்க குரல் வந்த திசையில் யாரு அழைத்திருப்பார்கள் என தெரிந்தே சந்தோசமாக திரும்பி பார்த்தாள். 'ஹாய்' என்பது போல் கையை அசைக்கு.. பதிலுக்கு 'குட் மோர்னிங் என சொல்வதற்கு சல்யூட்' வைத்தான் அர்ஜுன். அதில் சிரித்தவள் கையில் உள்ள கடிகாரத்தை காட்டி நேரம் ஆகிவிட்டதை சொல்ல, 'போ' என்பது போல் செய்கை செய்தான் அர்ஜுன். ஜிமிக்கி ஆட தலையை அசைத்தவள் 'பிறகு சந்திக்கலாம்' என கைகளால் செய்கை செய்துவிட்டு ஓரிரு முறை திரும்பி பார்த்தவாறே உள்ளே சென்றாள்.

அவளை சந்தித்ததில் திளைத்த புன்னகையுடன் அந்த நாளை ஆரம்பித்தான் அர்ஜுன். அவள் விட்டு சென்று புன்னகை அவன் முகத்தில் இன்னும் மீதம் இருக்க.. அவனுக்கு விஷ் செய்தவர்களுக்கு புன்னகையுடன் தலையை அசைத்து அதனை ஏற்றவாறே கேபின் சென்றான். இப்போது எல்லாம் வேலை பிடிபட ஆரம்பித்துவிட்டது. கிளைன்ட் மீட்டிங் சென்று ஆர்டர் எடுப்பது, அதனை நேரத்திற்குள் முடிப்பது என பொறுப்புடன் செய்வதால் இப்போது நிர்வாகம் கொஞ்சம் இவன் பக்கம்.

வரதராஜன் கொஞ்சம் நாளாக டென்ஷனாக இருப்பது போல் தெரிகிறது, அவராகவே வந்து சொல்லட்டும் என அமைதியாக இருந்தான். அது கம்பெனி பற்றி இல்லை என்பது அவனுக்கு நன்றாக தெரியும் ஏனெனில் இப்போது அவனுக்கு தெரியாமல் அங்கு எதுவும் நடக்காது அந்த அளவுக்கு ஒரு இடத்தை பிடித்துவிட்டான் அர்ஜுன்.

முதலாளியாக தந்தை தான் சிலதில் கையெழுத்து போட வேண்டும் என்பதால் அவரின் அறைக்கு செல்ல, அவரோ யோசனையில் இருந்தார்.

"அப்பா.." "அப்பா...." என இருமுறை அழைத்த பின்னரே கனவில் இருந்து மீண்டவர் போல் அர்ஜுனை பார்த்தார்.

"என்ன டா சொல்லு. எதுக்கு கூப்ட?"

"நான் சைன் வாங்க தான் வந்தேன், ஆனா இப்போ அதை பத்தி பேச போறது இல்லை. உங்களுக்கு என்ன ஆச்சு ப்பா? நானும் கொஞ்ச நாளா பார்த்துட்டே இருக்கேன் ஒரு மாதிரி இருக்கீங்க..." என்றான் பரிவாக.

"ஒன்னும் இல்ல டா. அந்த டாக்குமெண்ட் கொடு" என கையை நீட்ட.. அதனை பிடித்துக்கொண்ட அர்ஜுன் "உடம்புக்கு எதுவும் பண்ணுதா? நம்ம வேணா ஹாஸ்பிடல் போய்ட்டு செக் பண்ணிட்டு வரலாமா?" என்றான் தவிப்பாக.

கம்பீரமாக இருக்கும் தன் பிள்ளை தனக்கு என்ன ஆனதோ என நினைக்கும் போது உருகுவதை நினைக்கும் போது வேதனையாக இருந்தது ஏனென்றால் அவரிடம் சொல்ல அப்படி பட்ட விஷயம் தான் இருக்கிறது. அதனை அவனிடம் எவ்வாறு சொல்ல என்று தான் இத்தனை நாளாக திணறிக்கொண்டு இருக்கிறார். இதுக்கு மேலும் மறைக்க முடியாது என்பதால்

"அர்ஜுன் எனக்கு ஒன்னும் இல்ல டா. ஆனா அது வந்து.." என தயங்க

அவரின் கையை இறுக்கமாக பிடித்தவன் "அப்பா எதுவா இருந்தாலும் சொல்லுங்க. அதான் நான் இருக்கேன்ல" என்றான் தீர்க்கமாக.

கொஞ்ச நேரத்துக்கு உருகியது இவன் தானா என்பது போல் இருந்தது இப்போது இவனின் உடல் மொழி மற்றும் குரல்.

"உனக்கு திவாஹர் தெரியும்ல? என்னோட பிராண்ட் அண்ட் ரூபினி அப்பா"

"ஆமா, அதுக்கு என்ன இப்போ? நேரடியா விஷயத்துக்கு வாங்க" என வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக பேசினான். அப்படி பட்ட பேச்சு ரூபினி என்றதும் தானாக வந்தது.

"ரூபினிய உனக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்க கேட்டான் டா.." என ஒருவழியாக சொல்லி முடித்துவிட்டு அவனை பார்க்க.. அவனோ 'அதற்கு என்ன பதில் சொன்னீங்க' என வார்த்தையாக கேட்காமல் பார்வையால் வினாவ...

அவசரமாக "நான் உனக்கு இதுல இண்டெர்ஸ்ட் இல்லனு சொல்லிட்டேன் டா. ஆனா ரூபினிக்காக ஒரு முறை யோசிச்சு பார்க்க சொன்னான். அப்புறம்.." என சொல்ல முடியாமல் கையை பிசைந்தார்.

தந்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என தெரிந்த பின் தான் மனமே சாந்தமானது. ரூபினியை அவனின் அருகில் நிறுத்தி கூட பார்க்க அவனுக்கு விருப்பம் இல்லை.

"அதான் வேண்டாம்னு சொல்லிடீங்கள. அப்புறம் என்ன.."

"ரூபினியை நீ கல்யாணம் பண்ணலைனா நமக்கு இருக்குற ஒப்பந்தத்தை முறிக்க வேண்டி வரும்னு சொல்றான் டா"

"சொல்றாரு இல்ல ப்பா, மறைமுகமா மிரட்டுறாரு" என்றான் முறைப்புடன்.

சமீபத்தில் பழங்காலத்து கோவில் ஒன்று மீட்டமைப்பு ப்ராஜெக்ட் வந்திருக்க இருவரும் சேர்ந்து தான் ஒப்பந்தமிட்டனர். இது செய்வதற்கு முறையான அனுமதியும் பெற்றாயிற்று. திவாஹர் விலகுவதால் அவருக்கு சில கோடி நட்டம் தான் ஆனால் அதில் நேரடியாக சமந்தபட்டு இருக்கும் வரதராஜனுக்கு பல கோடி நட்டம் மட்டும் இல்லமால் இத்தனை நாள் சேர்த்து வைத்த கம்பெனி பெயருக்கு இழுக்கு.. இது தான் கொஞ்சம் நாளாக அவரின் மனதை போட்டு அலைக்கழித்த விஷயம்.

இதனை வெற்றிகரமாக முடிக்க திவாஹரின் பக்கம் இருந்து வரவிருக்கும் ஆள் பலம் மிகவும் முக்கியம் என்பதை அர்ஜுன் அறிவான்.

"ஏன் ப்பா, அவரு நிஜமாவே உங்க பிரண்டா?" என குத்தி காட்டுவதற்காகவே அப்படி கேட்டான்.

எங்கோ பார்ப்பது போல் முகத்தை திருப்பி அவன் கேள்வியில் இருந்து தப்பிக்க நினைத்தார். அர்ஜுனுக்கு ரூபினி மேல் இன்னும் வெறுப்பு தான் கூடிக்கொண்டே சென்றது. எவ்வளவு பெரிய வலையில் தன்னை சிக்க வைக்க மட்டுமே நினைக்காமல் தன் தந்தை, குடும்ப தொழில் என அனைத்தையும் பகடை காயாக நிறுத்திவிட்டாள்.

வரதராஜனுக்கு இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. தொழிலை நினைத்து அர்ஜுன் வாழ்க்கையை விற்பதா இல்லை அவப்பெயர் வந்தாலும் பரவாயில்லை என நினைத்து விட்டுக்கொடுத்து போவதா என்று.. அதனை அவனிடமே சொல்ல

"அப்பா, நம்ம விட்டுக்கொடுத்து போக போறதே இல்லை அதே போல என்னோட வாழ்க்கையும் விட்டுக்கொடுக்க மாட்டேன். இது ரெண்டும் இப்போ என்னோட பொறுப்பு. என்னோட வாழ்க்கைக்கு அந்த ஆளும் அவரோட பொண்ணும் விலை பேசுறாங்களா? அவங்களுக்கு என்னை பத்தி இன்னும் சரியா தெரியலை" என அர்ஜுனின் இன்னொரு முகம் வந்து எட்டிப்பார்த்து.

"அர்ஜுன், இது ரொம்ப பெரிய விஷயம் ப்பா. அனுபவமான நபர்கள் உதவி ரொம்பவே முக்கியம் டா, நீ எப்படி தனியா?"

"ப்பா, உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?" என்றான் அவர் கண்களை பார்த்துக்கொண்டே... உள்ளுக்குள் அவ்வளவு தவிப்பாக இருந்தது எங்கே ஏதேனும் மறுப்பு சொல்லிவிடுவாரோ என்று.

"நான் திவாஹரோட ஒப்பந்தத்தை முறிக்க தயாரா இருக்கேன்" என்றார் மறைமுகமாக அவனின் மேல் இருக்கும் நம்பிக்கையை கூறும் விதமாக.

வேகமாக வந்து அணைத்துக்கொண்டான். மிகவும் உணர்ச்சி வசமாக இருந்தான், தந்தை தன்னை நம்பி எவ்வளவு பெரிய பொறுப்பை கொடுக்கிறார் என தெரிந்த பின்.

"கண்டிப்பா உங்களோட நம்பிக்கையை காப்பாத்துவேன் ப்பா" என உறுதியாக சொன்ன மகனின் தோள்களை தட்டிக்கொடுத்தார்.

****

சாரா என்னதான் சிரித்து பேசினாலும் உள்ளுக்குள் உடைந்த மனம் அப்படியே தான் இருந்தது. மீண்டும் வாழ்க்கையில் வெறுமை. தனக்காக ஒருவன் வாழ்நாள் முழுக்க கூடவே வருவான் என கற்பனை செய்தவளுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் மட்டுமே. அவள் ஆதியுடன் எல்லாம் கற்பனை செய்யவில்லை என்றாலும் அந்த இடத்தில் அவனை வைத்து பார்த்திருந்தால், மீண்டும் அந்த இடம் காலியாக போனதில் மனமும் விட்டு போனது.

இப்போது ஆதி சரியாக பேசவதில்லை, அர்ஜுனை அவ்வப்போது பார்ப்பது உண்டு. அவனிடம் கிடைத்த இந்த இடைவெளியே அவளுக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்தது உண்மை. அர்ஜூனுடன் பேசிய போது தான் தெரிந்தது ஏஞ்சலா திரும்ப யூகே சென்றுவிட்டாள் என்று. இதனை கேள்வி பட்ட உடன் ஆதியின் நிலைமை தான் நினைவுக்கு வந்தது. அவள் தான் அன்று பார்த்தாலே ஏஞ்சலாவை பார்க்கும் போது அவன் கண்களில் தெரியும் காதலை, அது போன்ற பார்வை அவளை என்று பார்த்தது இல்லை என்பதும் புரிந்து. அதுவே மீண்டும் அவனுடன் நட்பு தொடர காரணமாகவும் இருந்தது. ஆதி இப்போது கண்டிப்பாக ஏஞ்சலா நினைவில் வாடிக்கொண்டு தான் இருப்பான் எனவும் தெரிந்தது. ஆனால் ஆதியும் தன்னால் மீண்டும் சாதாரணமாக பேசிட முடியுமா? என நினைத்தால் அது சந்தேகம் தான்.

சாரா கையில் இரண்டு காபியுடன் வந்தாள். ஒன்றை அர்ஜுன் கையில் கொடுத்தவள் மற்றொன்றை பருகியவாறே

"இருந்தாலும் இந்த ரூபினி இவ்வளவு தூரம் போவான்னு நினைச்சுக்கூட பார்க்கல" என்றாள் கடுப்புடன்.

"அதான் டி, நானும் இதை எதிர்பார்க்கவே இல்லை. இவளை எல்லாம் மனுஷன் கல்யாணம் பண்ணுவானா. சூனியக்காரி. இந்த ப்ராஜெக்ட் அ வெற்றிகரமா முடிஞ்சு அந்த கோவில்ல வெச்சே நான் கல்யாணம் பண்ணி காட்டுறேன்" என்றான் திடமாக.

சொன்னவின் பார்வை வேறு எங்கோ இருக்க, ஆனால் அவனையே பார்த்துக்கொண்டு இருந்த சாராவின் பார்வையில் அவன் உறுதியாகத்தான் சொல்கிறான் என்பது புரிந்தது.

"யாரடா கல்யாணம் பண்ண போற? அந்த ரூபினியையா?" என்றாள் சிரித்துக்கொண்டே..

"அடியேய் விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாத. கற்பனை கூட எனக்கு அவளோட வர மாட்டிங்குது" என பாவமாக சொல்ல... சத்தமாக சிரித்தாள் சாரா. என்னவே அவளுக்கு அர்ஜுன்... ரூபினியை திட்டுவது கேட்க மகிழ்வாக இருக்கிறது.

"சரி டா, சும்மா தான் சொன்னேன். இந்த ப்ராஜெக்ட்ல உன்னோட முதல் பிளான் என்ன?"

"அந்த கோவிளோட பழைய வரைபடம் கிடைக்குதான்னு பார்க்கணும் டி, அந்த கோவிலோட எழில் மாறாம அப்படியே கொடுக்கணும்னு தான் என்னோட ஆசை அப்போதான் நிறைவா இருக்கும்."

"ஹ்ம்ம், உனக்கு இதுல என்ன ஹெல்ப் வேணும்னாலும் சொல்லு நான் பண்றேன்" என்றாள் அவன் குடித்து முடித்த கிளாசை வாங்கிய படி.

சந்தோசமாக 'சரி' என்பது போல் தலையை ஆட்டினான்.

"சாரா, இதுல ஆதியை சேர்த்துக்கலாம்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்ற? உனக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இருக்காதுல?"

தன்னுடைய சிறு உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கும் அவனை பார்த்துக்கொண்டே இருந்தாள். சொடுக்கிட்டு அவள் சிந்தனையை கலைத்தவன்

"என்ன டி வேண்டாமா? ஏன் பார்த்துட்டே இருக்க? பதில் சொல்லு"

"இதுல என்ன இருக்கு. அவனையும் வர சொல்லு, இது முழுக்க முழுக்க உன்னோட ப்ராஜெக்ட் நாங்க ஆப்லைன் ல தான ஒர்க் பண்ண போறோம். எனக்கு எதுவும் ப்ரோப்லேம் இல்ல" என வார்த்தையாக சொன்னாலும் லேசாக முகம் மாறியது ஆதியை சந்திக்க போவதை நினைத்து.

"அப்புறம் ஏன் முகம் ஒரு மாதிரி போகுதாம்?" என்றான் ஒரு விரல் கொண்டு அவள் முகத்தை நிமிர்த்திய படி.

கண்களை சுழற்றி என்ன சொல்வது ,எங்கே இருந்து சொல்வது என சொல்ல தெரியாமல் வார்த்தையை தேடிய படியே இருந்தாள்.

"என்ன ஆச்சு சாரா? ஏதாவது சொன்னாதான தெரியும். ஆதியை வர வேண்டாம்னு சொல்லிடலாமா?"

"ஐயோ அது இல்லை. அவன் உனக்கு ஹெல்ப் பண்ணாம யாருக்கு பண்ணுவான். ஏதோ ஒரு நெருடல் அவனை சந்திக்கணும்னு நினச்சா, வேற ஒன்னும் இல்லை"

அவள் தோள்களை இருகரம் கொண்டு பற்றியவன்

"ஈசி சாரா, ஏன் அவனை நேர்ல பாக்குறதுல ஒரு நெருடல்னு யோசி, என்ன பண்ணா அது சரி ஆகும்னு உன்ன நீயே கேளு. அதுக்கான பதில் உன்கிட்ட தான் இருக்கு"

அர்ஜுனின் கண்களையே ஆழ்ந்து பார்த்த சாரா நினைவுகள் எல்லாம் அவன் சொன்ன வார்த்தையில். அவனை அவள் வாழ்க்கையில் நிறுத்தி பார்த்ததால் தான் இந்த நெருடல், ஒருவேளை அவனை வேறு ஒரு பெண்ணோடு மணக்கோலத்தில் பார்த்தால் சரியாகுமா? என மூலையில் பளிச்சென்று ஒரு யோசனை பிறக்க..

அவள் கருவிழி சுருங்கி விரிந்ததிலே கண்டுபிடித்துவிட்டாள் என்பது புரிய.. அவள் பதிலை கேட்டு அவனுக்கும் ஆச்சரியம் தான்.

"நல்லா யோசிச்சிட்டியா? இது தான் உன்னோட இந்த உணர்வுல இருந்து விடுபடுற ஒரே வழியா?"

"ஆமா" என தீர்க்கமாக சொன்னாள்.

"சரி டி, இதை இதோட விடு. நான் பார்த்துக்கிறேன். முன்னாடி இருந்த மாதிரி ஹாப்பியா இரு சரியா! அது தான் உனக்கு அழகு" என்றான் அவள் கண்களை பார்த்துக்கொண்டே.

அர்ஜுன் ப்ராஜெக்ட் சம்மந்தமாக பலபேரை சந்தித்தான். அதில் சிலர் மட்டுமே அவனுக்கு உதவ முன்வர அதில் ஒருவர் தான் ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் ஒருவர் செந்தமிழ் செல்வன். அவர் கோவில்களை பற்றி நிறைய ஆராய்ச்சியும், பழைமை வாய்ந்த சில கோவில் பற்றி இலக்கணத்தில் வரும் குறிப்புகள் வைத்து செய்தியும் திரட்டி வைத்திருக்கிறார். அவர் ஓய்வு பெற்றபின்னும் அவரில் பணி அதோடு நிற்கவில்லை, பழங்காலத்து கட்டிடமுறை, சிற்பங்களில் இருக்கும் பின் கதை என தனக்கு தெரிந்தவற்றை எல்லாம் கிடைக்கும் மேடையில் சொல்வார். ஆனால் இப்போது அதனை பற்றிய தேடுதலோ, ஆர்வமோ பல பேருக்கும் இருப்பது இல்லை.

அவரை பார்க்கத்தான் அர்ஜுன் காலிங் பெல் அடித்து கதவு திறக்க நின்றுக்கொண்டு இருந்தான். ஐம்பது தொடக்கத்தில் இருக்கும் ஒருவாறு வந்து இன்முகமாக வந்து அர்ஜுனை கையை பிடித்து அழைத்து சென்றார். செந்தமிழ் செல்வன் வீட்டில் சுற்றிலும் புத்தகமும், சுவற்றை தொங்கும் படங்களில் தமிழ் வாசகமும் என பார்க்க முடிந்தது. அர்ஜுன் அவன் வந்த வேலையை பற்றி மீண்டும் ஒருமுறை அவருக்கு சொல்ல.


"அர்ஜுன், நீங்க சொல்ற கோவில் ரொம்பவே ஒரு மோசமான நிலைமையில இருக்கு. அதை மீட்டமைப்பு செய்வது ரொம்பவே கஷ்டமான ஒரு விஷயம் தான். இதுல இருக்குற சிக்கல் எல்லாம் தெரிஞ்சி தான் இதனை செய்யுறீங்கன்னு புரியுது, ஆனால் ஏன் புகைப்படம் எல்லாம்? இப்போ இருக்குற தொழில்நுட்பம் வெச்சு சுலபமாக பண்ணிட முடியுமே??" என கையில் இருக்கும் கண்ணாடியை துடைத்த வாறு கேட்டார்.

சோபா நுனியில் அமர்ந்து இருந்த அர்ஜுன், நன்றாக அமர்ந்து அந்த கோவிலில் மணம் மாறாமல் செய்து முடிக்கும் எண்ணத்தை சொல்ல....கண்ணாடியை மாட்டியவர்

"இருங்க தம்பி, இந்த கோவில் பற்றிய குறிப்பு என்கிட்ட இருக்கு. அதை எடுத்துட்டு வர்றேன்" என உள்ளே சென்றார்."

முழுவதுமாக 20 நிமிடங்கள் கழித்து கையில் சிலபல புத்தகங்களுடனும், ஸ்பைரல் போட்ட பேப்பர் கட்டுகளுடனும் வந்தார்.

"இதுல நீங்க எதிர்பார்க்குறது இருக்கும்னு நினைக்கிறேன். உபயோகம் பண்ணிட்டு திரும்பி வந்து கொடுத்துடுங்க, இது எல்லாமே என்னோட பொக்கிஷம்"

நன்றி பார்வையுடன் "கண்டிப்பா சார், ரொம்ப நன்றி. இந்த உதவியை மறக்கவே மாட்டேன்"

"அப்புறம்... இந்த கோவில் எல்லாமே கைதேர்ந்த சிற்பிகளால் செய்ய பட்டது, அதை எப்படி இந்த காலத்து மெஷின் வச்சு சரி பண்ணுவீங்க?"

அந்த கேள்வியில் லேசாக பெருமை இருந்ததோ? பழங்காலத்து கட்டிட கலையை தற்போது இருக்கும் தொழில்நுட்பம் வச்சு சரி பண்ண இயலாது என்ற பெருமை....

அதில் அவனுக்கு லேசாக சிரிப்பு எட்டிப்பார்க்க "நீங்க சொல்றது கரெக்ட் தான் சார். இப்போ இருக்குற தொழில்நுட்பம் எல்லாம் நம்ம முன்னோர்கள் மூளைக்கு மத்தியில ஒண்ணுமே இல்லை சார். ஆனா உங்களை போல ஆர்வம் உள்ளவங்களை ஏமாத்த மாட்டேன்னு மட்டும் என்னால சொல்ல முடியும்"

அவன் தோள்களை தட்டிக்கொடுத்தவர் "என்ன உதவியா இருந்தாலும் கேளுங்க, நம்ம பெருமையை மீட்டு எடுக்குற வேலையில என்னோட பங்கும் இருக்கட்டும்"

அவர் கொடுத்தவற்றை எடுத்துக்கொண்டு விடை பெற்று சென்றான்.

இடையில் ஒரு நாள் விடுமுறை வர அன்று சாராவை அழைத்துக்கொண்டு அந்த கோவிலை பார்வையிட சென்றான். முட்புதர்களுக்கு நடுவில் கோவில் கொஞ்சம் சிதைந்து இருந்தாலும் கம்பீரமாக இருந்தது. பழங்காலத்து நினைவுகளை சுமந்து நின்ற கோவில் காலத்தின் கொடுமையால் சற்று சேதமடைந்திருந்தாலும், அதன் அழகு மங்கவில்லை.

கழுத்து வலிக்க, கண்களை சுருக்கி கோபுரத்தை பார்த்தனர் இருவரும். கொஞ்சம் வெயில் அடிக்க, சாராவின் ஷாலை எடுத்து அவளுக்கு முக்காடு போல் போட்டுவிட்டு சிரித்தான் அர்ஜுன். பதிலுக்கு ஷால் நுனியை பிடித்த வாறு சிரித்த சாரா அவன் கைகளை பிடித்துக்கொண்டு கோவில் உள்ளே நடந்தாள். அர்ஜுன் மனதிலோ இருவரும் மணக்கோலத்தில் இங்கு வர வேண்டும் என மனமார வேண்டினான். அந்நேரம் சரியாக எங்கோ இருந்த கோவில் மணி காத்துக்கு சத்தம் எழுப்பியது.

அந்த கோவிலில் கருங்கற்கள் சிதைந்து, சுவர்கள் விரிசல் விழுந்திருந்தாலும், அவை காலத்தில் கதைகளை சொல்லிக்கொண்டிருந்தன. கொடிமரம் சாய்ந்து கிடந்தாலும் அதன் அடிப்பாகம் இன்னும் உறுதியாக நின்றது. தூண்கள் கொஞ்சம் உடைந்து, சிற்பங்கள் அதன் பாகங்கள் இழந்திருந்தாலும் கோவிலின் ஆன்மிகம் குறையவில்லை.

"என்ன அர்ஜுன், நம்ம நினைச்சதை விட ரொம்ப டேமேஜ் ஆகியிருக்கு... ஸ்ஸ்ஸ் ஆஆ"

"சாரா கீழ பார்த்து நட, எங்க கால காட்டு எதுவும் குத்திடுச்சா?" என கொஞ்சம் யோசிக்காமல் அவள் கால்களை தொட்டு பார்க்க

"அதுலாம் ஒன்னும் இல்ல, நீ எழுந்திரு அர்ஜுன்" என்றாள் சங்கோஜமாக

"ஒன்னும் இல்லாததும் நீ இப்படி காத்திருக்க மாட்ட, சப்பல் கழட்டு நான் பார்க்கிறேன்" என்றான் அவள் கால்களை ஆராய்ச்சி செய்தபடியே

அவள் எவ்வளவோ சமாதானம் செய்ய, அவனோ விடாப்பிடியாக நின்றுவிட்டான். வேறு வழி இல்லாமல் இடது காலை தூக்க.. அவனே செப்பலை கழட்டி பாதத்தில் எதுவும் இருக்கிறாதா என்று பார்க்க நெறிஞ்ச முள் ஒன்று குத்திய தடம் இருந்தது. அவன் சாதாரணாமாக செய்ய, சாரா தான் வயிற்றில்பட்டாம்பூச்சி உணர்ந்தாள் அவன் தொடுகையில். முதல் முறை இது போன்ற உணர்வு அவளுக்கு வருவது.

"என்ன டி ஒன்னும் இல்லனு சொன்ன, பாரு முள்ளு குத்திருக்கு" அண்ணார்ந்து அவளை பார்த்த படியே சொல்ல

"நிஜமாவே எனக்கு வலிக்கல அர்ஜுன், விடு" என்றாள் உள்ளே தோன்றிய படபடப்பை மறைத்துக்கொண்டு.

அவள் சொன்னது போலவே எழுந்து நிற்க, ஓரிரு முறை அவளிடம் நடக்க முடியுமா என கேட்ட பிறகே நகர்ந்தான். அவனின் பதற்றம் அவளுக்காக என நினைக்கும் போதே மனதில் சாரல் அடித்தது.

இன்னும் சிறுது நேரம் உள்ளே நடக்க, கோவிலை பார்வையிட்ட படியே பேசிக்கொண்டு வந்தனர்.

"ஆமா அர்ஜுன், இது எல்லாம் பண்ண கண்டிப்பா பாராம்பரிய கட்டிடக்கலை தெரிஞ்சவங்களால தான் முடியும், வெறும் கம்ப்யூட்டர், மெஷின் வெச்சு மட்டுமே பண்ண முடியாதுனு தோணுது"

"அதான் டி, என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன். இது எல்லாமே திரும்ப ரீஸ்டோர் (restore) பண்ண சில டெக்கனிசியன் கிட்ட பேசியிருக்கேன். பார்க்கலாம் என்னனு" என சொல்லிய படியே வெடிக்க பார்த்தான்.

"ஏன் அர்ஜுன், நான் ஒரு ஐடியா சொல்லவா?" அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்த அர்ஜுன்

"சொல்லுங்க மேடம், நீங்க சொல்றதை செய்ய தான் இந்த அடியேன் காத்துக்கொண்டு இருக்கிறேன்"

"போடா, நீ இப்படி தான் கிண்டல் செய்வ, நான் சொல்லல போ" என சிணுங்கிய படியே அவனை கடந்து செல்ல.. அவளை கையை பிடித்து நிறுத்துகிறேன் என்ற பெயர்வழி கையை பிடித்து இழுத்துவிட, நிலை தடுமாறி அவன் நெஞ்சின் மீதே மோதி விட்டாள். எங்கே அவளுடன் பின்னாடி சரிந்து விடுவோமோ என நினைத்து சுதாரித்தவன் முன்னாடி சாய நினைக்க, சாரா மீது அவனும் ஒட்டிக்கொண்டான். இதை நெருக்கம் இருவரும் எதிர்பாரா ஒன்று.

இதே அவள் ஆதி காதலியாக இருந்தால் கண்டிப்பாக அர்ஜுன் விலகி இருப்பான், இப்போது தான் அவள் மனதில் யாருமே இல்லையே, கிடைத்த வாய்ப்பை கள்ளனாக பயன்படுத்திக்கொண்டான். சாராவும் விட்டு விலகாமல் இருப்பது அவனுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி. சாராவோ புது விதமான அவஸ்தையில் இருந்தாள்.

இருவரும் விலகியது கோவில் புறா இறக்கைகளை படபட வேணும் அடித்து பறந்த சத்தத்தில் தான். கள்ள சிரிப்போடு விலகிய அர்ஜுன்

"சொல்லு டி, என்ன ஐடியா, கேப்போம்" என சாதாரணமாக பேச்சை தொடங்க, சாரா மீண்டும் அவள் யோசனைக்கு சென்றுவிட்டாள்.

"அது வந்து அர்ஜுன், இந்த கோவில் மீட்டமைப்ப டெக்னீசியன் வெச்சு செஞ்சா நல்லா தான் இருக்கும், ஆனா கைதேர்ந்த பழங்காலத்து கட்டிடக்கலை தெரிஞ்சவங்களை வெச்சு செஞ்சா இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது. இந்த சிற்பங்களை எல்லாம் பாரு ரொம்பவே உடைஞ்சு போய் இருக்கு, இதை எல்லாமே மெஷின் வெச்சு சரி பண்ணாம சிற்பி வெச்சு சரி பண்ணா, இந்த கோவிலோட அதே அழகை திரும்ப கொண்டு வரலாம்ல" என கண்களை விரித்து யோசனை சொல்ல

"சூப்பர் ஐடியா சாரா, கண்டிப்பா முயற்சி செஞ்சி பார்க்கலாம். மேடம் ஜி எவ்வளோ பிளான் பண்றீங்க, பேசாம நம்ம கம்பெனில டிசைனிங் ரோல்ல சேர்ந்துடு டி"

"ஏன் டா? இருபத்தில் நாலு மணி நேரமும் உன் மூஞ்சியே பார்த்துட்டு இருக்க முடியுமா? ஏதாவது வேற நல்ல கம்பெனில வேலை இருந்தா சொல்லு" என போற போக்கில் சொல்லிவிட....பின் தான் சொன்னதை உணர்ந்து நுனி நாக்கை கடித்து, சுருங்கிய கண்களுடன் அவனை திரும்பி பார்க்க, அவனோ இடுப்பில் கையை வைத்து அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

"அடி" என கையை ஓங்கிக்கொண்டு அவளை அடிக்க துரத்த, இருவரின் சிரிப்பு சத்தம் தான் எதிரொலித்தது.
 
Top