logo

அத்தியாயம் 11

Mars

Administrator
ஆதி மனதில் என்ன இருக்கிறது என தெரிந்துகொள்ள அர்ஜுன் எடுத்த முயற்சி எல்லாம் பூஜ்யம் தான். ஆனால் ஏஞ்சலா ஆதி வாழ்வில் இன்றியமையாத நட்பாக மாறிப்போனாள்.

ஆனால் அர்ஜுனின் சாரா மீது இருந்த காதல் நாளுக்கு நாள் வளர்ந்தது. நான் அவளை ரகசியமாக நேசிக்கிறேன். இது அவளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை பின்னே ஏன் நான் காதலிக்க கூடாது என்ற எண்ணம் தான். அவளின் வாழ்வு ஆதியுடன் நன்றாக இருக்க வேண்டும். ஒருவேளை ஆதி இவளை விட்டு சென்றாலும் சாராவாக இவனை அவள் வாழ்க்கை துணையாக நினைக்கும் வரை அவன் அவளுக்கு தோழனே.

நாட்கள் செல்ல செல்ல அதிகம் காயப்பட்டு போனது சாரா தான். தினமும் தன்னிடம் ஆதி பேசுவான் என எதிர்பார்க்க அவனோ 'எனக்கென்ன' என்று இருந்தான். சாரா ஆசை எல்லாம் இருவருக்கும் பிடித்த பாடலை கேட்க, இரவில் வண்டியில் ஒரு பயணம், ஆசையாக அக்கறையாக நாலு வார்த்தை அவ்வளவே. ஆனால் அதற்கு கூட பஞ்சமாகி போனது. அதிகம் ஏங்கியது பெண்ணின் மனது. ஆதி இடத்தில் யாராக இருப்பினும் அவளின் ஏதிர்பார்ப்பு இதுவாகத்தான் இருக்கும். அவள் அறியவில்லை இவள் ஆசை படுவதை விட இன்னும் அதிகமாக ஒருத்தன் இவளுடன் வாழ்க்கை செலவழிக்க தவமிருக்கிறான் என்று.

கணினியில் வேலை செய்துக்கொண்டு இருந்த சாராவுக்கு லேசாக கழுத்து வலிக்க கையை வைத்து நீவிவிட்டாள். கொஞ்சம் டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற கஃபே நோக்கி சென்றாள். அர்ஜுன் நியாபகம் வர... கொஞ்சம் தயங்கினாலும் அவனுக்கு அழைப்பு விடுத்தாள். முதல் ரிங்கில் எடுத்தான்

"ஹலோ சாரா" குரலில் கொஞ்சம் பதற்றம். அவளாக அவனுக்கு இந்த நேரத்தில் என்று அழைத்தது இல்லையே.

"ஹலோ அர்ஜுன். நீ என்ன பண்ற?" என அவள் சாதாரணமாக பேசினாள்.

அப்போது தான் நிம்மைதியாக வந்தது. எசவாக சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு விரிந்த புன்னகையுடன் "சும்மா இருக்கேன்னு சொல்ல ஆசை தான் டி. ஆனா வேலை தான் பார்த்துட்டு இருக்கேன். ஆமா நீ வேலை பாக்கலையா? இந்நேரம் போன் பண்ணிருக்க"

"நான் டீ குடிக்க கஃபே நடந்துட்டு இருக்கேன். நீயும் வர்றியா?" அவள் கஃபே என்று ஆரம்பித்ததுமே எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டான்.

"நீ கூப்பிட்டு வராம இருப்பேனா. இரு டி வர்றேன்" என அழைப்ப துண்டித்தான்.

எத்தனை நாள் ஆகிவிட்டது அவளாக அவனை உரிமையாக அழைத்து. அவளுடனான நேரம் அவனுக்கு என்றும் பொக்கிஷமே.

கஃபே சென்ற சாரா

"அண்ணா ரெண்டு டீ" என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே பின்னாடி இருந்து ஒரு குரல் "எவ்வளவு ஆச்சு?" என கேட்டு அர்ஜுன் பர்ஸ் திறந்து கொண்டு இருந்தான்.

பக்கவாட்டாக திரும்பி பார்த்த சாரா புன்னகைக்க அவனும் கண் சிமிட்டி சிரித்தான்.

"நீ போய் உட்காரு நான் வாங்கிட்டு வர்ரேன்"

கழுத்தை தேய்த்த படி அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தாள். டீ வரும் வரை அவளையே பார்த்துக்கொண்டு இருந்த அர்ஜுன் கண்களில் இது பட்டது.

அவள் முன் வைக்க பட்ட டீ அவள் பார்வையை அர்ஜுன் பக்கம் திசை திருப்பியது. சன்னமான சிரிப்போடு அதனை எடுத்து பருகினாள். அவளையே பார்த்துக்கொண்டு இருந்த அர்ஜுன்

"என்ன ஆச்சு சாரா கழுத்து வலியா? அதான் டையார்ட் ஆ தெரியுரியா?" என்றான் அக்கறையாக.

தனது செய்கையை இவ்வளவு கூர்ந்து கவனித்திருக்கிறான் என்பது புரிய "ஆமா அர்ஜுன். ரொம்ப வேலை ஜாஸ்தி. நிமிராவே முடியாம வேலை தலை மேல அவ்வளவு இருக்கு அதான்" என்றாள் சோகமாக.

பார்க்கவே பாவமாக இருந்தது "ரெண்டு நாள் லீவு எடுக்கலாம்ல டி"

"அதை எடுத்து என்ன செய்ய அர்ஜுன். ரூம் உள்ளவே இருக்கணும். வீட்டுக்கு போனா தனியா தான் இருக்கணும். என்னை பார்த்துக்க யாரு இருக்கா" என சாதாரணமாகத் தான் அவள் சொன்னாள், ஆனால் கேட்டவன் மனதில் சுருக்கென்ற வலி. இந்த வலி ஆதி உணர்ந்திருக்க வேண்டும் ஆனால் வலித்தது என்னவே அர்ஜுனுக்கு தான்.

"அதான் ஆதி இருக்கான்ல" என இதனை சொல்லும் போதே சங்கடமாக இருக்க ஆனால் தெரிந்துகொள்ளும் நோக்குடன் கேட்டான்.

"அவன் முன்ன மாதிரி கூட பேசுறது இல்லை அர்ஜுன். எங்க இருக்கான்? என்ன செய்றான்? எதுவுமே சொல்றது இல்லை. அப்போ அப்போ ஏதாச்சும் பேசுவான் ரெண்டு நிமிஷத்துல வெச்சிடுவான். அதுவும் அவன் பேசுறது எல்லாமே ஏஞ்சலா பத்தி தான் இருக்கும்" என்றாள் தோய்வாக.

அவளுக்கு இது எல்லாம் யாரிடமாவது பகிர்ந்துகொள்ள தோன்றியது அவளுக்கு என்று இப்போது இருக்கும் ஒரே நபர் அர்ஜுன் தான் எனவே அவனிடம் மனம் விட்டு பேசினாள். கேட்ட அர்ஜுனுக்கு தான் ஆதி மேல் கோவமாக வந்தது. முதலிலேயே சாராவிடம் காதலை சொல்லி அவளை தன் வாழ்க்கையில் இணைத்திருக்கமால் விட்டதுக்கு அவள் அனுபவிக்கும் கஷ்டத்தை பார்க்கும் படி ஆகிவிட்டது.

"ஈசி சாரா. நீ ஒன்னும் பீல் பண்ணாத. எல்லாமே ஒரு நாள் மாறும்" என எதை நினைத்து சொன்னானோ

அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் லேசாக தலையை மட்டும் ‘சரி’ என்பது போல் ஆட்டினாள் அதுவும் அர்ஜுனுக்கா. அவளுக்கு இது எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லை.

"உனக்கு பொறாமையாக இருக்கா சாரா?" அவள் ‘ஆமா’ என்று சொன்னால் ஏஞ்சலாவிடம் இதை பற்றி சொல்லலாம் என்று நினைத்து கேட்டான்.

"பொறாமைன்னு சொல்ல முடியாது. நம்மள மாதிரி அவனுக்கு ஏஞ்சலா ஒரு பிரண்ட் அவ்வளவு தான்"

அர்ஜுன் யோசித்தான் 'என்னது பொறாமை இல்லையா?அது எப்படி இல்லாம இருக்கும்?' ஆனால் அவளிடம் கேட்கவில்லை. இதனை பற்றி மேலும் கேட்காமல் மற்றவை எல்லாம் பேசி அவளை திசை திருப்பினான். நிமிடங்கள் தான் அவனின் பேச்சில் அவளை இழுத்து சிரிக்கவும் வைத்த பின் தான் நிம்மதி ஆனான். இடையில் அவளின் விரல் லேசாக அவனை உரச உடம்பு சிலிர்த்தது. அவளின் கண் அசைவும், உடத்து சுழிப்பும் அவனின் விருப்பமானவை. கிளம்பும் முன்

"சாரா ஈவினிங் வெயிட் பண்ணு. நம்ம சேர்ந்தே நடந்து போகலாம். நானும் உன் கூட வர்றேன்"

வெறுமையாக இருக்கும் மனதுக்கு யாரேனும் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அந்த கொஞ்ச நேர பயணத்துக்கு உடனே 'சரி' என்றுவிட்டாள்.


சொன்ன படியே அவள் வேலையை முடித்துவிட்டு வர அர்ஜுனும் வர நேரம் சரியாக இருந்தது.

"போகலாமா?" என அர்ஜுன் கேட்ட நேரம் ஆதியின் பைக் வந்து இருவரையும் மறைத்த வாறு வந்து நின்றது.

"ஹே ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல பார்ப்பேன்னு நினைக்கே இல்லை. எப்படி இருக்கீங்க" என்றான் மகிழ்வாக

ரொம்ப நாள் கழித்து அவனை பார்க்கிறாள் அவனிடம் கேட்க நிறைய உள்ளது ஆனால் எதில் இருந்து ஆரம்பிப்பது என்று தான் தெரியவில்லை.

"நல்லா இருக்கேன் ஆதி. உன்ன தான் ஆளே பார்க்க முடியல" என்றாள்.

"ஆமா டி, கிளப் வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு அதான். வர்றியா வெளிய போகலாமா? அர்ஜுன் நீயும் வா டா" என இருவரிடமும் கேட்டான்.

அர்ஜுன் நழுவப்பார்க்க "மச்சி எதுவும் சொல்லாத. நம்ம சேர்ந்து வெளிய போய் ரொம்ப மாசம் ஆச்சு. வா டா ப்ளீஸ்"

சாராவும் அர்ஜுனைப் பார்த்து கண்களை சுருக்கி தலையை ஆட்டி ‘ வா ‘ என சொல்ல... அர்ஜுன் அவன் வண்டியிலும், ஆதி சாராவுடனும் வந்து அந்த உயர் தர ரெஸ்டாரண்ட்க்கு வந்திறங்கினர்.

சாரா மனதில் ஆதியின் வரவு கொஞ்சம் இதம் அளித்தது. அர்ஜுனும் உடன் வருவதால் கல்லூரியில் பயிலும் போது வெளியே சென்ற நியாபகம் வர தானாக புன்னகை முகத்தில் வந்தது.

மிதமான வெளிச்சத்தில் நிறைந்த அறை. ஆட்கள் குறைவாகத்தான் இருந்தனர். உள்ளே வேலைப்பாடுகள் எல்லாம் ஆடம்பரமாக இருக்க சுற்றி பார்த்த படியே வந்தாள் சாரா.

பேமிலி ரூம் புக் செய்து இருப்பதால் அது உள்ளே தள்ளி அமைந்திருந்தது. ஆதியம் அர்ஜுனும் நடக்க சாரா சுற்றி பார்த்த படி கொஞ்சம் பின் தங்கி வந்தாள். படத்தில் வருவது போல ஆதி தனக்காக கதவை நிறுத்தி வைப்பான் என நினைக்க, ஆதியோ கதவை கடந்து திரும்பியும் பார்க்காமல் நடந்துவிட்டான். ஏமாற்றமாக இருந்தது மேலும் 'நான் தான் ரொம்ப எதிர்பார்க்கிறேனா?' என யோசித்தாள். ஆனால் அது பொய் என்பது போல் அவள் நிமிர்ந்து பார்க்கும் போது அர்ஜுன் கதவருகில் நின்று அவளுக்காக காத்திருந்தான்.

"என்ன சாரா யோசிச்சிட்டே இருக்க உள்ள வா டி"

சுற்றி இருந்த எல்லாம் மறைய அர்ஜுன் மட்டுமே கண்களுக்கு தெரிய அவனை பார்த்த வாறே வந்தாள். அவளுக்காக கதவை திறந்தவன் முதலில் அவள் உள்ளே சென்ற பின் தானும் வந்து

"ஏதோ யோசிச்சிட்டே வந்த? எதுவும் சொல்லனுமா? முகமே சரி இல்லை. கழுத்து ரொம்ப வலிக்கா டி?" அவளுடன் நடந்துகொண்டே கேட்டான்.

சாரா எதுவும் பதில் சொல்லாமல் அவன் கண்களை பார்த்த வாறே நடக்க முன்னாடி வந்த நபரின் மேல் இடிக்க போய்விட்டாள். நொடியில் சுதாரித்த அர்ஜுன் அவளின் தோளில் கையை போட்டு தன் பக்கம் இழுத்துக்கொண்டான்.

"பதில் சொல்லு சாரா. உன்னோட கவனம் இங்க இல்லவே இல்லை. நினைப்பு எல்லாம் எங்கயோ இருக்கு டி. ஆதியை பார்த்ததும் உனக்கு பேச்சே வரலையா என்ன?" என்றான் கவலையை உள்ளே மறைத்துக்கொண்டு.

அவர்களுக்கு தேவையானவை ஆர்டர் கொடுத்துவிட்டு உணவு வருவதுக்காக காத்துக்கொண்டு இருந்தனர். ஆதி அருகில் தான் சாரா இருந்தாள் எதிரில் இருக்கும் நாற்காலியில் அர்ஜுன் மட்டும் இருந்தான்.

"அப்புறம் சாரா வேலை எல்லாம் எப்படி போகுது" என ஆரம்பித்த ஆதி அவனின் வேலை பற்றியும் நிமிடங்கள் கடந்து ரேசிங், கிளப் என தொடங்கிய கதை ஏஞ்சலாவிடம் தான் முடிந்தது.

சாரா பொறுமை பறந்துகொண்டே இருந்தது. டின்னெர் என கூப்பிட்டு வந்து ஏஞ்சலா பற்றி பேசுகிறான் என்று.

"ஏஞ்சலாவும் இன்னைக்கு நம்ம கூட டின்னெர் ஜாயின் பன்றேன்னு சொல்லிருக்கா. நான் போயிட்டு பார்க்கிங்கல அவா வந்துட்டாளாணு பார்த்துட்டு வர்றேன்" என அவர்கள் பதிலை கேட்காமல் எழுந்து சென்றுவிட்டான். ஒருவார்த்தை சாராவிடம் வர்றியா என்று கூட அவனுக்கு கேட்க தோன்றவில்லை.

அடிபட்ட பார்வையுடன் அர்ஜுனை பார்த்தாள். கண்கள் கலங்கி போய்விட்டது. பார்த்துக்கொண்டு இருந்த அர்ஜுனுக்கே கோவமாக வந்தது என்றால் அப்போ சாரா?!

வேகமாக அவள் அருகில் வந்து அமர்ந்துகொண்டான் அர்ஜுன்.

"என்ன மா இதுக்கு போய் பீல் பண்ணலாமா? ஈசி சாரா. அவனை பத்தி தான் உனக்கு தெரியுமே" அவனின் காதல் அவனுக்கு ஒரு புறம் இருந்தாலும் சாராவுக்கு ஆதியை தான் பிடித்திருக்கிறது என்பதால் அவள் மனம் போக்கிலே பேசினான்.

"கஷ்டமா இருக்கு அர்ஜுன். நான் அவன் கண்ணுக்கு தெரியவே இல்லையா? அவனா வந்து காதலிக்கிறேன்னு எல்லாரு முன்னாடியும் சொன்னான் நானும் சரின்னு சொன்னேன், அவனா பேசாம இருந்தான், திரும்ப வந்து பேசுறான், இப்போ வேற ஒரு பொண்ணு கூட டைம் ஸ்பென்ட் பன்றான். அப்போ நான் அவனுக்கு யாரு அர்ஜுன்? இவ்வளவு தான் காதலா? இல்லை இது தான் காதலா?" என ஏங்கி அழுதுகொண்டே நண்பனின் தோளின் மீது சாய்ந்துகொண்டான்.

ரொம்ப மனம் உடைந்து போயிருக்கிறாள் என்று நன்றாக தெரிந்தது. ஆதரவாக அவள் தலையை தடவி கொடுத்தவன் சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

"சரி ஒன்னும் இல்லை. நம்ம இதை இப்போ பேச வேண்டாம். ஏஞ்சலா வருவா சோ இன்னொரு நாள் இல்லைனா நாளைக்கே பேசலாம் சரியா?! போய் முகத்தை கழுவிட்டு வா" என அனுப்பி வைத்தான்.

அவள் திரும்ப வரும் போது அவள் பார்த்த காட்சி ஆதி ஏஞ்சலவுக்காக கதவை திறந்துவிட்டுக்கொண்டு சிரித்த படி அவளுடன் பேசிய படி வந்தான். அவனை தோழனான நினைத்து இருந்தால் இது எல்லாம் வித்தியாசமாக தெரிந்து இருக்காது ஆனால் காதலன் என்ற இடத்தை கொடுத்த பின்?

இருவரும் வந்து அருகருகே அமர்ந்து கொண்டனர். ஆதி அவன் அருகில் சாரா வருவாள் என்று நினைக்க கூட இல்லை. ஏஞ்சலா அவனுக்கு மட்டுமே அறிமுகமான தோழி என்பதால் அருகில் அமர்த்திக்கொண்டான். இப்போது அர்ஜுன் பக்கம் தான் இடம் இருப்பதால் அங்கு அமர போகும் நேரம்

"சாரா நீங்க ஆதி பக்கத்துல உட்காருங்க" என ஏஞ்சலா சொன்னாள்.

திரும்பி பார்த்த சாராவுக்கு ஆச்சரியம் தான்.

"இல்லங்க பரவாயில்லை. நான் அர்ஜுன் கூட உட்காந்துக்கிறேன். ஒன்னும் ப்ராப்லம் இல்லை எனக்கு" என அர்ஜுனை ஒரு பார்வை பார்த்த வாறு அமர்ந்தாள்.

"நான் தான் சொன்னேன்ல சாரா ரொம்ப ஸ்வீட் அதான் எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்" என ஆதி பெருமையாக சொல்ல, அங்கு இருந்த மூவரின் முகத்திலும் சந்தோசம் இல்லை.

உணவு வர எப்போதும் மூன்றாக பிரிக்க படும் உணவு இன்று நான்காக பிரிக்கப்பட்டது. ஒருவேளை இது நண்பர்களாக இருந்திருந்தால் ஒன்று தெரிந்திருக்காத ஆனால் இங்கு இருப்பதோ முக்கோண காதல் ஆகிற்றே.

ஏஞ்சலா கவனமாக பேசினாள் என்றே தான் சொல்ல வேண்டாம். அதிகமாக அவளையையும் ஆதியையும் பற்றி பேசாமல் அவளின் படிப்பு, குடும்பம், ரேசிங் என்பதை பத்தி மட்டுமே இருந்தது அவளின் பேச்சு. சாராவுக்கும் அவளை போக போக பிடித்துவிட்டது. அவளும் ஏஞ்சலாவின் கொஞ்சும் தமிழில் விழுந்துவிட்டாள்.

ஆதி பேசும் போது அதிகம் எடுத்த வார்த்தை ஏஞ்சல் தான். அப்போது எல்லாம் யாரு கவனத்தையும் கவராமல் ஏஞ்சலா அவனை திசை திருப்பி வேறு பேச வைத்தாள். இது அர்ஜுன் சாரா இருவருக்கும் நன்றாக புரிந்தது. இடை இடையில் ஆதி சாராவுக்கு தான் என்பது போல் மறைமுகமாக பதிவு செய்தாள். அவளால் இவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வர கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.

ஆகா இதில் குழம்பி போய் இருப்பது ஆதி மட்டுமே.

***

அன்று சாராவை ரெஸ்டாரண்டில் பார்த்த பின் ஏஞ்சலா எடுத்த முடிவு ஆதியிடம் இருந்து தள்ளி இருப்பது. அதனை சரியாக கடைப்பிடித்தாள். வாரங்களாக ஆதியின் எந்த அழைப்பையும் எடுக்கவில்லை, கிளப்பில் அவன் இல்லாத போது வந்து ப்ராக்டிஸ் செய்துவிட்டு கிளம்பிவிடுவாள். முடிந்த அளவுக்கு அவனை தவிர்த்துவிட்டாள். தன்னுடன் இருப்பதால் தான் அவன் சாராவின் நினைப்பு அவனுக்கு இல்லை என்று தோன்றவே, இந்த முடிவு.

பார்க்க எப்போதும் போல் சிரித்துக்கொண்டு இருந்தாலும் அவளுக்கு சொல்ல முடியாத வேதனை. சாராவின் மனம் புரிந்துக்கொண்டு ஆறுதல் சொல்ல அர்ஜுன் இருக்கிறான் ஆனால் ஏஞ்சலா? மனதில் உள்ளதை யாரிடமும் சொல்லவும் முடியாமல் ஆதியை மறக்கவும் முடியாமல் அறையில் அமர்ந்து அழுத நாட்கள் ஏராளம்.

ஏஞ்சலாவின் தீடீர் மாற்றம் ஆதியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பைத்தியம் பிடித்தது போல் இருந்தான். அவளை தொடர்புகொள்ள எடுத்த முயற்சி யாவும் வீணாகப் போனது. ஒரு முறை அவள் சொன்னதுவேறு இப்போது நினைவில் வந்து இம்சை செய்தது.

"நான் படிக்க தான் இங்க வந்தேன் ஆனா என்னோட பேரன்ட்ஸ் யுகே ல இருக்காங்க. படிப்பு முடிஞ்ச அப்புறம் நான் அங்க போய்டுவேன்"

ஒருவேளை அங்கு தான் சென்றுவிட்டாளோ என நினைக்க நெஞ்சம் எல்லாம் பதறியது. உடனே அவன் போன் செய்தது அர்ஜுன் தான்

"மச்சி டேய்.." என ஆதியின் குரல் பதற்றமாக ஒலிக்க

"என்ன டா எதுவும் ப்ரோப்லம் ஆ? யாருக்கு என்ன டா?"

"ஏஞ்சல் டா அவா பேசவே இல்ல டா கொஞ்ச நாளா. அவா வீடும் பூட்டி இருக்கு. எனக்கு பயமா இருக்கு டா. ப்ளீஸ் டா ஏதாவது ஹெல்ப் பண்ணு" என அழுகுற குரலில் கெஞ்ச ஆரம்பித்துவிட்டான். அர்ஜுனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"நீ வீட்ல தான இருக்க, இரு நான் அங்கேயே வர்றேன்"

இருவரும் சந்தித்துக்கொள்ள ஆதியை போட்டு அடித்தால் என்ன என்று தான் தோன்றியது. அர்ஜுன் தான் எங்கே பேசினால் தவறாக போய் விடுமோ? தனக்கு சாரா மேல் இருக்கும் காதல் தான் ஆதியையம் ஏஞ்சலாவையும் சேர்த்து வைக்க நினைக்கிறதோ! என தோன்றியதால் ஆதி என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் சொல்லாமல்விட்டான். ஆனால் சாராவின் வாழ்க்கை? அதனை அப்படியே விட முடியாது என்பதால்

"ஆதி இங்க பாரு, எனக்கு புரியுது நீயும் ஏஞ்சலாவும் நல்லா பிரண்ட்ஸ் ஆகிட்டீங்க. ஆனா அவா பேசாம இருக்கிறதுக்கு நீ இந்த அளவுக்கு ரியாக்ட் பண்ணனும்னு அவசியமே இல்லை. உன்னோட வாழ்க்கை சாரா தான்னு நீ முடிவு பண்ணிட்டு இப்படி ஏஞ்சலா பேசலன்னு வருத்தப்படுறது உங்க மூன்று பேரு வாழ்க்கைக்கும் நல்லது இல்லை"

"ஆனாலும் அவா நல்லா இருக்காளா இல்லையானு தெரியாம மண்டை காயுது டா" என்றான் டென்ஷன் ஆக.

"இவ்வளவு அந்த பொண்ண பத்தி யோசிக்கிறியே. லவ் சொன்னதுக்கு அப்புறம் சாராவை பத்தி என்னைக்காச்சு யோசிச்சியா டா" என்றான் கோவமாக.

"என்ன டா பேசுற. அவளை நல்லா பார்த்துக்கணும்னு எப்பவும் நினைச்சிட்டே தான் டா இருப்பேன்"

"கிழிச்ச. ஏஞ்சலா கிட்ட பேசுனா அளவுக்கு கூட நீ சாரா கிட்ட பேசவே இல்லனு உனக்கே தெரியும். அந்த பொண்ணு மனசு எப்படி துடிச்சிருக்கும். உன்னோட நிலைமையில சாராவ வெச்சு பாரு அப்போ புரியும்"

ஆதிக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது.

"என்ன தான் டா சொல்ல வர்ற இப்போ? புரியுற மாதிரி சொல்லு"

"ஏஞ்சலாவ விட்டுட்டு சாரா மேல கவனம் செலுத்து. அவா தான் உன்னோட வாழ்க்கை முழுக்க கூட வர போற பொண்ணு. இடையில வந்தவ பாதிலையே போய்ட்டானு நினைச்சிக்கோ" என்றான் சாதாரணமாக.

நின்ற இடத்தில் இருந்தே முட்டி போட்டு அமர்ந்து முகத்தை மூடி குலுங்கி அழுகை ஆரம்பித்துவிட்டான். 'என்ன காரியம் செய்து வைத்திருக்கிறேன். பூவினும் மென்மையான மனம் கொண்ட பெண்ணை காயாப்படுத்தி இருக்கிறேன். அவளை நான்றாக பார்த்துக்க வேண்டிய நானே கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன். ஆனால் ஏஞ்சலா? அவளையும் என்னால் எப்படி விட முடியும்? அப்போ அவள் எனக்கு யார்?' என யோசித்து பாவமாக அர்ஜுன் முகத்தை பார்த்தான்.

அவனோ ஜன்னல் வழிய வேடிக்கை பார்ப்பது போல் கலங்கிய கண்களை மறைந்துவிட்டான். ஆதியும் சாராவும் ஒன்றாக சேர்வதற்கு பேசிவிட்டான். இனிமேல் முடிவு ஆதியில் கையில்...

"அர்ஜுன் நல்லா யோசிச்சு பார்த்தேன் டா. என்னால ஏஞ்சலாவ மறக்க முடியலை டா. அதோட சாரா??" என பேச வரும் போதே.. அர்ஜுன் வந்து ஆதியை அடிக்க ஆரம்பித்துவிட்டான்.

"என்ன டா நினைச்சிட்டு இருக்க நீ. ஒரே வாழ்க்கையில எப்படி டா ரெண்டு பொண்ணு இருக்கும் முடியும். அதுவும் சாராவ நினச்சு பார்த்தியா? காதலை சொன்ன அப்புறம் அவா கிட்ட எப்பவாச்சும் அன்பா பேசிருக்கியா? இல்லை ஆசையா பக்கத்துல போயிருக்கியா?" இதனை கேட்க கூடாது தான் ஆனால் ஆதி இதனை எல்லாம் யோசிக்க வேண்டுமே எனவே அவ்வாறு கேட்டான்.

"டேய் என்ன டா பேசுற. சாரா கூட என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது டா" அர்ஜுன் மூச்சு ஏற இறங்க அவனை பார்த்து 'லூசா' என்பது போல் பார்த்தான்.

"ஏன் டா மச்சி அப்படி பாக்குற?"

"ஆதி நீ ஸ்ட்ரெயிட் (straight) இல்லையா டா?" என கேட்டுவிட்டு அர்ஜுன் இரண்டடி பின்னாடி நகர்ந்தான்.

அதில் ஆதிக்கு சிரிப்பு எட்டிப்பார்க்க... இப்போது அவனை அடித்ததுக்காக அவனை சீண்டி பார்க்கும் பொருட்டு "ஹான் டா. எனக்கு உன்ன மாதிரி ஆம்பளைங்க தான் பிடிக்கும்" என கட்டிப்பிடிக்க வர

அர்ஜுன் அந்த அறையை சுற்றி ஓடினான். பின்னாடியே ஆதி துரத்தினான்.

"டேய் நீ குரூப்ல டூப்பா?" என அலறினான்.

அதில் பல நாள் அப்புறம் ஆதி வாய் விட்டு சிரிக்க அதில் அர்ஜுனும் இணைந்து கொண்டான்.

"ஆதி பீ சீரியஸ். இது விளையாடுற விஷயம் இல்லை. மூன்று பேரோட வாழ்க்கை இருக்கு"

எதுவுவோ ஆதி சொல்ல தயங்க... அர்ஜுன் தான் "என்ன டா சொல்லு?"

"நீ இப்போ கேட்டியே ஆசையா பக்கத்துல போயிருக்கியான்னு? போனேன் டா" என்றான் சோகமாக.

கேட்ட அர்ஜுன் தான் எப்படி உணர்ந்தான் என்று தெரியவில்லை. அப்படி இருக்காது என்று எண்ணி தான் அந்த பேச்சை எடுத்தான் ஆனால் அப்படி நடந்திருக்கிறது என்று ஆனா பின் மேலும் கேட்க அவனுக்கு விருப்பம் இல்லை என்று சொல்வதை விட தாங்க மனம் இல்லை.

"அப்படினா சந்தோசம் தான் டா. நீ பார்த்துக்கோ. நான் கிளம்புறேன்"

"இரு மச்சி முழுசா கேட்டு போ. நான் பக்கத்துல போனேன் தான் ஆனா காதலை சொன்ன அப்புறம் என்னால அவளை தொடவே முடியல. இதுக்கு முன்னாடி நம்ம மூன்று பேரும் குரூப் ஹக் பண்றது எல்லாமே சாதாரணம் தான் அது ஒன்னும் தெரியலையா ஆனா அதை தாண்டி என்னால போக முடியல... அப்புறம்" இடைவெளி விட்டவன் "அப்புறம் நான் அங்க இருந்து போயிட்டேன். சாராவுக்கு இது எதுவுமே தெரியாது. ஆனா அன்னைக்கே ஏஞ்சலா வண்டி ஓட்ட நான் பின்னாடி உட்காந்து போற மாதிரி சூழ்நிலை அமைஞ்சது அப்போ என்னால அவளை விட்டு பிரிய முடியல டா" என அர்ஜுனுக்கு சொன்னானோ தனக்கு சொன்னானோ... இவை எல்லாம் பேசும் போது தான் தெளிவு கிடைத்தது.

அர்ஜுன் சந்தோசப்படுவதா இல்லை நண்பனின் மடத்தனத்தில் கோவப்படவா என்று தெரியவில்லை. கொஞ்சம் யோசித்தித்து ஆதி முடிவு செய்திருக்கலாம் என்றே தோன்றியது.

"மச்சி இப்போ தான் டா எனக்கே எல்லாமே தெளிவா புரியுது. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் டா. எனக்கு சாரா முகத்துல எப்படி முழிக்கனே தெரியால" என்றான் முகத்தை அழுத்த தேய்த்துக்கொண்டு.

"நீ போய் பேசுனாதான் தான் சரியா இருக்கும். அவளோட விருப்பம் என்னனு முதல்ல கேளு"

"எனக்கு ஒரு மாதிரி இருக்கு டா. என்னை நினைச்சாலே எனக்கே கோவமா வருது" என்று சொன்னவன் அவன் கன்னத்தை அவனே அறைந்து கொண்டான்.

வேகமாக வந்து தடுத்தவன் "ஏன் டா லூசு மாதிரி பண்ற. முதல்ல இது எல்லாம் எப்படி சரி பண்றதுனு பாரு"

"டேய் பயமா இருக்கு டா. சாரா என்னை விட்டு போய்டுவாளா? எனக்கு அவா கூடவே இருக்கணும்னு நினைச்சி தான் லவ் சொன்னேன் ஆனா இது இப்படி தலைகீழா மாறும்னு நினைச்சி கூட பார்க்கல. எனக்கு அவா நல்ல பிரண்ட் டா. தேவ இல்லாம லவ் சொல்லி பிரண்ட்ஷிப் அ கெடுத்துட்டேனோன்னு தோணுது"

"நீயா எந்த முடிவுக்கும் வராத டா. பேசி பார்த்து சரி பண்ணு. இந்த நேரத்துல எந்த முடிவு எடுத்தாலும் சரியா இருக்காது. யோசி அடுத்து அவா கிட்ட பேசு"

"சரி டா. அவா எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் வாங்கிப்பேன் ஆனா என்ன ஆனாலும் ஏதோ ஒரு வகையில சாரா என்னோட லைப் ல இருக்கணும். இப்பவும் எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் டா" என நொந்து போய் மனக்குமுறலை கொட்டினான்.

இப்போது அவனுக்கு காது கொடுத்து கேட்க ஒரு ஆள் வேண்டும் என்பதை புரிந்து கொஞ்ச அர்ஜுன் அமைதியாக அவன் பேசுவதை கேட்டான்.

அப்போது ஆதியில் அப்பா இவர்கள் பேசுவதை கேட்டுவிட்டு உள்ளே வந்தார்.

"அப்பா.. எதுவும் முக்கியமான விஷயமா? போன் எதுவும் பண்ணீங்களா? வந்த மாதிரி தெரியலையே" என அவன் போக்கில் தந்தையிடம் யோசனையாக கேட்டான்.

"இல்ல ஆதி. அது நீங்க பேசிட்டு இருந்தது கேட்டேன். நான் சரஸ்வதி பத்தி பேச வந்தேன்"

ஆதி மற்றும் ஒருவரை ஒருவர் பார்க்க.. 'என்ன' என்று அர்ஜுன் கண்களால் கேட்ட, உதட்டை பிதுக்கி 'தெரியலை' என்பது போல் சொன்னான் ஆதி.

"சாராவ பத்தியா? என்னது ப்பா?"

"அன்னைக்கு அந்த பொண்ணு வீட்டுக்கு கூப்பிட்டதே உன்னோட காதலை ஏத்துக்க சொல்லி சொல்லணும்னு தான்"

அர்ஜுனுக்கு தந்தை மகன் இருவரும் ஒரு பெண்ணின் மனதோடு விளையாடுகிறார்கள் என கோவமாக வந்தது. முயன்று தன்னை கட்டுப்படுத்தினான்.

"அதுக்காக தான் சாரா என்னோட காதலை அக்சப்ட் பண்ணாலா?"

"இல்லை இல்லை. அதுக்கு முன்னாடி அவா எடுத்த முடிவு பத்தி எனக்கு தெரியாது. ஆனா அன்னைக்கு அவா வந்த அப்போ..." என அவளிடம் மறைமுகமாக சொன்னதை சொன்னார்.

"இதுக்கு நீங்க அவளை படிக்க வைக்காமயே இருந்துருக்கலாம். ஏன் ப்ப ஒருத்தங்க உணர்ச்சிகளோடு விளையாண்டீங்க? அவா என்னை பத்தி என்ன நினைச்சிருப்பா? ஐயோ இப்போ இது வேறையா!" என புலம்ப ஆரம்பித்துவிட்டான்.

அர்ஜுன் மனதில் எல்லாம் 'சாரா அவளாக விரும்பி அவனுக்கு ஓகே சொன்னாளா? இல்லை அவனின் தந்தை செய்த நன்றி உணர்ச்சியில் செய்தாளா?' என தெரியவேண்டி இருந்தது.

அதையே ஆதியிடமும் சொல்ல "இதை எப்படி டா தெரிஞ்சிக்க முடியும்?"

"அதுக்கு ஒரு வழி இருக்கு" என்றான் தீர்க்கமான குரலில்.

****

ஏஞ்சலா வீட்டை பூட்டி விட்டு அவள் நேராக சென்ற இடம் சாரா வீடு தான். அன்று ரெஸ்டாரண்ட்ல் சந்தித்த பின் இன்று தான் பேசப்போகிறாள். கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தது. காலிங் பெல் அடித்துவிட்டு அவள் வரவுக்காக நின்றுக்கொண்டு இருந்தாள் ஏஞ்சலா.

அவளின் வரவை சாரா எதிர்பார்க்கவே இல்லை. ஆச்சரியம் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. ஏஞ்சலா பின்னாடி ஆதி வந்திருக்கிறானா என்று எட்டிப் பார்க்க, அவள் பார்வையை உணர்ந்த ஏஞ்சலா

"நான் மட்டும் தான் வந்திருக்கேன்"

"ஓ! வாங்க உள்ள" என சிரித்த முகமாகவே வரவேற்றாள்.

வீட்டை சுற்றி பார்த்த படியே உள்ளே வந்தாள் ஏஞ்சலா. சுவரின் ஒரு பக்கத்தில் அவர்கள் மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் நிறைய இருந்தது. பல விதமான போஸ், வேறு வேறு இடங்களில் எடுத்த புகைப்படம் பார்க்க முடிந்தது. ஆனால் அனைத்து படங்களிலும் ஒரே ஒரு விஷயம் மட்டுமே மாறாமல் இருந்தது அது அவர்களின் புன்னகை.

அதனை பார்த்த வாறே "மூன்று பேரும் ரொம்ப கிளோஸ் போல" அதில் உண்மையில் தெரிந்துகொள்ளும் ஆர்வமே ஒழிய பொறாமை இல்லை.

"ஹ்ம்ம் ஆமா. அது எல்லாம் ரொம்ப முன்னாடி" என்ற கசந்த புன்னகை அவளிடம்.

"ஓஓ! இப்பவும் அது எல்லாமே இருக்கு ஆனா கண்களுக்கு தெரியாம" அவள் சொல்வதையே குழப்பமாக பார்த்தாள்.

"ம்ம், டீ ஆர் காஃபி"

"எனிதிங் இஸ் பைன்"

கிட்சேன் சென்ற சாரா இருவருக்குமான கோப்பையை எடுத்து வந்தாள். ஒன்றை ஏஞ்சலா கையில் கொடுக்க நன்றி என கூறி பெற்றுக்கொண்டாள்.

"சாரா உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்"

"ஹ்ம்ம் சொல்லுங்க ஏஞ்சலா"

"அது வந்து ஆதியை எனக்கு பிடிக்கும்"

ஒரு நொடி தடுமாறினாலும் அவள் மேலே சொல்லட்டும் என அமைதியாக இருந்தாள்.

"ஆதிக்கு என்னை தெரியுறதுக்கு முன்னாடியே அவரை பிடிக்கும். அடுத்து கொஞ்ச நாள் அப்புறம் தான் ஆதிக்கு லவ் இருக்குனு எனக்கே தெரிய வந்தது. எனக்கே அப்போ ரொம்ப கஷ்டமா போச்சு. என்னை மன்னிச்சிடுங்க. அடுத்து ஆதி கிட்ட பேசுறதை நானே குறைச்சிட்டேன் எங்க உங்களோட வாழ்க்கை என்னால கெட்டு போயிட கூடாதுனு. ஆனா.."

"ஆனா என்ன?"

"என்னால ஆதியை மறக்க முடியும்னு தோணலை. சிறு இடைவெளி விட்டு நான் பிரிட்டிஷ் சோ எங்க காலாச்சாரத்துல இந்த மாதிரி உறவு கொஞ்சம் சகஜம் தான் ஆனா நான் இங்க வளந்த நாள எனக்கு இங்க உள்ள கலாச்சாரம், உறவுகளுக்கு கொடுக்கிற மரியாதை எல்லாமே தெரியும் அதான் உங்க உறவுக்கும் மதிப்பு கொடுத்து விலகி போக நினைச்சேன். என்னோட பார்வைக்கு நீ ரெண்டு பேருமே லவ் பண்ற மாதிரி தெரியலை அதான் ஒரு முறை கேட்டு டிசைட் பண்ணலாம்னு வந்தேன்"

ஏஞ்சலா பேசும் தமிழே கொஞ்சம் ஆங்கிலேயர்கள் பேசுவது போல் தான் இருக்கும். அவள் சரளமாக பேச சிரமப்பட அவளே பேசட்டும் என அமைதியாக இருந்தாள் சாரா. அவளின் நேரடியான கேள்வியும், ஆதியுடனான உறவை விட்டு பிரியும் முன் அதனை தொடர ஏதேனும் வழி இருக்கிறதா என முயன்று பார்க்க நினைப்பதும் அவள் காதல் மனதை சொன்னது.

"எனக்கு என்ன சொல்லனே தெரியல ஏஞ்சலா. நாங்க பிராண்ட்ஸ் ஆ இருந்த அப்போ கூட ஆதி நல்லா பேசுவான் ஆனா இப்போ அப்படி இல்லை ஏதோ ஒரு விரிசல் வந்துருச்சுனு நல்லா தெரியுது. நான் இது வரைக்கும் லவ் பீல் பண்ணதே இல்லை. ஆதி ப்ரொபோஸ் பண்ணான்... எனக்கும் வேற யாரையும் கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லை அதான் ஆதிக்கு ஓகே சொன்னேன் அதுல எங்க நட்பு போனது தான் மிச்சம்" என கண் கலங்க சொல்லிக்கொண்டு இருந்தாள்.

சாரா மீண்டும் மீண்டும் 'ஆதிக்கும் அவளுக்கும் இடையில் இருக்கும் நட்பை மைய்யப்படுத்தி மட்டுமே பேசினாள்' அதனையும் ஏஞ்சலா கவனிக்க தவறவில்லை.

"பீல் பண்ண வேண்டாம் சாரா. இது மட்டும் தான் காரணமா?"

'இல்லை என்பது போல் தலையை ஆட்டினாள்'

"வேற என்ன?"

கொஞ்சம் கலக்கமாக அவளை பார்க்க... ஏஞ்சலா சாரா அருகில் வந்தமர்ந்து கையை பிடித்துக்கொண்டாள்.

"ஆதி உன்ன பத்தி சொன்னதுல இருந்தே உன்னையும் என்னோட தோழியா பார்க்க ஆரம்பிச்சுட்டேன். உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் தயங்காம சொல்லு. நம்ம மூன்று பேரோட வாழ்க்கையும் இருக்கு" என ஏஞ்சலா அவள் காதலுக்காக வேண்டி நின்றாள்.

"ஆதி அப்பா"

"ஆதி அப்பாவா? அவரு என்ன பண்ணாரு?"

"அவங்க தான் என்னை படிக்க வெச்சாங்க. ஆதி அவன் லவ் சொல்லி ஒரு வாரம் வரைக்குமே நான் பதில் சொல்லவே இல்லை. அப்போ தான் அவங்க அப்பா லஞ்சுக்கு கூப்பிட்டாங்கனு. அவங்களுக்கு ஆதி என்னை விரும்புறது தெரியும்னு நினைக்கிறேன். நன்றி உணர்ச்சி இருக்கணும்னு சொல்லி வேலைக்காரங்க கிட்ட சொல்லி உன்னோட சாரா வந்திருக்கானு ஆதியை கூப்டு வர சொன்னாங்க. அப்போவே எனக்கு புரிஞ்சு போச்சு. அதுவும் ஒரு காரணம் அன்னைக்கு நான் ஓகே சொல்ல..."

"நீ ஆதி கிட்ட இதை பத்தி சொல்லிருக்கலாமே?"

"என்னனு சொல்ல சொல்ற ஏஞ்சலா. அவங்க அப்பா அவங்க பையன் படிக்கிற அதே காலேஜ்ல என்னையும் படிக்க வெச்சிருக்காங்க. இது சாதாரண விஷயம் இல்லை. அப்படி இருக்குற அப்போ அவங்க பையன் என்கிட்டே காதலிக்கிறதா சொல்றான் அதை அவங்க அப்பா ஏத்துக்க சொல்றாங்க. என்னால எப்படி முடியாதுனு சொல்ல முடியும்?" என்றாள் அழுதுக்கொண்டு.

சாரா நிலைமை நன்றாக புரிந்தது. விசும்பிய படி அவளே தொடர்ந்தாள்

"எனக்குன்னு ஒரு பேமிலி வேணும். எனக்குன்னு யாராவது இருக்கணும்னு நினைச்சேன். அது தப்பா?" என்றாள் கேள்வியாக.

"ஆதி அப்பாவை பார்க்க போக முன்னாடி வரைக்கும் ஆதியோட காதல் ப்ரோபோசலுக்கு உங்களோட பதில் என்னவா இருந்தது??"

"இது எல்லாம் வேண்டாம்னு சொல்லணும்னு தான் நினைச்சேன். அதுக்கு அப்புறம் தான் என்னோட முடிவை மாத்திட்டேன். ஆனா இப்போ அதுக்காக நான் பீல் பண்ணல... எப்படியும் கல்யாணமுன்னு ஒன்னு நடக்கும் அந்த இடத்துல ஆதியை வெச்சி பார்த்துட்டேன். ஆனா இப்போ வாழ்க்கை வேறு ஒரு கணக்கு போடுது..."

அந்நேரம் ஆதியும் அர்ஜுனும் உள்ளே வந்தனர். ஆதி கலைந்த தலைமுடியுடன், அழுது சிவந்த கண்களுடன் குற்றம் செய்துவிட்டவன் போல் பதுங்கி வந்தான். அவனுக்கு ஏஞ்சலாவின் காதல் விஷயம் புதிது. சாராவை ஒதுக்கி விட்டு உடனே ஏஞ்சலாவை சேர்த்துக்க அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை.

வேகமாக வந்தவன் சாரா காலடியில் போய் அமர்ந்துவிட்டான். கண்ணீர் எல்லாம் பாதத்தில் விழ

"டேய் டேய் ஏன் டா இப்படி பண்ற? எழுந்து உட்காரு முதல்ல" என சமாதானம் செய்ய... அவன் உடல் குலுங்குவதில் அவன் அழுகிறான் என்பது புரிந்தது.

"அர்ஜுன் நீயாவது சொல்லு"


கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து பார்த்த ஆதி "சாரி டி. என்னோட அப்பா இப்படி செய்வாருன்னு நினைக்கவே இல்லை. எங்களை மன்னிச்சிடு சாரா. நானும் லூசு மாதிரி ஏதேதோ பேசிட்டேன். காதலுக்கும், நட்புக்கும் வித்தியாசம் தெரியாம உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்."

எப்படியோ அவனை எழுப்பி அருகில் அமர்த்திக்கொண்டாள். அர்ஜுன் உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.

"பரவாயில்லன்னு சொல்ல மாட்டேன். ஆனா எனக்கு இது எல்லாம் கடந்து வர கொஞ்சம் டைம் வேணும்"

அர்ஜுனுக்கு அவர்கள் காதல் முறிவு இல்லை இல்லை அது காதலே இல்லை... அவர்களின் அந்த பெயரிட முடியா உறவு பிரிந்ததில் கொஞ்சமும் சந்தோஷம் இல்லை. இப்போது மனதளவில் கஷ்டப்படுவது அவனின் நட்புக்கள் அல்லவா!

இந்த கலவரத்தில் கொஞ்சம் நிம்மதி பெற்றது என்னவோ ஏஞ்சலா தான்.

"சாரா சாரி டி. உன்ன நல்லா பார்த்துக்கணும், உன்னோட இந்த அன்பு வாழ்க்கை முழுக்க வரணும்னு தான் இப்படி எல்லாம் பண்ணேன். கடைசில உன்னையே இவ்வளவு கஷ்டப்படுத்துவேன்னு நினைக்கவே இல்ல. என்னை வெறுத்துறாத ப்ளீஸ்" என கெஞ்சி அவள் தோளில் சாய்ந்து அழுதான்.

அவனின் அன்பில் சாரா கண்களும் கலங்க, அர்ஜுனும் உணர்ச்சி வசமாகிவிட்டான். அர்ஜுன் சாரா மறு பக்கம் வந்து அமர்ந்தவன்

"என்ன டா பேசுற. அப்படி எல்லாம் சாரா பண்ண மாட்டா. அப்படி தான டி?"

"ஆமா ஆதி. விடு நாளாக இது எல்லாமே அதுவா சரி ஆகிடும். நம்ம பழைய படி இருக்கலாம்" என மன காயம் இருந்தாலும் நண்பன் கலங்குவது பொறுக்காமல் சமாதானம் கூறினாள். சாரா மனமும் வேதனையும் சொல்லாமலே மறைக்கப்பட்டது. அந்த காயத்துக்கான மருந்து?!

இவர்கள் மூவரை பார்த்த ஏஞ்சலா அதிசயம் போல் பார்த்துக்கொண்டே இருந்தாள். ஒருவர் அழுதால் மற்ற இருவரும் சமாதானம் செய்வது, தப்பு என்று ஆனா பின் யோசிக்காமல் மன்னிப்பு கூறியது அதனை சாரா மன்னித்தது .... அவர்களுடன் அவளும் ஒருவராக இருக்கணும் என்று ஆசை பிறந்தது.

ஆதி, "ஏஞ்சல், ஐ அம் சாரி. நம்ம நம்மளை பத்தி கொஞ்சம் நாள் அப்புறம் பேசலாமா? ஏற்கெனவே உங்க எல்லாரையும் நான் ரொம்ப கஷ்ட படுத்திட்டேன். எனக்கு கொஞ்சம் டைம் வேணும். ப்ளீஸ்" என இறைஞ்சும் பார்வையுடன் கேட்டான்.

யோசிக்காமல் முடிவு எடுத்து ஒரு பெண்ணில் கண்ணீருக்கு ஆளாகிவிட்டான் மீண்டும் அதே போல் ஒரு தவறை செய்ய கூடாது எனவே அடுத்து எடுக்க போகும் முடிவு உறுதியாக இருக்க வேண்டும், அதற்கு யோசிக்க நேரம் வேண்டும் எனவே அவ்வாறு கேட்டான்.

பெருமூச்சு ஒன்றை எடுத்த ஏஞ்சலா "கண்டிப்பா ஆதி, எனக்கு புரியுது. உன்னோட பதிலுக்காக நான் காத்துட்டு இருப்பேன். ஓகே! நான் கிளம்புறேன்...பை" என சொன்னவள் தோல் பையை மாட்டிக்கொண்டு எழுந்து நின்றாள்.

அவளுடன் மூவரும் வாசலுக்கு வர.. கையை அசைத்து விடைகொடுத்தனர். சாரா மட்டும் "தேங்க்ஸ் ஏஞ்சலா" என்றாள் புன்னகையுடன்.

அதற்கு லேசாக தலையை மட்டும் புன்னகையுடன் அசைத்த ஏஞ்சலா, நடந்து போகும் போது கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டாள். அது சந்தோசமா இல்லை ஆதி இன்னும் பதில் சொல்லமால் இருப்பதால் வந்த துக்கமா என தெரியவில்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு உணர்வு அழவேண்டும் போல் இருந்தது.
 
Top