logo

ரெட் வெல்வெட் | Red Velvet | Episode - 2

Mars

Administrator
ரோஹன் வீட்டில்…



ரோஹன், பார்பதற்கு ஹிந்தி படம் நடிகன் போல் இருந்தான். சாதாரணமான ஒரு டி- ஷர்ட் அணிந்து டிராக் பண்ட் போட்டு சமையல் அறையில் காய்கறி நறுக்கிக் கொண்டு இருந்தான். அவன் கண்களில் ஒருவித ஆர்வமும், அதே சமயத்தில் ஒருவித பற்றமும் இருந்தது. நறுக்கிய காயை எடுத்து சட்டியில் போட்டு வதக்கிக் கொண்டு ஓவன் இல் இருக்கும் பீட்ஸாவை கையில் உறை கொண்டு வெளியே வைத்தான். பின் அடுப்பில் உள்ள பாஸ்தாவை சரியாக இருக்கிறதா என்று டேஸ்ட் பண்ணிக்கொண்டான்.



சமையலில் ஆர்வம் உடையவன் என்று அவனது சமையல் அறையின் தூய்மையிலே தெரிந்தது. அவனில் சமையலில் அறையில் முழுவதும் ஒரு நல்ல வாசனை வீசியது.



சமைத்ததை பீங்கான் பாத்திரத்தில் மாற்றி… சமைத்த இடத்தை சுத்தம் செய்தான். பாத்திரம் எல்லாம் கழுவி வைத்துவிட்டு… சமையல் அறையை விட்டு வெளியே வந்தான். ஆண்கள் கையில் ஜிம் பொருட்கள் இருந்தால் தான் அழகு இல்லை… கையில் கரண்டி பிடித்து சமைக்கும் போது இன்னும் அழகாக இருப்பார்கள் என்பதற்கு ரோஹன் உதாரணம்.



லிவிங் ரூம் களைந்து கிடந்தது. கொஞ்சமும் சலிக்காமல் சிதறி கிடந்த பொருட்களை அதன் இடத்தில் வைத்தான். சோஃபா மேல் கிடந்த துணிகளை எடுத்து அலமாரியில் வைத்தான். ரூமை பெருக்கி அவன் குளித்து விட்டு வந்து கண்ணாடியில் ஒரு முறை நன்றாக இருக்கிறோமா என்று பார்த்தான்.



நன்றாக தான் இருந்தான். அவனையே ஒரு முறை நுகர்ந்து பார்த்து… கண்ணாடி முன் இருந்த பாடி ஸ்ப்ரே எடுத்து அடித்துக்கொண்டான். இப்போது நுகர்ந்து பார்த்த போது நல்ல மணம் வந்தது. எப்பவும் அணியும் ஆடை டி- ஷர்ட் டிராக் பேண்ட் போட்டுக்கொண்டான். தலையை துவட்டிகொண்டு வந்து சோஃபாவில் அமர்ந்து மணியை பார்த்த போது மணி ஆறு. ஸ்ருதி வர இன்னும் அரை மணி நேரம் இருந்தது.



அவளை நினைத்தால் மனதில் ஒரு பரபரப்பு. அவளின் சிரிப்பு, பேச்சு என அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. அவளுடன் பேசும் போது அவனில் ஏற்படும் ஒரு வித்தியாசமான ஒரு உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை. தடுக்கவும் தோன்ற வில்லை. இந்த ஒரு வாரம் ராத்திரி பகல் என்று பாராமல் இருவரும் பேசினார். அதில் இருந்து தான் தெரிய வந்தது அவளுக்கு பாஸ்தா மற்றும் பீட்ஸா பிடிக்கும் என.



இருவரின் உரையாடலும் முதலில் படம், வெப் சீரிஸ் என தொடங்கியது அது படிப்படியாக இருவரின் விருப்பம், கனவு என ஸ்வீட் நத்திங் வரை சென்றது. இருவரும் ஒரே ஊரில் இருப்பதால் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். முதலில் யார் நேரில் சந்திக்க கேட்பது என்ற தயக்கம் பின் தயக்கத்தை உடைத்து முதலில் கேட்டது ஸ்ருதி. அவனுக்கு அவளிடம் பிடித்தது இது தான்… யாரை பற்றியும் எண்ணாமல் அவள் போக்கில் வாழ்வாள். அவன் வீட்டிலே சந்திக்கலாம் என்று சொன்னது ரோஹன்.





ஒருவழியாக இருவரும் இன்று நேரில் பார்க்க முடிவானது. எனவே அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது தான் தானே சமைக்கலாம் என்று முடிவு செய்து சமையலை முடித்தும்விட்டான்.



அங்கு காரில் வந்து கொண்டு இருந்த ஸ்ருதிக்கும் இதே எண்ணம் தான். அப்போது சரியாக அவனிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது “வெயிட்டிங் ஃபார் யூர் பிரசென்ஸ்” (Waiting for your presence)



அதை படித்த உடன் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. பதிலுக்கு சிரிக்கும் பொம்மை மட்டும் போட்டு விட்டாள். நேரத்தை சொன்னால் அந்த நேரத்துக்கு தன்னை எதிர் பார்த்துக்கொண்டு இருப்பான்… இல்லையெனில் இன்னும் தவிப்பு அதிகமாக இருக்கும் என்பதனால் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்பதை சொல்லவில்லை. ஆண்களை தவிக்க விட பெண்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.





அவள் எண்ணியது போலவே அங்கு ரோஹன் அவள் எங்கு வந்து இருக்கிறாள்??!! இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என இவள் எண்ணத்தில் மூழ்கிவிட்டான்.





ரோஹன் சொன்ன அப்பார்ட்மெண்ட் முன் வந்து கார் நின்றது. பணத்தை கொடுத்து விட்டு அவன் எட்டாவது மாடி இரண்டாம் வீட்டுக்கு செல்ல லிஃப்ட் மூலம் சென்றாள். லிஃப்ட் உள்ளே நிசப்தமாக இருக்க… தைரியமான பெண் என்றாலும் யாரும் இல்லாத ஒரு வித அமானுஷ்யமான அமைதி ஒரு மாதிரி இருந்தது. இதய துடிப்பு வெளியே கேட்கும் அளவுக்கு வேகமாக துடித்தது. அப்போது சடன் ப்ரேக் போட்ட மாதிரி லிஃப்ட் எட்டாவது தளத்தில் வந்து ஒரு உலுக்கு உலுக்கி ‘ டிங் ‘ என்ற சத்தத்தோடு நின்றது.



வெளியே வந்து நன்றாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள். தனிமை உணர்வு போய் ரோஹன் வீட்டுக்கு அருகில் வந்துவிட்டோம் என்ற உணர்வே சிறிது நேரத்திற்கு முன் போன சந்தோசம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.





வீட்டுக்கு முன் வந்து கதவை தட்ட… இரண்டொரு நொடிகளில் வந்து கதவை திறந்தான். அவன் திறந்த வேகத்தில் தெரிந்தது அவன் இதற்காகத்தான் காத்துக்கொண்டு இருந்தான் என்பது. அவன் நேரில் பார்பதற்கு இன்னும் வசீகரமாக இருந்தான். அவனுக்கும் அவ்வாறே தோன்றியது போல் இமைக்க மறந்து அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். பின் மெதுவாக





“ ஸ்ருதி “ என்றான் புன்னகையோடு. “ உள்ள வர்ற ஐடியா எதுவும் இல்லையா… பார்த்துகிட்டே இருக்க??!!” என்றான் சிரிப்போடு.



அப்போது தான் புரிந்தது தான் இன்னும் அசையாமல் அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு இருப்பது. கொஞ்சம் சங்கோஜம் ஆகிவிட… அவளையே திட்டிக்கொண்டாள் ‘அறிவே இல்ல ஸ்ருதி உனக்கு.. இப்படியா பார்த்து வைப்ப.. என்ன நினைப்பான் உன்ன… ஐய்யோ ‘



அவள் யோசித்தது அவனுக்கு புரிந்ததோ என்னவோ “ ஃபோட்டோ விட நேரல் அழகாக இருக்கேன்னு சொன்னா.. நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன் ஸ்ருதி” என்றான் நக்கலோடு.



இதை கேட்டதும் மேலும் ‘அய்யயோ’ என்று ஆகிவிட…



“ரோஹன்ன்ன்” என்றாள் சிணுங்களுடன்.



அவளின் அவஸ்தை அழகாக இருக்க… வெளிப்படையாகவே ரசித்தான் அவளைப் போல.



“ஹா ஹா ஹா உள்ள வா ஸ்ருதி” என்றவன் தன் பக்கம் ஒதுங்கி நின்று அவளுக்கு வழி விட்டான். வரும் போது டோர் மேட் (Door Mat) கால்களை தடுக்கி விட்டது.



ரோஹன் - பாத்து வா ஸ்ருதி…



வீடு அவள் எதிர்பார்த்ததை விட அழகாகவும், பெரியதாகவும் இருந்தது. நவீன அலங்காரங்கள், மெல்லிய விளக்குகள் என எல்லாம் அவளை கவர்ந்தது.



அவள் திரும்பி ரோஹனைப் பார்க்க அவன் ஏற்கெனவே அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அவள் கண்களில் வியப்பு, ஆச்சரியம் தெரிந்தது.



“உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு” என்றாள் ஸ்ருதி தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் விதமாக.



லேசாக தலையை அசைத்து.. “தேங்க்ஸ்… வந்து உட்காரு வா. உனக்கு குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வர்றேன்” என்று லிவிங் ரூம்மில் உள்ள சோபாவை காட்டினான்.



அவளும் சிறு தயக்கத்துடன் சோஃபாவில் அமர்ந்துகொண்டாள். இவற்றை பின் நின்று பார்த்த ரோஹனுக்கு புரிந்தது இது அவளுக்கு ஃபர்ஸ்ட் டேட் (First date) என்று. பின் கிச்சன் உள்ளே சென்றுவிட்டான்.



இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு வீட்டை இன்னும் நன்றாக சுற்றி பார்த்தாள். மாடர்ன் ஹவுஸ்… வீட்டில் எங்கும் அழகான ஃபர்னிச்சர், பெரிய டிவி, ஷோகேஸ் என்று அழகாக இருந்தது. சற்று தள்ளி படுக்கை அறை, கெஸ்ட் ரூம் இருப்பதையும் கவனித்தாள். பின் ஃபோன் எடுத்து அஞ்சனாவுக்கு தான் ரோஹன் வீட்டுக்கு வந்துவிட்டதாக மெசேஜ் அனுப்பிவிட்டாள்.



கிச்சன் உள்ளே சென்ற ரோஹன் இருவருக்கும் குடிக்க நான்-ஆல்கஹாலிக் ஒயின் (Non - alcoholic wine) கண்ணாடி மது கிண்ணத்தில் எடுத்து வந்தான்.





“இந்தா ஸ்ருதி டேஸ்ட் பண்ணு “ என்று சொல்லி ஒயின் கிண்ணத்தை அவள் கையில் கொடுத்தான்.



ஸ்ருதியும் சிறு புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டாள்.



“ரொம்ப நல்லா இருக்கு, ரோஹன்” என்றாள் அதை ருசி பார்த்த பிறகு.



“அப்படியா??!!” என்றான் ரோஹன் மகிழ்சியுடன். இருவரும் குடித்துக்கொண்டு இருக்கும் போது ஸ்ருதி ஃபோன்னுக்கு மெசேஜ் வந்ததாக சத்தம் கேட்டது.



அஞ்சனா தான் மெசேஜ் அனுப்பி இருந்தாள்.



அஞ்சனா - “என்ன பண்ணிகிட்டு இருக்க? எல்லாம் சரியா நடக்குதா?? அவன் மேல எதுவும் சந்தேகம் இல்லையே??!”



இது வரைக்கும் நன்றாக போய்கொண்டு இருந்த ஸ்ருதி எண்ணம் ‘ சந்தேகம் ‘ என்ற வார்த்தை பார்த்ததும் அஞ்சனா சொல்லிய விடயம் எல்லாம் மீண்டும் எழுந்தது.



ஸ்ருதி - “ஒன்னும் பிரச்சனை இல்லை. எல்லாம் சரியா தான் இருக்கு “ என்று பதிலளித்தாள். அதற்கு பிறகு அஞ்சனாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.



ஸ்ருதி தனது பண்ட் பாக்கெட் இல் இருக்கும் பெப்பர் ஸ்ப்ரே இருக்கிறதா என்று தொட்டு பார்த்து சரி பார்த்துக்கொண்டாள்.



இந்த உரையாடலில் போது… முதலில் அஞ்சனா மெசேஜ் பார்த்ததும் சாதாரணமாக இருந்த ஸ்ருதி முகம் பின் குழப்பமாக மாறியது பின் லேசாக பயம் தோன்றியது… கையை பண்ட் பாக்கெட் இல் வைத்தது எல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருந்தான் ரோஹன்.



அவளின் பயம் புரிந்தது ஆனால் ஏன் பாக்கெட்டில் கை வைத்தாள் என்று எண்ணினான்.



“என்ன ஆச்சு, ஸ்ருதி? எதுவும் பிராப்ளமா?” என கேட்டான் ரோஹன் கரிசனத்துடன்.



இவ்வளவு நேரம் சாதாரணமாக அமர்ந்து இருந்த ஸ்ருதி, அவன் கேள்வியில் திடுக்கிட்டு



“ஒன்னும் இல்லையே ரோஹன்… “ என்றவள் எதுவும் பேசாமல் ஒயின் குடிக்க ஆரம்பித்துவிட்டாள். அவளின் திடீர் மாற்றம் அவனுக்கு குழப்பமாக இருந்தது.
 
Top