logo

அத்தியாயம் 1

Mars

Administrator
அமைதி மட்டுமே நிலவியது அந்த அறையில். ஃபேன் ஒடும் சத்தமும், முறைத்துக்கொண்டு இருக்கும் நபரின் மூச்சுக்காற்று சத்தமும் கேட்டது. அவர் இந்த கல்லூரியின் பிரின்சிபால். அவர் முன்பு பாவமாக, கைகளை கட்டிக்கொண்டு மூன்று ஜீவன்கள் சோகமான முகத்தோடு நின்றுக் கொண்டு இருந்தனர்.

முகம் மட்டும் தான் சோகமாக இருந்ததே தவிர உள்ளுக்குள் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக்கொண்டு இருந்தது ரெண்டு ஜீவன். அதற்கு காரணம் அந்த அறையில் இருக்கும் டியுப் லைட் ஒளி அவர் வழுவழுப்பான தலையில் பட்டு மூன்றாவது நபர் கண்களை கூசச்செய்ய அந்த நபர் கண்களை சுருக்கி பார்த்துக்கொண்டு இருந்தார். இதனை கவனித்த மற்ற இருவர் உதட்டை மடித்து சிரிப்பை அடக்க பெரும் பாடு பட்டனர். அவர்கள் ஆதி மற்றும் அர்ஜுன்.

அமைதியை உடைத்தது அங்கு இருந்த டெலிபோனில் மணி சத்தம். அதனை எடுத்து காதில் வைத்த பிரின்சிபால் பேசுவதில் தெரிந்தது ஏதோ முக்கியம் அழைப்பு போல். அவர் ஃபோன் பேசி முடிக்கும் போது எதிரில் இருந்த மூவர் அவரையே பாவம் முகத்தோடு பார்த்தனர்.

“ இங்கேயே இருக்கணும். வந்து உங்களை கவனிச்சிக்கிறேன்” என கோவமாக சொன்னவர் வெளியேறி விட்டார்.

அவர் சென்றதும் ஆதியும், அர்ஜுனும் ‘பக்’ என்று சிரித்து விட்டனர். அவர்களை இப்போது முறைத்து பார்த்தது அந்த மூன்றாம் நபர், அவள் சரஸ்வதி @ சாரா.

“ஏன்டா நீங்களும் மாட்டுனது இல்லாம என்னையும் கோர்த்து விட்டீங்க” என்ன கோவமாக கேட்டாள்.

அவள் கேள்விக்கு பதில் சொல்லும் முன் ஆதி, அர்ஜுன் இருவரும் அங்கு இருந்த நாற்காலியில் ஹாயாக அமர்ந்தனர். இதில் ஆதி, பிரின்சிபால் டேபிளில் இருக்கும் பேனா அழகாக இருக்க அதை எடுத்து அவன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். அதுவும் இல்லாமல் உதட்டை குவித்து விசில் வேறு.

அருகில் இருந்த அர்ஜுன் பிரின்சிபால் சேர் அருகில் சென்று பார்த்தான். அது ரோலிங் சேர், அதுக்கு கீழ் ஸ்பிரிங் போன்ற அமைப்பில் இருக்க, சும்மா இருக்காமல் அதை நோண்ட ஆரம்பித்துவிட்டான். அவன் கூட ஆதியும் சேர்ந்துகொள்ள, பார்த்துக்கொண்டு இருந்த சாரா தான் பதற்றமாகி விட்டாள்.

“டேய், டேய் எதுவும் பண்ணாதீங்க டா. இப்பயாச்சும் சஸ்பென்ட் கேஸ் தான். எதையும் பண்ணி கொலை கேஸ்ல மாட்டி விட்டுடாதீங்க” என கையை பிசைந்துகொண்டு நின்றாள்.

“ சும்மா இரு சாரா, அது எல்லாம் ஒன்னும் ஆகாது. இது அவருக்கு தேவை தான் “ என ஆதி சொல்ல, அர்ஜுன் அவனுக்கு ஹை ஃபை கொடுத்தான்.

வேலை முடிந்தது இருவரும் சாரா அருகில் ஆளுக்கு ஒரு பக்கம் நிற்க சரியாக பிரின்சிபால் உள்ளே வந்தார்.


“ரெண்டு பேருக்கும் குளிர் விட்டு பேச்சு. படிக்கிற பசங்க செய்யிற வேலையா இது. பெரிய இடத்து பசங்கனு மிதப்பா போச்சு இல்லையா?” என ஆதி, அர்ஜுன் இருவரையும் கோவமாக கேட்டார். இப்போது சாராவை பார்த்து

“ எம்மா நீ நல்லா படிக்கிற பொண்ணு தான, எதுக்கு இந்த பொறுக்கி பசங்க கூட சேர்ந்து சுத்துற. இப்போ பாரு உன்னையும் சேர்த்து குட்டிச்சுவரா ஆக்கி வெச்சிருக்காங்க”.

“ சாரி சார்” என மூவரும் கோரஸ் பாட, அவர் பிபி இன்னும் ஏறத்தான் செய்தது அர்ஜுன், ஆதியைப் பார்க்கும் போது. இன்னும் மனசு ஆறாமல்

“ அது எப்படி டா, 60 மார்க் வெச்ச பரிட்சைக்கு போய் 90 மார்க் போட்டு வெச்சீங்க. படிக்க தான் செய்யல, பரீட்சை எத்தனை மார்க்குனு தெரியாமையா காலேஜ் வரீங்க” என வண்டை வண்டையாக கேட்டார்.

இப்போது அர்ஜுன்னும், ஆதியும் சாராவை முறைத்தனர். சாராவோ திருட்டு முழி முழிக்க நேற்று நடந்ததை மனதில் ஒட்டிப் பார்த்தாள்.


நேற்று இரவு

பெண்கள் விடுதிக்கு உள்ளே ஆதி, அர்ஜுன் சுவர் ஏறி குதித்தனர். மெதுவாக பூனைப் போல் ஒரு ஒரு அடியாக எடுத்து வைத்தனர். வார்டன் வெளியே நிற்கும் பெண்களை திட்டி உள்ளே போக சொல்லிக்கொண்டு இருந்தார்.

இருவரின் பார்வை அங்கு இருக்கும் மாணவிகள் மேல் அல்லாமல் அந்த வார்டன் மீதே இருந்தது. வெக்கம் இல்லாமல் அவர் அறைக்கு போகும் வரை பார்த்தனர்.

பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தூதூ என்று துப்பியும் கொண்டனர். இதில் அர்ஜுன்

“ச்சீ வெக்கமா இல்ல ஆதி உனக்கு. அது ஆன்டி, அதை போய் இப்படி பாக்குற” என்று நல்லவன் போல் பேச

இதில் கடுப்பான ஆதி அங்கு காயப்போட்டு இருந்த ஷால் எடுத்து அர்ஜுன் முகத்தில் போட்டு குனிய வைத்து மொத்த ஆரம்பித்து விட்டான்.

“ டேய் நாயே, நீயும் தான டா அதை பார்த்த. இப்போ என்ன மட்டும் சொல்லுற. மூடிட்டு வா டா” என்றவன் உஷாராக அர்ஜுன் நிமிரும் முன் சாரா இருக்கும் அறை நோக்கி ஓடினான்.

அதிலே தெரிந்தது, இருவரும் இதற்கு முன்பே இப்படி திருட்டு தனமாக இங்கு வந்து இருக்கின்றனர் என்பதை.

ஜன்னல் திறந்து இருந்தது ஆனால் ஸ்கிரீன் போடப் பட்டு இருந்ததால் உள்ளே தெரியவில்லை. எனவே அர்ஜுன் ஹஸ்கி வாய்ஸில்

“ சாரா, சாரா “ என்று அழைக்க, அவள் வருவது போல் தெரியவில்லை.

அர்ஜுன் ஆதியைப் பார்க்க, அவன் தலையை அசைக்க… லேசாக ஜன்னலை திறந்தனர். கவனமாக அந்த ஜன்னல் ‘கிரீச்‘ என்று சத்தம் எழுப்பாமல் பார்த்துக்கொண்டனர்.

இப்போது மீண்டும் அதே குரலில்

“ சாரா, சரஸ்வதி!!! “ என்று அழைக்க

‘பட்‘ என்று திறக்க பட்ட கதவு அருகில் இருந்த ஆதி முகத்திலேயே அடித்தது. அதில் ஆதி சத்தமாக ஆம்பளை குரலில் அதாவது அவன் குரலில் ‘ஆஆஆ’ என்று கத்திவிட, வேகமாக சென்ற அர்ஜுன் அவன் வாயை மூடினான்.

நல்லவேளையாக இவன் குரல் யாருக்கும் கேட்காமல் போக, சாரா உள்ளே இருந்து கண்களை கசக்கிக் கொண்டு இருவரையும் பார்த்தாள்.

“ என்ன டா வேணும் உங்களுக்கு? காலையில இருந்து உங்க கூட தான இருந்தேன் அப்போவே எதுநாலும் சொல்ல வேண்டியது தான” என சலிப்பாக தூக்க கலக்கத்தில் பேசினாள்.

அதற்கு எதிர் மறையாக வெளியே இருந்த இருவரும் அவளை ‘ஈஈ’ என்ற பல்லை காட்டினர்.

“உன்ன கடத்திட்டு போகலாம்னு வந்தோம்” என்று ஆதி சொல்ல, அதில் இன்னும் எரிச்சலாக

“கடத்துற மூஞ்சிய பாருங்க, மூஞ்சிய. நாய் கடத்த கூட வக்கு இல்ல ரெண்டு பேருக்கு” என்று உட்சகட்ட எரிச்சலில் பேசினாள்.

“ சாரா, என்னவேனா சொல்லு, ஆனா உன்ன நீயே நாய்னு மட்டும் சொல்லாத” என்று அவள் வார்த்தையே அவளுக்கே திருப்பி போட்டான் அர்ஜுன்.

ஏதோ விஷயமாக தான் உள்ளே வந்தது இருக்கிறார்கள் என்று புரிய இன்னும் நேரத்தை கடத்தாமல் வெளியே குத்தித்து வந்தாள். பண்ட், டி - ஷர்ட், போனி டெயில் போட்டு சாதாரணமாக இருந்தாள்.

“ சம்பவம் ஒன்னு பண்ணனும் “ என்று ஆதி மற்றும் அர்ஜுன் தீவிரமாக சொல்ல, இவ்வளவு நேரம் எரிச்சலில் பேசிக்கொண்டு இருந்த சாரா ஆர்வமாகிவிட்டாள்.

கண்கள் மின்ன, ஆதி மற்றும் அர்ஜுன் அவளை ஆளுக்கு ஒரு கையில் பிடித்துக்கொண்டு வேகமாக ஓடி கேட் அருகில் வந்தனர். ஆதி, சத்தம் எழுப்பாமல் செக்யூரிட்டி பையில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு காலேஜ் கேம்பஸ் உள்ளே மூவரும் வந்தனர்.

நேராக அவர்கள் டிபார்ட்மெண்ட் அறை கதவை சாவி வைத்து திறந்தான். சுற்றிலும் இருட்டு, ஒரு பொட்டு சத்தமும் இல்லை கொஞ்சம் பயமாக இருக்க, அருகில் இருந்த அர்ஜுன் கைகளை இறுக்கமாக பற்றினாள். அவனும் புரிந்து கொண்டு “நாங்க இருக்கோம்” என்று அவள் காது அருகில் குனிந்து சொன்னான்.

உள்ளே நுழைந்தவர்கள் டார்ச் வெளிச்சத்தில் நேற்று எழுதிய பரீட்சை பேப்பரை தேடினர். அர்ஜுன் சரியாக எழுதவில்லை சொல்லப்போனால் ஒன்று எழுந்தவில்லை கண்டிப்பாக ஃபெயில் தான் என்பதால் பாஸ் மார்க் போடவே வந்திருந்தனர்.

“யாஹு” என்று ஆதி பேப்பரை கண்டுபிடித்த ஆர்வத்தில் கத்தினான். சாரா அவன் புஜத்தில் கிள்ளி “அமைதியா இரு டா, நம்ம திருட்டு தனம் பண்ண வந்திருக்கோம்” என சொல்லிவிட்டு வேகமாக அதில் அர்ஜுன் பேப்பர் ஐ எடுத்தாள்.

அவனோ ஒற்றை இலக்கம் மார்க் தான் வாங்கிருக்க

“சார், நிறையவே மார்க் வாங்கிருக்காரு சாரா. நம்ம எதுவும் பண்ண தேவையில்லை. கண்டிப்பா கோல்ட் மெடல் ஆர்ஜூனுக்கு தான் “ என்று சீரியஸாக ஆதி சொல்ல, சாரா நன்றாக சிரித்து விட்டாள்.

அர்ஜுன் ஒரு மாதிரி ஆதியை பார்க்க, பின் ஆதி பேப்பரை அவர்களிடம் காட்ட அவனோ அர்ஜுன் விட கம்மியான மார்க். இப்போது சாரா மற்றும் அர்ஜுன், ஆதியை பார்த்து கேவலமாக ஒரு லுக் விட்டனர். அந்த பார்வையில் ‘ ஃபெயில் ஆகிட்டு தான் இந்த பேச்சு பேசுனியா’ என்ற அர்த்தம் இருந்தது.

“அப்படி பார்க்காதீங்க டா, வெக்கமா இருக்கு. வந்த வேலைய சீக்கிரம் முடிப்போம். யாரோ வரும் சத்தம் கேட்குது” என வேணும் என்றே சொல்ல மற்ற இருவரும் அவனை முறைப்பதை விட்டுடு பரபரப்பாகி விட்டனர்.

ரெட் பென் எடுத்த சாரா இருவருக்கும் மார்க் போட்டாள். என்ன போட்டாள் என்று மற்ற இருவரும் கவனிக்கவில்லை. யாரோ வரும் ஆரவாரம் கேட்குது என்று ஆதி சொன்னவுடன் பரபரப்பில் 60 மார்க்குகு வைத்த பரிட்சைக்கு 90 மார்க் போட்டு விட்டுவிட்டாள்.

எல்லாம் இருந்த இடத்தில் வைத்துவிட்டு வந்த வழியே மீண்டும் திரும்பி அவசரமாக சென்றனர். மறைவாக மரம் ஒன்றுக்கு பின்னாடி நின்றவர்கள் போன காரியம் வெற்றி அடைந்ததில் மூவருமாக அணைத்துக்கொண்டனர். டயரில் சிக்கிய எலி போல் நசுங்கியது சாரா தான்.

“ தடிமாடுகளா, மூச்சு முட்டுது டா” என்று சொன்ன பின் தான் விலகினார்.

“நீ எங்க ஸ்வீட் ப்ரெண்ட் டி, அதான் “ என்று அவர்கள் செய்கைக்கு விளக்கம் சொன்னான் அர்ஜுன். ஆதியோ அவள் தலையில் லேசாக கொட்டி அவன் அன்பை காமித்தான்.

“ரொம்ப அன்பை கொட்டாத, சொட்ட விழுந்துற போகுது. சீக்கிரம் ரெண்டு பேரும் கிளம்புங்க. நேரம் ஆச்சு” என்று துரத்தி விட்டாள்.

“நீயும் உன்னோட ரூமுக்கு சீக்கிரம் போடி” என்று அர்ஜுன் சொல்ல

“பாத்து சாரா. எதுனாலும் எங்களுக்கு கால் பண்ணு” என்று ஆதியும் சொல்லிவிட்டு கிளம்பினர்.

இன்று…


இதனை நினைத்து பார்த்த சாரா, அவள் தான் மார்க் போட்டது நினைத்து திரு திருவென முழிக்க, அவளை மற்ற இருவரும் முறைத்தனர்.

“அந்த அப்பாவி பொண்ண ஏன் டா முறைக்கீங்க. உங்களோட ப்ரெண்ட்ஷிப் வெச்சிகிட்டதுக்காக அந்த பொண்ணும் இப்போ பேச்சு வாங்க வேண்டியதா போயிடுச்சு” என்றார் பிரின்சிபால்.

இதனை கேட்ட இருவரும் இன்னும் வெறியாக அவளை முறைத்தனர். ஆனால், சாராவோ கெத்தாக அவர்களை பார்த்தாள்.


“அந்த பொண்ணு கிட்ட இருந்து கத்துக்கோங்கடா. உங்க ரெண்டு பேரையும் ஒரு வாரத்துக்கு சஸ்பென்ட் பண்ணுறேன் “ என்று சொல்லியவாறே அவர் சாரில் சென்று அமர்ந்த நொடி அது படக்கென்று உயரம் குறைந்து விட்டது.

பிரின்சிபாலோ ஒரு நொடியில் நிகழ்வில் ‘அய்யயோ’ என்று அலறியே விட்டார்.

சாரா தான் வேகமாக சென்று “ சார் சார் , பார்த்து உக்காருங்க” என்று உதவி செய்ய, மற்ற இருவரும் கையை கட்டிக்கொண்டு தலையை குனிந்து சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டனர். அவர்கள் சிரிப்பது அருகில் இருந்த சாராவுக்கு அவர்கள் உடல் குலுங்குவதில் தெரிந்தது.

மனதிலோ ‘பிராடு பசங்க’ என்று செல்லமாக திட்டினாள்.

பிரின்சிபாலுக்கு அதே நாற்காலியில் உட்கார பயமாக இருக்க, அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல், நடந்துகொண்டே பேசுவது போல் பாவனை செய்தார்.

“இந்தாங்க பேப்பர் இதுல அபோலஜி லெட்டர் எழுதிட்டு கிளாசுக்கு போங்க” என்று விறைப்பாக சொன்னார்.

அதனை வாங்கிய அர்ஜுன் சாராவிடம் பேனா வாங்கி எழுந்த ஆரம்பித்து விட்டான். ஆதியோ அவன் பையில் இருந்த பேனா எடுத்து வேணும் என்றே பிரின்சிபால் கண்ணி படும் வாரு ஆட்டிய பின் எழுந்த தொடங்கினான்.

பிரின்சிபால் அவன் கையில் இருந்த பேனாவை சந்தேகமாக பார்க்க, ஆதி அவரைப் பார்த்து ‘என்ன’ என்று புருவம் உயர்த்தி செய்கை செய்ய அவசரமாக திரும்பிக்கொண்டார்.

பின் வெளியே இருந்த ஸ்டாப் ஒருவர் சஸ்பென்ட் செய்ததை பிரிண்ட் செய்து லெட்டெராக எடுத்து வந்து பிரின்சிபால் கையில் கொடுக்க, அதனை ஆதி, அர்ஜுன் அவரிடம் இருந்து பெற்றனர். உடல் மொழியில் இருக்கும் பவ்வியம் அவர்கள் முகத்தில் இல்லை.

அதனை வாசித்த பின் இருவரும் அதிர்ச்சியாக “ சார், சார் பிளீஸ் சார் பிளீஸ் சார் “ என்று கெஞ்ச ஆரம்பிக்க

அவர்களை சஸ்பென்ட் செய்தது உண்மை தான் என்பது புரிந்த பின் கெஞ்சுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு “ இது தான் என்னோட கடைசி முடிவு. சஸ்பென்ட் பண்ணது பண்ணது தான் இதுல எந்த மாற்றமும் இல்லை. இது எல்லாம் தப்பு செய்றதுக்கு முன்னாடி நினச்சு இருக்கணும். இப்போ கெஞ்சி என்ன ஆக போகுது” என்று கெத்தாக பேசினார்.

“இது எப்படி சார் நியாமாகும்?” என்று ஆதியும்

“அதானே ஏன் சார் இப்படி பண்றீங்க?” என அர்ஜுன் கொந்தளிக்க…

சாரா இருவரையும் குழப்பமாக பார்த்தாள். பிரின்சிபாலோ அவர்களுக்கு கொடுத்த தண்டனையில் இப்படி பேசுகிறார்கள் என்றே நினைத்தார். தான் ஏதோ பெரியாத செய்து விட்டதாக உணர்து பெருமையாக நினைத்தார்.

“அது எப்படி சார் நீங்க எங்களை மட்டும் சஸ்பென்ட் பண்ணலாம்?” என்ற ஆதி ஆரம்பிக்க


“சாராவையும் சேர்ந்து சஸ்பென்ட் பண்ணுங்க” என்று அர்ஜுன் முடித்து வைத்தான்.

இதனை கேட்ட சாரா முட்டை கண்களை விரித்து பார்க்க, பிரின்சிபால் அதை விட அதிர்ச்சியாக அந்த இருவரையும் பார்த்தார். ‘ இதுங்க எந்த ரகம் ‘ என்ற அர்த்தத்தில்

“ஜெட் அவுட்ட்ட்ட்” என்று அறை அதிர கத்திய பின் தான் மூவரும் அங்கு இருந்து வெளிய வந்தனர். வந்தவர்கள் ஏதோ அவார்ட் வாங்கியது ஆளுக்கு ஒரு கையில் சாராவை பிடித்துக்கொண்டு மூவரும் சிரிப்போடு காலேஜ் விட்டு வெளியே ஓடினர்.

***

மூவரும் ஆர்கிடெக்சர் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள்.
ஆதி, அர்ஜுன் இருவரும் பார்க்க ஹாண்ட்சம் ஆக பெண்களை கவரும் வண்ணம் இருந்தனர். பணக்கார வீட்டுப் பிள்ளைகள் ஆனால் மற்றவர் முன்பு சாதாரணமாக காட்டிக்கொள்வர்.

அவர்களின் உயிர் தோழி சாரா என்ற சரஸ்வதி. அப்பா மட்டுமே, கிடைக்கும் வேலை செய்து ஸ்பான்சர் மூலம் படிக்க வைக்கிறார், அவர் செல்வராஜ். அவள் மிடில் கிளாஸ் பொண்ணு. பார்பதற்கு சாதாரணமாகவே அழகாக இருப்பாள். மங்கி போன உடையோ என்றும் அவள் அழகை குறைத்தது இல்லை.

முதலில் ஆதி மற்றும் அர்ஜுன் நட்பை ஏற்க தயங்கியவள் நாள் போக்கில் அவர்களுடன் ஐக்கியம் ஆகிவிட்டாள். அவள் இல்லாமல் மற்ற இருவரும் இல்லை என்ற நிலமைக்கு வந்துவிட்டனர்.

அர்ஜுன் மற்றும் ஆதிக்கு அவர்களை தேடி வந்து பேசும் பெண்களை விட கூட்டத்தில் தனியாக தெரிந்த பெண்ணின் மீதே பார்வை பட்டது நட்பாக. மேக் அப் இல்லாமல், சாதாரணமாக உடை அணிந்து எந்த வித கவனமும் அவள் மேல் படாமல் பார்த்துக்கொள்ளும் சாரா மீது தான் கவனம் சென்றது.

அர்ஜுனுக்கு அவன் தந்தையின் கம்பனி எடுத்து நடத்த பேராசை. கம்பெனியை மேம்படுத்த நிறையா யோசனையும், அதிகம் லாபம் ஈட்ட உக்தியையும் வைத்து இருக்கிறான். ஆனால் அவன் தந்தை கண்டிப்பாக படிப்பை அரியர் இல்லாமல் முடிக்க வேண்டும் என்று கட்டளை இட்டுவிட்டார். அம்மா அவன் தங்கை கல்பனா பிறந்ததும் இறந்து விட அப்பா மட்டும் தான், அவர் வரதராஜன்.

சிறு வயதில் இருந்தே தாத்தா, அப்பாவைப் பார்த்து இயற்கையாக ஆளுமை உண்டு அவனுக்கு அது படிப்பு மூலம் கிடைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே படிப்பை முடிக்க எதிர்நோக்கி காத்து இருக்கிறான் அவர்கள் கம்பனி “ஸ்டோன் பில்டிங் கன்ஸ்டிரக்ஷன்” இல் காலடி எடுத்து வைக்க.

ஆதி ஜாலி ஆக சுற்றி திரியும் இளைஞன். எப்படி அவன் தந்தை ரவீந்திரன் பின் அவன் தான் பொறுப்பை ஏற்க வேண்டும் அது அப்போது பார்துக்கொள்வோம் என்று அசால்ட் ஆக இருப்பான். அவனுக்கு அம்மா ஷில்பா இருந்தும் அவனை அவ்வளவு எல்லாம் கவனிக்க மாட்டார். செலவு செய்துகொண்டு டிரிப், ஷாப்பிங் என்று சுற்றுவார்.
ஆதிக்கு தாய் இருந்து இல்லாதது போல் தான் , அவன் அதுக்கு பெரியதாக அலட்டிக்கொள்ள மாட்டான்.

இதில் சாரா மட்டுமே ஹாஸ்டலில் இருந்து தங்கி படிக்கிறாள். அவள் வீடு கொஞ்சம் தள்ளி இருக்கிறது, போய் வர கஷ்டமாக இருக்கும் என்பதால் ஹாஸ்டல் சேர்ந்தாள். அப்பாவை விட்டு தூரமாக இருக்க விருப்பம் இல்லை, ஊருக்குள் வீடு பார்த்தால் வாடகை ஜாஸ்தியாக இருக்க ஸ்பான்சர் மூலம் ஹாஸ்டலில் இடம் கிடைத்தது.

ஆதி ,அர்ஜுன் இருவரும் காலேஜில் இருந்து அருகில் தான் வீடு என்பதால் பைக்கில் வருவர். இவர்கள் இருவரின் மையப்புள்ளி சாரா தான்.

***

சஸ்பென்ட் செய்யப்பட்ட ஒரு வாரம் ஆதி ஜிம் மற்றும் கார் ரேசிங்கிலும், அர்ஜுன் அவர்கள் கம்பெனிக்கும் , சாரா அவள் தந்தையை கவனித்துக்கொள்ள வீட்டுக்கு சென்றுவிட்டாள்.

இடையில் அவ்வப்போது சாரா வீட்டுக்கு இருவரும் சென்று வந்தனர்.

ஒரு வாரம் சென்ற பின் கல்லூரி வருவதால் பட்டாசை கொளுத்த அந்நேரம் சரியாக அவர்கள் பிரின்சிபால் கார் வந்து நின்றது.
 
Top