logo

உயிரோடிருந்தால் வருகிறேன் | Episode 2

Mars

Administrator
துருவுக்கு நடந்த சம்பவம் அவன் கை மீறி போன ஒன்று. அவன் வேறு பக்கம் வண்டியை திருப்ப எண்ணும் போது நொடிப்பொழுதில் தூக்கி எறியப்பட்டான். அவன் முழித்து பார்க்கும் போது சுற்றிலும் வெண்மை நிறத்தில் இருந்தது. அவன் இருந்த இடம் ஏதோ மேகம் கூட்டம் நடுவில் இருப்பது போல் ஒரு பின்பம் ஏற்படுத்தியது.

அவன் எண்ணம் எல்லாம் மித்ருதா நினைத்து தான். அதுனாலையோ என்னவோ மேல் இருந்து பார்க்கும் போது அவளை சுற்றி நடப்பவை மட்டுமே தெரிந்தது. அவள் படும் துன்பம் எல்லாம் மனதை குத்தி கிழித்தது.

இதில் இன்னும் வருத்தமான விஷயம்… அதிக வேகத்தில் வந்து இவன் மேல் வண்டியை இடித்தவன் உயிர் தப்பிவிட்டான். ஆனால் மிதமான வேகத்தில் வண்டியை செலுத்தி… மற்றவருக்கு எதுவும் ஆகிட கூடாது என்று எண்ணியவனுக்கு உயிர் போய் விட்டது.

சுற்றிலும் யாரும் இல்லை, இவன் மட்டுமே தன்னந்தனியாக நடப்பவை பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் இறந்து விட்டான் என்பது புரிந்தது. ஆனால் அவன் இருக்கும் இடம் தான் எதுவென்று தெரியவில்லை.

செத்த பின்பு தான் யாரு எல்லாம் உண்மையான உறவு என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது துருவுக்கு. அவன் அம்மா , அப்பா பேசியதை அவனால் நம்பவே முடியவில்லை. இவர்கள் மேல் கோவமாக இருப்பார்கள் என்பது தெரியும் ஆனால் தான் செத்ததுக்கு மித்ருதாவை காரணம் காட்டி… அவள் கடைசி வரையிலும் தனி மரமாக இருப்பாள் என்று சாபம் விடு வரை போவார்கள் என்று எண்ணவில்லை. அவன் பெற்றவர்கள் மேல் இருக்கும் மரியாதை கொஞ்சம் ஆட்டம் கண்டது. அஜய் அங்கு இருந்து பார்துக்கொண்டதையும் கவனித்தான்.

அண்ணன், தம்பி இருவருக்கு பெரியதாக பேச்சு வார்த்தை எப்போதும் இருக்காது. ஆனால் இருவரும் மனதில் பாசத்தை மறைத்து வைத்து இருப்பர்.

அஷோக், சுபா மற்றும் இல்லை என்றால் மித்ருதா கண்டிப்பாக இன்னும் மனதளவில் உடைந்து போயிருப்பாள் என்பது உண்மை. அவர்கள் இருவரும் வாழ்கையில் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மேலும் மித்ருதாவின் பெற்றோர் மேல் அவனுக்கு அளவில்லாத கோவம்.

மனைவியை நினைத்து தான் அழுகையாக வந்தது. மேலே இருந்துக்கொண்டு ‘ மித்ரா! மித்ரா ‘ என மனம் அவளையே தேடியது. அவன் இருக்கும் இடத்தில இருந்து குதிக்க பார்க்க… ஆனால் வந்து நிற்பதோ வேறு ஒரு மேகம் தான்.

அதுவும் அவள் கல்லறைக்கு வந்த அவளின் தோற்றமும், மனதோடு அவனோடு வந்து சண்டை இட்டது அவனுக்கு ஏற்படுத்திய மிகப்பெரிய வலி. ஒவ்வொரு நாளும் அவள் படும் வேதனை அவனையும் வாட்டியது.


அவன் இருக்கும் வரையில் அவளை எதற்கும் கலங்க விடாமல் பார்த்துக்கொள்வான். ஆனால் இப்போது அவள் கலங்க இவனே காரணம் ஆகிவிட்டான். இவன் மனைவி அவன் இல்லாமல் சாப்பிட, தூங்க எதுவும் பழக்கம் இல்லை. இந்த ஒரு வாரத்தில் அவள் படும் வேதனை அவன் அறிவான்.

அவன் இருக்கும் இடத்திலேயே முட்டி போட்டு அமர்ந்து அழுக ஆரம்பித்து விட்டான். அவளிடம் போய் விட மனம் துடித்தது. ஆனால் செத்த பின் எவ்வாறு செல்ல முடியும்.

தான் இல்லை என்றாலும் அவள் வாழ்கையாவது சந்தோசமாக இருக்கட்டும் என்ற எண்ணம் வர… அவள் சந்தோசமே நீ தான் என்ற பதில் இதயம் சொன்னது. வாடிய முகத்துடன் அமர்ந்து இருந்தான். அப்போது அவனுக்கு பின் குள்ள மனிதர்கள் போல் இருவர் வந்தனர். இவனின் முட்டி வரைக்கும் தான் இருந்தனர். அதில் ஆண் ஒன்று பெண் ஒன்று. இருவரின் கையில் ஒரு நோட், பென் (pen) இருந்தது.

இவர்களை பார்த்த துருவ் பயந்தே போய் விட்டான். பயத்தில் ‘ ஆ ஆ ஆ ஆ ஆ.. பேய் ‘ என்று அலற… அவன் முன் நின்று பெண்

“ நீயே செத்து தான் பேய்யா இருக்க. நீ எங்களை பார்த்தது பேய்னு சொல்றியா. ம்ம்ம் “ என்றது முறைத்துக்கொண்டு.

அந்த ஆண் குள்ள மனிதன் “ அதை விடு, நம்ம தினமும் இதே தான கேட்குறோம். நம்ம வந்த வேலையை மட்டும் பார்க்கலாம். ஆமா உங்க பேரு தான் துருவ் கிருஷ்ணாவா”

அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த துருவ் அந்த குள்ள மனிதன் கேள்வியில் ‘ ஆம் ‘ என்று தலையை அசைத்தான்.

“ எங்க பின்னாடியே வாங்க “ என்று மொட்டையாக சொல்லிவிட்டு முன்னே சென்றனர். ஆனால் அவன் அசையாமல் அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

மீண்டும் இருவரும் அவன் அருகில் வந்து “ என்ன பார்த்துட்டே இருக்கீங்க? சீக்கிரம் வாங்க. நிறையா வேலை இருக்கு”

“நீ.. நீங்..நீங்க எல்லாம் யாரும். இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லயே “ என்று கேட்ட வியப்பாக.

“ ஏன்னா நீ இப்போ தான் முதல் முறையா செத்து போயிருக்க. அதான் இதுக்கு முன்னாடி நீ எங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கல “ என்று நக்கலாக அந்த பெண் குள்ள மனுஷி சொன்னாள்.

அவனுக்கு வியப்பாக, ஆச்சரியமாக இருந்தது. பொம்மை போல் குட்டியாக இருக்கும் இருவரும் அவ்வளவு முகம் பாவனைகை காட்டினர்.

“ அய்யயோ அது இல்லை. நான் செத்து எங்க வந்துருக்கேன். சுற்றி மேகம் மட்டும் தான் தெரியுது. நம்ம எங்க இருக்கோம்? நீங்க எல்லாம் யாரு? உங்க பேரு என்ன? “ என்று சுற்றிலும் பார்த்துக்கொண்டு வரிசையாக தன் சந்தேகத்தை முன் வைத்தான்.

“ நம்ம இருக்கிறது சொர்கத்துக்கும் பூமிக்கு இடையில இருக்குற ஒரு இடம். நாங்க எல்லாம் இந்த இடத்துக்கு வர்றவங்களை நிர்வாகம் பண்ணுறவங்க. என்னோட பேரு ராஜா இவா ராணி “ என்றான் ராஜா என்கிற குள்ள மனிதன்.

“ ஏது? சொர்கமா ??!!” என்று ஆச்சரியப்பட்டு சுற்றி பார்த்தான்.

“ வாங்க. நேரம் இல்லை. நம்ம போய் ஆகனும் “ என்று ராஜா அவசரபடுத்திய படியே முன்னாடி நடந்தான். பின்னாடி ராணி இவனை பார்த்து கண்களை சுருக்கி பார்த்து பின்னாடி வரும் படி செய்கை செய்தாள்.

ஒரு மேகத்தில் சின்ன கதவு மாதிரி இருக்க… அதை ராஜா திறந்தான். உள்ளே நிஜமாவே சொர்கப்புரி தான். இறக்கைகள் வைத்த தேவதைகள் அங்கு இங்கு பறந்து கொண்டு இருந்தது. அவர்கள் பறக்கும் போதே அவர்கள் பின்னல் நட்சத்திர வடிவில் ஜிகினா போல் வந்தது. வளைந்த வானவில் அந்த இடத்துக்கு மேலும் அழகு சேர்த்தது. ராஜா, ராணியை போல் வேறு சிலரும் இருந்தனர். வெள்ளையில் இருந்து தொடங்கி கருப்பு கலர் வரை தேவதை, குள்ள மனிதர்கள் எல்லோரையும் பார்க்க முடிந்தது. இன்னும் சில உயிரினங்களும் இருந்தது. அனைவரின் முகத்தில் ஒரு தேஜஸ், சந்தோசம் மட்டுமே தரும் இடமாக இருந்தது.

அவன் ஆச்சரியப்பட்டது எல்லாம் சில நிமிடங்கள் தான் மீண்டும் மித்ருதா எண்ணம் தான். அவள் என்ன செய்து கொண்டு இருப்பாள், சாப்பிட்டாலா என்று மனம் அவளையே தேடியது.

ராணி - கொஞ்ச நாள் நீங்க இங்க தான் இருக்கனும். உங்களுக்கு வேண்டியது எல்லாமே இங்க கிடைக்கும். எதாவது வேணும்னா எங்களை கூப்பிடுங்க வருவோம் என்று ஒரு அறையை அவனுக்கு காட்டினர்.

இவன் இப்போது ஆத்மா எனவே அவன் விருப்ப பட்டது எல்லாம் அவன் நினைத்தாலே கண் முன் வந்தது, மித்ருதா தவிர. அவன் அறை எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணத்தில் உருவம் கொடுக்க அதே போல் அவன் அறையும் மாறியது.

ராஜா - நீங்க இங்க எங்க வேணும் நாலும் போகலாம். எதுவா இருந்தாலும் செய்யலாம். கொஞ்சம் நாள் அப்புறம் மேல இருக்க சொர்கத்துக்கு போகலாம். சரியா?

துருவ் - எங்க நாலும் போகலாமா? என்றான் வலியும், ஏக்கமும் நிறைந்த குரலில்.

ராஜா, ராணியும் அவனை பாவமாக பார்த்தனர். கொஞ்சம் தயங்கிய குரலில்

ராஜா - இந்த இடத்தில நீங்க எங்க நாலும் போகலாம். வேற எங்கேயும் போக முடியாது என்றுவிட்டு இருவரும் உடனே வெளியே சென்று விட்டனர்.

சோகமாக அங்கு இருந்த படுக்கையில் படுத்தான். மித்ருதா அருகில் வேண்டும் என மனம் கேட்டது. இவன் அறையில் இருக்கும் ஜன்னல் வழியே வெளிய பார்த்தான். பல விதமான மக்கள், தேவதைகள், குள்ள மனிதர்கள் என பார்க்கவே வொண்டர் லேண்ட் (Wonderland) போல இருந்தது. அங்கு அவன் எல்லோரிடமும் பொதுவாக பார்க்க பட்ட விஷயம்… ‘ மகிழ்ச்சி, சிரிப்பு ‘. இவனை தவிர எல்லோரும் சந்தோசமாக இருப்பதாக தோன்றியது.

ஒருவேளை வயதாகி மித்தருதாவுடன் பல ஆண்டுகள் வாழ்ந்து இந்த இடத்துக்கு வந்து இருந்தால் இவனுக்கு இப்படி எல்லாம் தோன்றாமல் இருந்து இருக்குமோ என்னவோ. வெறும் இரண்டு ஆண்டுகள் அவன் காதலை காட்ட அவனுக்கு போதவில்லை.

வெளியே சென்ற ராஜா, ராணி இவனை பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தனர்.

ராணி - என்ன ராஜா, துருவுக்கு சொர்கம் வந்திருக்கோம்னு சந்தோசமே இல்லை. ரொம்ப வருத்தப் படுறாங்க.

ராஜா - அவங்க வாழ்கையை அப்போ தான் ஆரம்பிசிருக்காங்க. அதுக்குள்ள வாழ்கை முடிஞ்சதுனு‌ கஷ்டமா இருக்குது போல… என அவனுக்கு தெரிந்தவற்றை சொன்னான்.

ராணி - நீ சொல்றது சரிதான். சிலர் இவங்கள மாதிரி வருத்தப் படுவாங்க. ஆனா சொர்கம் வந்த அப்புறம் அவங்க மனசு மாறிடும். துருவ் மனசு எப்போ மாறும்னு தெரியல

ராஜா - நீ எதுவும் குழப்பிக்காத. அவங்க சீக்கிரம் இங்க உள்ளத புறிஞ்சிகுவாங்க. சொர்கம் அவங்க மனச கண்டிப்பா மாத்தும் என்றவன் ராணியோடு சேர்ந்து இறக்கை கொண்டு பறந்து சென்றான் அடுத்த வேலையைப் பார்க்க.

துருவ் அவன் அறையில் மித்ருதா என்ன செய்கிறாள் என்று பார்த்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு சொர்க்கத்தை சுற்றி பார்க்க ஆசை வரவில்லை. அவன் மனைவி முகம் பார்த்தே படுத்துக்கொண்டு இருந்தான்.


அவனின் நினைவுகள் அவளை முதல் முதலில் பார்த்த அன்று பயணித்தது….

அன்று

துருவ் நண்பர்களுடன் துணி வாங்க கடைக்கு சென்று இருந்தான். ஒரு புறம் பெண்களுக்கான பிரிவு மறு புறம் ஆண்களுக்கு. இடையில் டிரையல் ரூம் ( trial room ) ஆண்களுக்கு, பெண்களுக்கு தனி தனியாக கொஞ்சம் இடைவெளி விட்டு இருந்தது.

இவன் நண்பன் உடையை போட்டு பார்க்க சென்று இருக்க. துருவ் ஃபோன் பார்த்துக்கொண்டு நடந்தான். இன்னும் சில நண்பர்கள் இன்னும் உடை தேர்வு செய்து கொண்டு இருந்தனர்.

துருவ் நடந்து கொண்டே டிறையல் ரூம் அருகில் வர… அப்போது அறை கதவு திறக்க உள்ளே இருந்து ஒரு பெண் குரல் “ இந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்கா?” என்று அவள் குனிந்து மஞ்சள் கலர் உடையை பார்த்துக்கொண்டே கேட்க.. முன்னால் இருக்கும் நபரை கவனிக்கவில்லை.

ஃபோன் பார்த்துக்கொண்டு இருந்த துருவ் குரல் வந்த திசையில் பார்க்க… ஒரு நிமிடம் இமைக்க மறந்து அவளையே பார்த்தான். அவள் மித்ருதா. தோழியுடன் ஷாப்பிங் வந்து இருந்தாள்.

தோழி தான் வெளியில் நிற்கிறாள் என்று கேட்டிருக்க… வெளியே ஒரு ஆடவன் நிர்ப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் வெட்கமாக போய் விட்டது. அவளை பார்த்து லேசாக புன்னகைத்தான். பின் வேணும் என்றே “ சூப்பரா இருக்கு உனக்கு “ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.

அதில் பெண்ணுக்கு இன்னும் வெட்கமாக போய் விட்டது. உடனே கதவை சாற்றி விட்டாள். சிறிது நேரம் கழித்து தோழி வந்து இந்த உடை கொஞ்சம் பெருசா இருக்கு என்று குறை கூறினாலும் அதே உடையையே தேர்வு செய்தாள்.

பில் கவுண்டர்ல் துருவ் நின்று கொண்டு இருக்க அவன் அருகில் மித்ருதா தேர்வு செய்த மஞ்சள் நிற உடை பில் போட வைக்கப்பட்டது. அதனை பார்த்து அவனுக்கும் லேசாக சிரிப்பு எட்டிப்பார்த்தது. பின் அவன் நண்பர்களுடன் கிளம்பி சென்றுவிட்டான்.

வீட்டுக்கு சென்ற பின்னும் இருவருக்கும் கடையில் நடந்த நிகழ்வின் நியாபகம் தான். இனிமேல் ஒருவரை ஒருவர் பார்ப்போம் என்று எல்லாம் நினைக்கவில்லை. இதுவே முதலும் இறுதியும் ஆன சந்திப்பு என்று நினைத்தே கடந்து போயினர்.

துருவ் எண்ணம்… அழகான பெண்ணை பார்த்தான், ரசித்தான், அவள் அழகாக இருக்கேனா என்று கேட்டாள் ஆம் என்று உண்மையை சொல்லிவிட்டான் அவ்வளவே.

அப்போது அவன் நினைக்கவில்லை அந்த பெண்ணை இவ்வளவு காதலிப்பான் என்று. இதனை நிகழ்காலத்தில் நினைத்து பார்த்தவனுக்கு லேசாக சிரிப்பு எட்டிப்பார்த்தது. அவன் இருக்கும் நிலமை அறிய… வந்த சிரிப்பு மறைந்தும் விட்டது. அவன் இல்லை என்றாலும் மித்ருதா சந்தோஷமாக இருக்க என்ன வழி என்று யோசித்தான்.
 
Top