logo

ரெட் வெல்வெட் | Red Velvet | Episode - 3

Mars

Administrator
அவளின் மன நிலையை மாற்ற முயற்சி செய்தான் ரோஹன். திடீரென ஒரு யோசனையுடன் “ ஏய் ஸ்ருதி, நீ என்ன படம் பார்க்க விருப்பபடுற?? சொல்லு அதே பார்க்கலாம்” என கேட்டான்.


“எ..என்..ன்ன?” என்று தயங்கி கேட்டாள் ஸ்ருதி.


அவள் மனம் இங்கு இல்லை என்பது புரிந்தது.. மெசேஜ் வந்த பிறகு இப்படி ஆகிவிட்டாள். மீண்டும் அவளை மாற்ற முயற்சி செய்து “ என்ன படம் நீ பார்க்கலாம்னு நினைக்கிறனு கேட்டேன்?? “


படம் என்றதும் அவள் கவனம் கொஞ்சம் இந்த பக்கம் மாறியது. என்ன படம் என்று யோசித்தாள். ரோஹன் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்.


“ எனக்கு தெரியல, ரோஹன்” என்றாள் பாவமாக.


“சரி அதை விடு… ஹாரார்(horror), ஆக்சன், எது பார்க்கலாம்னு சொல்லு… அந்த மாதிரி படம் பார்க்கலாம்”


“இல்ல ஹாரார் வேண்டாம். வேற??” என்று யோசித்தாள்.


“அப்போ சைக்கோ படம் பார்க்கலாமா??... நமக்கு ஏற்ற மாதிரி இருக்கும்” என்று ஒரு மாதிரி குரலில் கேட்டான்.


அவனிடம் இருக்கும் மாற்றம் அவளுக்கு திகிலை கிளப்பியது.


“என்..ன… என்ன சொல்ற … நம..க்கு ஏற்ற மாதிரி அப்படினா?? எனக்கு புரியல ரோஹன்” என்ற திக்கி திணறி


“இதுக்கு ஏன் பதற்றம் ஆகுற ஸ்ருதி. நான் சும்மா தான் கேட்டேன். நம்ம மெசேஜ் பண்ணிட்டு இருந்த அப்போ நீ சொல்லிருக்க உனக்கு சைக்கோ படம் பிடிக்கும்னு. அதான் கேட்டேன்” என்றான் சாதாரணமாக.


அப்போதுதான் மூச்சே வந்தது. மேலும் தன்னை தானே திட்டிக்கொண்டாள் ‘ உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல. இப்படியா பதறுவ‘



“சரி, பார்க்கலாம்” என்று தயங்கி தயங்கி சொன்னாள்.


“ஓகே, ஸ்ருதி. உனக்கு இந்த சைக்கோ படம் கண்டிப்பா பிடிக்கும்” என்றவன் டிவி ரிமோட் எடுத்து சைகோ படம் ஆன் செய்தான்.


இருவரும் சோஃபாவில் அமர்ந்து இருந்தனர். படம் ஆரம்பமானது. இருவரும் படத்தை கவனிக்க ஆரம்பித்தனர். படம் ஆரம்பமான சில நிமிடங்கலேயே, ஸ்ருதிக்கு பயம் தொடங்கிவிட்டது. முன்னாடி எல்லாம் சைக்கோ கொலை படம் என்றால் விரும்பி விரும்பி பார்ப்பாள். ஆனால் இப்போது அதுவே பயமாக மாறிவிட்டது. சாதாரண சூழ்நிலையையும் கதையில் வருவது போலவே கற்பனை செய்தாள்.


படத்தில் பெண் ஒருவனின் பிடியில் சிக்கிக் கொள்வது போல் வரும் காட்சி எல்லாம் தன்னையே கற்பனை செய்து பயந்தாள். மேலும் அந்த பெண்ணின் நிலமை சைக்கோ கொலைகாரணிடம் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டாள். ஸ்ருதி, தனக்கும் இப்படி ஒரு நிலமை வந்துவிடுமோ என்ற பயம் சூழ்ந்தது.


லேசாக திரும்பி அவ்வபோது ரோஹனைப் பார்க்க… அவன் கொலை வரும் காட்சி எல்லாம் ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்தான்.


இதனை பார்த்த ஸ்ருதிக்கு இதையமே நின்று விடுவது போல் ஆனது. அருகில் இருந்த தலையணை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு கட்டிப்பிடித்துக் கொண்டாள். என்னமோ அது தன்னை காக்கும் என்ற எண்ணத்தில்.


இவளின் செய்கை எல்லாம் ரோஹன் கடைக்கண்ணில் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். அவனின் பார்வை படி.. அவள் படம் பார்த்து தான் பயப்படுகிறாள் என்றே எண்ணினான். இன்னும் என்ன தான் செய்கிறாள் என்று பார்பதற்கு படத்தை தொடரவிட்டான்.


படத்தில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக கொடூரமாக கொல்லப்படுவதை பார்த்த ஸ்ருதிக்கு அதற்கு மேல் முடியவில்லை. அவளது கண்கள் கலங்கிவிட்டன.



ரோஹன்… ஸ்ருதியின் முகத்தைப் பார்த்து பாவமாகி விட்டது. உடனே படத்தை நிறுத்தி விட்டான். அவன் அருகில் அமர்ந்து கையை பிடித்துக்கொண்டு அவளை தேற்ற முயன்றான்.


“ஸ்ருதி, சாரி. இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல. இனிமேல் இந்த படம் பார்க்க வேண்டாம். அழாத பிளீஸ் “ என்று மிருதுவாக பேசினான்.


“நான் கொஞ்சம் பயந்துட்டேன். அவ்வளவு தான். நான் இப்போ நல்லாதான் இருக்கேன்” என்று அப்பாவும் கெத்து விடாமல் பேசினாள்.


“அது தான பார்த்தேன். ஸ்ருதி ஆவது பயப்படுறதாவது. இப்படியே இரு.. அது தான் நல்லா இருக்கு. சும்மா கண்ண கசக்கிட்டு” என்று பேச்சை திருப்பினான்.


ஸ்ருதி, அப்படி சொன்னாலும் உள்ளுக்குள் பயம் இருந்த கொண்டே தான் இருந்தது. அவள் ரோஹனைப் பார்த்து பயப்படுவது தெரிந்தால் அவன் வருத்தப் படுவானோ என்று அவனின் மனதையும் யோசித்தாள். அவளைப் பொறுத்த வரை ரோஹன் நல்ல பையன். இப்போதைக்கு அவளுக்கும் அவனுக்கும் ஆன உறவு க்ரஷ் (crush) காதலும் இல்லை முழுதாக நட்பும் இல்லை இரண்டிற்கும் நடுவில்.


அவன் ஒருவேளை அஞ்சனா சொல்லும் வாரு கெட்ட பையனாக இல்லாமல் இருந்தால்.. இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள உறவில் விரிசல் விழும். தேவை இல்லாமல் ஒரு நல்ல உறவை கெடுத்துக்கொண்டது போல் ஆகிவிடும். எனவே அவளின் எண்ணத்திற்கு சிறிது நேரம் கொடுக்க எண்ணினாள்.


அப்படியே அவன் கெட்டவனாக இருந்தால்… அவன் முன்பு பயந்தவள் போல் ஆகிவிட கூடாது. எனவே தன்னை தானே தேற்றிகொண்டாள்.



“ஸ்ருதி, இங்க பாரு… எங்க இருக்கு உன்னோட மைண்ட். எவ்வளவு நேரமா கூப்பிடுறேன் தெரியுமா??!!” என்ற ரோஹனின் குரல் அவளின் எண்ணத்தை கலைத்தது.


“ஹான்!! சொல்லு ரோஹன்..”


“அது நம்ம ஃபர்ஸ்ட் டேட்லயே (date) நீ அழுகிற மாதிரி ஆகிடுச்சு. சாரி. இங்கேயே இரு உனக்கு பிடிச்ச கேக் இருக்கு அதை கொண்டு வர்றேன். நானே உனக்காக பண்ணேன் “ என்றவன் கிச்சன் போகாமல்… கெஸ்ட் சென்று கதவை திருந்தான்.


ஸ்ருதியின் எண்ணமோ ‘ இவன் என்ன கேக் எடுக்க கிச்சன் போகாம கெஸ்ட் போறான் ‘ கெஸ்ட்ரூமில் ஃப்ரிட்ஜ் இருப்பது விசித்திரமாக இருந்தது.


வந்தவன் கையில் ஒரு பாக்ஸ் இருக்க… அதை ஸ்ருதி முன் இருக்கும் டேபிளில் வைத்துவிட்டு கிச்சன் சென்று பிளேட் , ஸ்பூன் எடுத்து வந்தான். ஒரு பிளேட்டில் ஸ்ருதிக்கு ஒரு பீஸ் கேக் எடுத்து வைத்து ஸ்பூன் போட்டு கொடுத்தான்.


அதனை எடுத்து சுவைத்த ஸ்ருதிக்கு வார்த்தையே வரவே இல்லை. அவ்வளவு சுவையாக இருந்தது. லேசாக பயந்ததுக்கு இவன் தன்னை தேற்ற எடுக்கும் முயற்சி பெண்ணின் மனதில் சாரல் வீசியது.



“ரோஹன், ஒரு உண்மைய சொல்லவா?!!.. இந்த கேக் அவ்வளவு சூப்பர் ஆ இருக்கு தெரியுமா” என்று பாராட்டியவள் மீண்டும் ஒரு வாய் கேக் எடுத்து சாப்பிட்டாள்.


அவள் ஆசையாக சாப்பிடுவது பார்த்தாலே தெரிந்தது.


“உனக்கு பிடிச்சிருந்தா சந்தோசம் தான் ஸ்ருதி “ என்றான் ரோஹன்.


“சரி சொல்லு… இந்த கேக் எங்க வாங்குன??!! வீட்டுக்கு போன அப்புறம் அஞ்சுக்கு வாங்கி குடுக்கனும்”


“அடிப்பாவி!! இந்த கேக் நானே செஞ்சேன். கூடவே இருக்கேன் என்கிட்ட ஒரு வார்த்தை சாப்பிட சொல்லல… உன் பிரென்ட்க்கு மட்டும் குடுப்பியா?!!”


“ஏது! நீயே செஞ்சியா. நிஜமாவே நம்ப முடியல. சூப்பர் போ “ என்று மீண்டும் ஒரு முறை பாராட்டினாள்.



அவள் பேச இவன் கேட்டுக்கொண்டு இருக்கனும் போல் இருந்தது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவள் சென்றுவிடுவாள். மீண்டும் எப்போது சந்திப்பது என்பது தெரியாது. அவளை அப்படியே கூடவே வைத்துக்கொண்டாள் என்ன என்று தோன்றியது. அதற்கு அவள் சம்மதம் வேண்டுமே என ஒரு மனம் சொல்ல… அவள் சம்மதம் எதற்கு அவசியம்… மயக்கம் ஆக வைத்துவிட்டு ரூமில் அடைத்து வைத்துவிடு என இன்னொரு மனம் சொன்னது. இரண்டிற்கும் இடையில் ரோஹன் நிலமை திண்டாட்டமாக இருந்தது.


அடுத்த சந்திப்பை உறுதி படுத்த…


ரோஹன் - ஸ்ருதி, உனக்கு வேற என்ன கேக் பிடிக்கும்? நம்ம நெக்ஸ்ட் டைம் மீட் பண்ற அப்போ நான் செஞ்சி வைக்கேன்.


ஸ்ருதி - எனக்கு ரெட் வெல்வெட் கேக் (Red Velvet cake) ரொம்ப பிடிக்கும். ஆனா அஞ்சனாவுக்கு பிடிக்காது அதான் வாங்க மாட்டோம்.


ரோஹன் ஸ்ருதியின் பதிலில் குழப்பமடைந்தான். ‘ அஞ்சனாவுக்கு பிடிக்காது அதான் வாங்க மாட்டோம் ‘ என்ற ஸ்ருதியின் வாக்கியத்தை பற்றி ஆழமாக சிந்திக்க தொடங்கினான்.


அஞ்சனா ஸ்ருதியின் தோழியாக இருந்தாலும், அவள் ஸ்ருதி வாழ்கையில் இவ்வளவு செல்வாக்கு உள்ளவளா? அப்போ ஸ்ருதி தன்னைப் பற்றி தானே முடிவு எடுக்கமாட்டாளா? அப்போ என்னை அவள் வாழ்கையில் இணைக்க அஞ்சனா தலையீடு இருக்குமா ? என்று யோசித்தான். அஞ்சனா எந்த அளவுக்கு முக்கியமானவள் என்று தெரிந்துகொள்ள எண்ணினான்.


ரோஹன் - ஸ்ருதி, அஞ்சனா உனக்கு எல்லா விஷயத்திலும் ஆலோசனை சொல்லுவாளா??


ஸ்ருதி - ஆமா. அவ என்னோட பிரென்ட். அவள் சில நேரம் சொல்லுவது சரியாத்தான் இருக்கும். அவா என்ன நல்ல புரிஞ்சு வச்சிருப்பா.


ரோஹனுக்கு ஸ்ருதியின் பதில் பிடிக்கவில்லை. எங்கே அஞ்சனா தன்னை வேண்டாம் என்று சொல்லி ஸ்ருதியும் தன்னை வேண்டாம் என்றுவிடுவாளோ என பயந்தான்.



ரோஹன் - அப்போ, இன்னைக்கு இங்க வர்றதுக்கும் அஞ்சனா கிட்ட கேட்டு தான் வந்தியா?


ஸ்ருதி இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. எங்கே தன் தோழி தெரியாதவர்கள் வீட்டுக்கு போக வேண்டாம் என்று சொன்னதை ரோஹன் அறிந்தால் சங்கட படுவான் என்று எண்ணி


ஸ்ருதி - ஆமா ரோஹன். ஆனா கேட்டுட்டு வரல.. இங்க வர்றேன்னு சொல்லிட்டு வந்தேன்.


இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இவளாக முடிவு எடுத்து தான் வந்துள்ளாள் என்பது கொஞ்சம் ஆறுதலை தந்தது.


ரோஹன் - சரி! நீ சாப்பிடு. நான் வர்றேன் என்றவன் கிச்சன் சென்று விட்டான். அவன் வெளியில் வரும் போது ஸ்ருதி கையில் ஃபோன் இல் யாருடனோ மெசேஜ் செய்து கொண்டு இருந்தாள். பின்னிருந்து பார்த்த போது அஞ்சனா பெயர் கண்ணில் பட்டது. மற்ற எழுத்து சின்னதாக இருந்ததால் தூரத்தில் இருந்து தெரியவில்லை.


அஞ்சனா - ஸ்ருதி, எதுவும் பிராப்ளம் இல்லயே?


ஸ்ருதி - ரோஹன் நல்லா பாத்துக்கிறான். ஒன்னும் பிரச்சனை இல்லை.


அஞ்சனா - எல்லாரும் பார்க்க நல்லவங்களா தான் தெரிவாங்க. சந்தர்ப்பத்தில தான் அவங்க உண்மையான குணம் தெரியும். கொஞ்சம் டவுட் வந்தாலும் ஃபோன் பண்ணு டி.


ஸ்ருதி - ஓகே அஞ்சு. நான் பாத்துக்கிறேன்.



ரோஹனுக்கு எரிச்சலாக இருந்தது. ஸ்ருதியின் சுபாவம் அவனுக்கு பிடிக்கும். ஆனால் இன்னொருவர் தன்னை ஆட்டுவிப்பது கூட தெரியாமல் இருப்பது அவள் மீது எரிச்சலா இல்லை கோவமாக என்ன என்பது தெரியாத உணர்வு தோன்றியது.


அவள் அஞ்சனாவிடம் பேச பேச இவனுக்கு உள்ளுக்குள் எரிந்தது.
 
Top