logo

அத்தியாயம் 2

Mars

Administrator
அர்ஜுன், ஆதி இருவரும் ஆளுக்கு ஒரு பைக்கில் வந்து இறங்கினர். சாரா அவர்களுக்காக கேட் வாசலில் காத்துக்கொண்டு இருந்தாள். எதிர் திசையில் முடி பார்க்க, போட்டு இருந்து ஷாலும் அதனுடன் பார்க்க சிரிப்போடு இருவரையும் நோக்கி ஓடி வந்தாள். வந்ததில் மூச்சு வாங்கி, வேர்த்தது. நெஞ்சில் கை வைத்து துடிக்கும் இதயத்தை சமாதானம் செய்ய முயன்றாள்.

ஓடி வந்ததில் லேசாக களைந்து இருந்த முடியை ஆதி சரி செய்ய, கைக்குட்டை எடுத்து வடிந்த வேர்வையை அர்ஜுன் துடைத்தான்.

“எதுக்கு இப்படி ஓடி வர்ற, அதான் நாங்க அங்க தான வர்றோம்?” என்ற அர்ஜுன் கைக்குட்டையை எடுத்து மீண்டும் பாக்கெட்டில் வைத்தான்.


“டேய், உங்களை யாருடா பாக்க வந்தா. அதை கொண்டுவந்தீங்களா? “ என ஆர்வம் மின்ன கேட்டாள் சாரா.

“நீ சொல்லி நாங்க அதை பண்ணாம இருந்திருக்கோமா? இதோ இங்க தான் இருக்கு” என பட்டாசை எடுத்து காட்டினான் ஆதி.

“ நான் தான் எடுப்பேன், அப்படியே பத்த வைக்க போறதும் நான் தான் சொல்லிட்டேன்” என இருவரையும் பார்த்து ஒரு விரல் நீட்டி எச்சரித்தாள்.

“ சரி, நீயே பண்ணு. ஆனா நான் பக்கத்துல நிப்பேன்” என்றான் அர்ஜுன்.

“டேய், அர்ஜுன் இந்த சாரா வாய் மட்டும் தான் பேசும். ஆனா கையில தீப்பெட்டி கொடுத்த பத்த வைக்கிற அப்போ கை எல்லாம் நடுங்கும் பாரு” என ஆதி அர்ஜுனிடம் சொல்லி சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

கஷ்டபட்டு சிரிப்பை அடக்கிய அர்ஜுன் “டைம் ஆச்சு, வா சாரா. இந்தா சரவெடி” என அவள் கையில் கொடுத்தான்.

ஆசையாக வாங்கிக்கொண்டாள். இவர்கள் இருப்பது கேட் வாசலில் என்பதால் கொஞ்சம் தள்ளிச்சென்று ரோட்டில் பட்டாசை சுருள் போல் இருந்ததை நீட்டி வைத்தாள். ஆதி அவள் கையில் தீப்பெட்டியை கொடுக்க, வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு தீயை பொருத்தினாள்.

அதுவரைக்கும் தைரியமாக இருந்தவள் பட்டாசு அருகில் செல்லும் போது கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டது. இதனை பார்த்த ஆதி மற்றும் அர்ஜுன் சத்தமா சிரித்துவிட்டனர்.

“பயமா இருந்தா சொல்லவேண்டியது தான. எதுக்கு இந்த வெட்டி வீராப்பு எல்லாம்” என ஆதி கிண்டல் செய்தான்.

“அவன் கிடக்கிறான்… நீ வா சாரா, நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்ற அர்ஜுன் வேறு ஒரு தீக்குச்சி பொருத்தி சாரா கையை பிடித்துக்கொண்டு அந்த 200 watts சரவெடியில் வைக்க அது அந்த ஏரியா அதிர வெடித்தது.

புகையிலும், சத்தத்திலும் சாரா ஓடியே போய் ஒளிந்துவிட, அந்நேரம் சரியாக பிரின்சிபால் காரில் வந்து இறங்கினார்.

புகை எல்லாம் முகத்தில் பட்டு அங்காங்கே கருமை பூசிக்கொண்டது. கார் ஓட்டுநரே பக் என்று சிரித்து விட்டார். பிரின்சிபால் திரும்பி பார்த்து ஒரு முறை முறைக்க அவர் கிளம்பிவிட்டார்.

“சஸ்பென்ட் பண்ணி காலேஜுக்கு வர்ற லட்சணமா இது? கொஞ்சம் கூட பயம் இல்லை பணிவு இல்லை. நீங்க எல்லாம் படிச்சு என்ன உருப்புட போறீங்க” என தையா தக்கா என்று கத்தினார்.

மேலும் தொடர்ந்து “ உங்க ப்ரெண்ட் சரஸ்வதிய பாருங்க டா. எவ்வளவு பவ்வியமா இருக்கா. அந்த பொண்ணு பார்த்து கத்துக்கோங்க”

சத்தம் கேட்டு பயந்து ஒதுங்கிய சாரா அப்போது தான் வெளியில் வந்தாள். பிரின்சிபால் கண் முன் இருந்தது ஆதி, அர்ஜுன் மட்டுமே. எனவே பட்டாசை கொளுத்தி போட்டது அவர்கள் தான் என்று நினைத்துக்கொண்டார்.

ஆதி மற்றும் அர்ஜுன், சாராவை ‘அடிப்பாவி’ என்பது போல் பார்த்தனர். அதற்கு பதிலுக்கு இருவரையும் பார்த்து இளித்து வைத்தாள்.

“போய் படிச்சு முன்னேறுற வழிய பாருங்க” என ஆதி ,அர்ஜூனைப் பார்த்து சொன்னவர், சாரா பக்கம் திரும்பி “சாரா, அந்த உருபுடாத கழுதைகளுக்கு கொஞ்சம் புத்தி மதி சொல்லு மா.” என சொல்லி முடிக்கும் போது சரியாக அவர் காலுக்கு அடியில் வந்து சிதறிய பட்டாசு வெடிக்க அந்த மனுஷன் பதறியே விட்டார். பயத்தில் கையையும், கால்லையும் ஆட்ட குதிக்கிறேன் என்று குரலி வித்தை காட்டிட சுற்றி இருந்த எல்லோரும் சிரித்துவிட்டனர்.

“கெட் அவுட்ட்ட்ட்ட்” என்று கத்தி, அவரே அங்கு இருந்து சென்றுவிட்டார்.

ஆதி வேகமாக சாரா அருகில் வந்தது அவள் கழுத்தை முழங்கை கொண்டு வளைத்து பிடித்து “ ராட்சஸி, ராட்சஸி “ என்று தலையிலேயே கொட்டினான்.

“டேய் விடு டா வலிக்குது டா. நான் என்ன பண்ணுவேன் நீங்களா தான் மாட்டிக்கிறீங்க” என அவர்கள் மேலே பலி போட்டாள்.

ஆதி அவளை விட்ட நொடி, அர்ஜுன் அவள் காதை பிடித்து திருகினான்.

“ ஏன் டி, நீயும் தான கூட்டு களவாணி. நீ மட்டும் எஸ்கேப் ஆகிட்டு நல்ல புள்ள பேரு வாங்குற. எங்களை அந்த ஆள் எகிருறாரு” என திருகினான்.

அவன் கையை பிடித்துக்கொண்டு முகத்தை லேசாக சுருக்கி வலிப்பது போல் பாவனை செய்தாள். அதில் இளகிய மனசில் கையை எடுத்து விட்டான்.

“பிராடு டி நீ” என இருவரும் அவளை செல்லமாக தலையில் தட்டினர்.

“ சஸ்பென்ட் ஆனா அப்புறம் காலேஜ் வர்றோம். அதான் கொஞ்சம் மாஸ் ஆ பட்டாசு எல்லாம் போடுட்டு உங்களை உள்ள கூப்டு போகலாம்னு பார்த்தேன். ஆனா அது இப்படி சோதப்பும்னு நினைக்கவே இல்லை” என சொல்லியவாறு இருவரும் காலேஜ் கேன்டீன் நோக்கி சென்றனர்.

“சரி அதை விடு, வீட்ல இருந்து எதுல வந்த? “ என ஆதி கேட்க

“அதிகாலையில கிளம்பி ரெண்டு பஸ் மாறி வந்தேன் டா. ரெண்டாவது பஸ் ரொம்ப கூட்டம். கால்லையே நிறையா பேரு மிதிச்சாங்க” என சாதாரணமாக தான் சொன்னாள்.

ஆனா கேட்ட இருவருக்கும் தான் மனம் பாரமாக இருந்தது. இருவர் நினைத்தால் தினமும் சொகுசு காரில் வரலாம் தான் அதற்கு எதிர்மறையாக அவர்கள் தோழி வாழ்க்கை இருப்பது கஷ்டமாக இருந்தது. இருவரும் பார்வை மட்டுமே மாற்றிக்கொண்டனர். சாராவுக்கு அவளை பாவமாக பார்த்தால் பிடிக்காது என்பதால் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

“ஆமா, உங்க அப்பா எப்படி இருக்காங்க அன்னைக்கு ஃபோன் பேசுன அப்போ அவருக்கு உடம்புக்கு சரி இல்லனு சொன்ன” என அர்ஜுன் கரிசனமாக கேட்டான்.

முகம் சுருங்கிய விட்டது சாராவுக்கு. இருவரும் அளவுக்கு ஒரு கையை பிடித்து அழுத்தம் கொடுக்க

“ஹே அதுலாம் இப்போ சரி ஆகிடுச்சு. இப்போ நல்லா இருக்காங்க” என கவலையை மறைத்து சிரித்த படியே சொன்னாள்.

அவளுக்கு என்று இருப்பது அப்பா மட்டும் தான். எதுவும் ஆகிவிடுமோ என்ற பயம் எப்போதும் உள்ளுக்குள் இருக்கும். சீக்கிரம் படிப்பை முடித்துவிட்டு தந்தையை கூடவே வைத்துக்கொண்டு நல்ல வேலைக்கு சென்று பார்த்துக்கொள்வதே அவளின் ஆசை.

சோகமாக இருக்கும் நிலமையை மாற்ற, ஆதி அவள் பையில் இருந்த டிஃபன் பாக்ஸ் எடுத்து “ இன்னைக்கு என்ன டி கொண்டு வந்த. வாசமே சூப்பர் ஆ இருக்கு” என வாசனை பிடித்தான்.

அவன் செய்கையில் சிரித்த சாரா “ புலி கொழம்பு தான் டா”

ஆதி வேகமாக சாப்பிட அர்ஜுனும் அவனோடு சேர்ந்துகொண்டான். ‘ எனக்கு ‘ ‘ உனக்கு ‘ என சண்டை போட்டு சாப்பிட்டு முடித்தனர்.

அவள் எப்போது வீட்டு சாப்பாடு கொண்டு வந்தாலும் அது எதுவாக இருந்தாலும் ஆளுக்கு பாதியாக காலி செய்து விடுவர். முதல் காரணம் அது சுவையாக இருப்பது. இரண்டாவது காரணம், சாரா காலையிலும் அதே தான் சாப்பிட்டு வந்து இருப்பாள் மீண்டும் அதே தான் மதிய உணவாக கட்டி கொண்டு வந்து இருப்பாள் வீட்டில் இருந்து நேராக காலேஜ் வந்ததால். எனவே இதே காரணம் கொண்டு மதிய உணவை அவளுக்கு பிடித்த ஒன்றை வாங்கிக்கொடுத்து விடுவர்.

வாங்கி ஹாஸ்டல் கொடுத்து விடலாம் தான் ஆனால் சாப்பாடு தான் அவளுக்கு மிஞ்சாது எனவே அவர்கள் அருகில் உட்கார வைத்தே சாப்பிட வைத்துவிடுவர்.

சாப்டுட்டு கையை கழுவி சாரா ஷாலில் தான் இருவரும் துடைத்தனர்.

“ எருமை மாடுகளா” என அதற்கும் ஆளுக்கு ஒரு அடி வாங்கினர்.

இவர்கள் மூவரை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்பதால் யாரும் எதையும் கேட்கவில்லை. இவர்கள் குழுவில் ஐக்கியமாக சிலர் முயற்சி செய்ய யாரையும் சேர்த்துக்கொள்ள இவர்களால் முடியவில்லை.

முக்கியமாக ஆதி மற்றும் அர்ஜூனுக்கு வேறு பெண் தோழி யாரிடமும் நட்பை கடைபிடிக்க முடியவில்லை. நாட்கள் சென்றாலே சண்டை வந்து விடுகிறது. ஆண் நண்பர்கள் இருந்தாலும் சாரா அளவுக்கு யாரும் நெருக்கம் இல்லை.

சாராவுக்கு ஹாஸ்டலில் பெண் தோழிகள் இருந்தாலும் முதலில் இவளிடம் நட்பாக இருந்து விட்டு ஆதி மற்றும் அர்ஜூனுக்கு தூதுவிடும் புறாவாகவே இவளை பயன் படுத்தினர். எனவே அவளுக்கு வேறு யாரிடமும் நட்பு தொடர முடியாமல் போனது. எனவே அளவாகவே பேசுவாள் அவ்வளவே.

அன்று மதியம் சாப்ட கேன்டீனில் ரொட்டி, பன்னீர், பிரைட் ரைஸ் என வரிசையா ஆதி மற்றும் அர்ஜுன் வாங்க… கையை பிசைந்து கொண்டு நின்று கொண்டு இருந்தாள் சாரா.

அவளிடம் கொடுக்க அவ்வளவு காசு இல்லை. எனவே எப்படி இதை சொல்ல என தயங்கினாள். அவளின் முகத்தை பார்த்தே புரிந்து கொண்டனர் மற்ற இருவரும். அவளின் தயக்கம் பார்த்து கோவம் கூட எட்டிப்பார்த்தது. உயிருக்கு உயிரான நட்பாக அவர்கள் அவளை கருத, ஆனால் அவள் தயக்கம் கொள்கிறாள்.

“சாரா, மார்னிங் நம்ம புட் ஷார் பண்ணிக்கிட்ட மாதிரியே, இப்போ நம்ம லஞ்சையும் அதை போலவே ஷார் பண்ணி சாப்பிடலாம்” என அர்ஜுன் சொல்ல ‘சரி’ என்பதை போல் தலையை அசைத்தாள்.

அவளுக்கு இது எல்லாமே பிடித்த உணவு. அதிகம் வெளியில் சாப்பிட்டது இல்லை எனவே இருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாமே வாங்கி கொடுத்து விடுவார் ஏதாவது காரணம் சொல்லி.


சாரா இன்னும் தயக்கமாகவே சாப்பிட்டு கொண்டு இருக்க, இதை பார்த்த ஆதி… இது சரி வராது என்பதால் அர்ஜுனை பார்த்து கண்களால் செய்கை செய்தான். அதை அர்ஜுன் புரிந்துகொள்ள

“இந்த சாரா, இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ” என பிரைட் ரைஸ் எடுத்து அவள் தட்டில் வைத்தான் அர்ஜுன்.

“ என்னடா நீ மட்டும் தான் வைப்பியா. நான் வைக்க மாட்டேனா” என ஆதி சொல்லியபடி “நீ இந்த ரொட்டி எடுத்துக்கோ சாரா, அதை விட இது தான் டேஸ்ட் நல்லா இருக்கும்” என அதனை எடுத்து அவள் தட்டில் வைத்தான்.

மீண்டும் அர்ஜுன் கொஞ்சம் ரைஸ் எடுத்து அவள் பிளேட்டில் வைக்க, அதற்கு போட்டியாக அர்ஜுன் ரொட்டி எடுத்து வைக்க என அவள் தட்டை நிரப்பினார். இதனை கவனித்த சாரா பொருமை இழந்து

“ ரெண்டு பேரும் சும்மா இருங்க. எனக்கே சாப்பாடு வேணும்னா போட்டுக்க தெரியும். அமைதியா ரெண்டு பேரும் வாயை மூடிட்டு சாப்பிடுங்க “ என சொல்லிய பிறகு தான் அமைதியாகினர்.

சாராவுக்கு அவர்கள் முயற்சி புரியாமல் இல்லை. அதன் பின் அவளே எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட்டாள்.

எதையோ யோசித்து கொண்டு இருந்த அர்ஜுன் அதனை சாராவிடம் கேட்க வரும் முன்…

“இன்னைக்கு எத்தன மணிக்கு சாரா போகனும்” என ஆதி முதலில் கேட்டுவிட்டான். ஒரு நொடி இருவரையும் பார்த்த அர்ஜுன் மீண்டும் உணவில் கவனம் ஆனான்.

அதை பற்றி தான் சாராவும் சிந்தித்துக்கொண்டு இருந்தாள். சாப்பிட்டு கொண்டு இருந்த சாராவின் கவனம் அவன் கேள்வியில் ஆதி பக்கம் சென்றது.

“ எப்பையும் போல் தான் ஆதி காலேஜ் முடிஞ்ச அப்புறம்… ஹாஸ்டல் ல போய்ட்டு கொஞ்சம் ரெப்ரஷ் (Refresh) ஆகிட்டு வண்டியை எடுத்துட்டு கிளம்பனும்“ மீண்டும் ஒரு வாய் உண்ட பின் கொஞ்சம் இடைவெளி விட்டு “ நானே பார்துக்குவேன் ஆதி..” என சொல்லி முடிக்கும் முன்பே ஆதி மற்றும் அர்ஜுன் ஒரே போல் அவளை திரும்பி பார்த்தனர்.

“ உன்ன தனியா அனுப்பிட்டு நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும்னு நினைக்கிற, சாரா. பின்ன உன்னோட ப்ரெண்ட்ஸ்னு நாங்க எதுக்கு இருக்கோம்” என அர்ஜுன் எடுத்து சொல்லிக்கொண்டு இருந்த சமயம் ஆதி கோவமாக எழுந்து சென்றான்.

“ அர்ஜுன், அங்க பாரு ஆதி எழுந்து போறான். நான் உங்க ரெண்டு பேருக்கு எதுக்கு கஷ்டம்னு தான் அப்படி சொன்னேன்” என பறிதவிப்புடன் ஒரு கையை தலையில் தாங்கிக்கொண்டு தன்னிலை விளக்கம் கொடுக்க முயன்றாள்.

இருவரும் தூரமாக நடந்து சென்ற ஆதியை பார்த்தனர். அர்ஜுன் இன்னும் சாப்பிட்டு முடிக்காமல் இருக்க அவனுக்காக அவன் உணவை முடிக்கும் வரை அருகில் அமர்ந்து இருந்தாள். இன்னொரு மனமோ ஆதி பின்னாடி செல்ல சொல்லி தூண்டியது. அவளுக்கு இருவரும் முக்கியம் தான். உணவில் பாதியில் எழுந்தால், அர்ஜுன் இவள் பின்னாடி கண்டிப்பாக வருவான் என அவளுக்கு நன்கு அறியும். ஆதி இப்போது சென்ற இடமும் தெரியும் எனவே முதலில் அருகில் உள்ளவனுக்கு முக்கியத்துவம் கொடுத்தாள். ஒருவேளை அர்ஜுன் இருக்கும் இடத்தில் ஆதியும், ஆதி இருக்கும் இடத்தில் அர்ஜுனும் இருந்தால் இதே தான் செய்து இருப்பாள்.

பின் இருவரும் ஆதி இருக்கும் இடம் நோக்கி சென்றனர்.

“ நீ ஏன் சாரா, அப்படி சொன்ன. அதான் அவன் கோவிச்சிட்டு போயிட்டான். எங்களை நீ என்னைக்கு தான் புரிஞ்சிக்க போற? “ என அவனும் போகிற வழியில் ஆதாங்கமாக கேட்டான்.

ஆதி அமர்ந்து இருந்தது கொஞ்சம் இடிந்து போன பழைய பில்டிங் போல் இருந்தது. சாரா சொன்ன வார்த்தையில் கோவமாக அமர்ந்து இருந்தான்.

“ஏன் ஆதி எங்களை விட்டுடு வந்த. நான் அப்படி என்ன உங்க ரெண்டு பேரு கிட்டையும் சொல்லிட்டேன். சாயங்காலம் நான் பண்ண போற பார்ட் டைம் வேலைக்கு துணைக்கு வர வேண்டாம்னு தான சொன்னேன். அதுக்கு ஏன் மூஞ்சிய தூக்கி வைக்குறீங்க ரெண்டு பேரும்?” என அவளும் கத்தினாள்.

அர்ஜுன் ஆதி அருகில் அமர்ந்த படியே “நீ செய்யிற வேலை அப்படி. வேலை முடிஞ்சு வர நைட் ஆகிடுது. அது உனக்கு பாதுகாப்பு இல்லை, அதான் எங்கள்ள ஒருத்தர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் துணைக்கு வர்றோம் அவ்வளவு தான். இதுக்கு ஏன் நீ ஓவர் ரியாக்ட் பண்றனு புரியல”

“புரியாம பேசாத அர்ஜுன். இப்படி பண்றது உங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க? இல்ல நம்ம போற இடத்துக்கு உங்களுக்கு தெரிஞ்சா ஆள் இருந்தா உங்க ரெபுட்ரேஷன் என்ன ஆகிறது? “ என கவலையாக கேட்டாள்.

அமைதியாக இருந்த ஆதி “ எங்க ப்ரெண்ட் கூட போறதுல எங்களுக்கு எந்த ரெபுட்டேஷனும் குறைய போறதும் இல்லை. நீ உழைச்சு சம்பாதிக்கிற, சோ உன் கூட வர்றதுல எங்களுக்கு அவமானம் இல்லை டி“

“டேய் நான் சொல்ல வர்றது கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க. என்ன இருந்தாலும் நீங்க பெரிய இடம். இது மாதிரி வேலை எல்லாம் நீங்க பண்ணா கூடாது. என்னோட கஷ்டம் அது என்னோடவே போகட்டும் அதை ஏன் நீங்களும் சுமக்கணும்?!!” என கண் கலங்கினாள்.


அவள் பார்க்கும் வேலை புட் டெலிவரி செய்வது. அதான் அவர்களை துணைக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாள். காலேஜ் முடிந்த பின் அந்த கம்பனி உடையான நீல வண்ணம் போட்டுக்கொண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு புட் டெலிவரி செய்வாள். இரவு ஆனதும் திரும்ப ஹாஸ்டல் வந்துவிடுவாள். அவளுக்கு துணைக்கு ஆதி அல்லது அர்ஜுன் செல்வர். அவள் எவ்வளவோ சொல்லி பார்த்துவிட்டாள் வர வேண்டாம் என்று ஆனால் இருவரும் கேட்ட பாடு இல்லை.

ஆதியும், அர்ஜூனும் பெரிய இடத்து பிள்ளைகள். அவர்களுக்கு தெரிந்த வீட்டுக்கு டெலிவரி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர்கள் இருக்கும் பணக்கார வர்க்கத்தில் மரியாதை குறைவாக இருக்கும் என்றே இவ்வாறு சொல்கிறாள்.

“இதுல என்ன மரியாதை குறைய போகுது எங்களுக்கு. புட் டெலிவரி பண்றது என்ன கொரச்சலான வேலையா?!! இல்லயே. இதுவும் நல்ல வேலை தான். ஆனா ஒன்னும் இந்த வேலையே வசதியா இருக்குனு ஒரே இடத்தில தங்கிட கூடாது. இன்னும் கொஞ்சம் நாள் இந்த வேலைய செய்வீயா? அதுக்கு அப்புறம்….படிச்ச படிப்புக்கு வேலை செய்ய ஆரம்பிசிடுவ. அது வரைக்கும் உன் பாதுகாப்புக்கு தான் வர்றோம்னு சொல்றோம். டேக் இட் ஈஸி சாரா” என அர்ஜுன் புரியும் படி சொன்னான்.

அவன் கூற்று யோசிக்கும் படியாக இருந்தது. ஷால் நுனியை திருகிக்கொண்டு அவள் யோசிப்பது தெரிய…

“நீ இங்க பாதுகாப்பா இருக்கானு தான் உங்க அப்பா நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா நீ நைட்டு நேரத்துல வேலைக்கு போறது உங்க அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சியா?” என ஆதி சொன்னான்.

குழப்ப ரேகைகள் முகத்தில் தெரிய… எதிரில் இருக்கும் இருவரையும் பாவமாக பார்த்தாள். அவள் வேலைக்கு போவது அவள் தந்தைக்கு தெரியாது. தெரிந்தால் கண்டிப்பாக வருத்தப்படுவார். இப்போது தான் அவர் உடம்புக்கு கொஞ்சம் நன்றாக உள்ளதை கவனித்தாள் இதனை மேலும் கெடுக்கும் விதமாக எதுவும் செய்ய கூடாது என்பதால் அவர்கள் சொல்லுவதுக்கு சரி என்று சொல்லுவதை விட வேறு வழி இல்லை என்பது புரிந்தது.


அமர்ந்து இருந்த இருவர் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தனர். அவள் தீவிரமாக யோசிப்பது புரிந்தது. அவளுக்கு நேரம் கொடுக்க அமைதியாக இருந்தனர். என்ன தான் இந்த வயதுக்கு உரிய விளையாட்டு தனம் இருவரிடமும் இருந்தாலும் சாரா என்று வரும் போது சீரியஸ் ஆக மாறிவிடுவர்.

கொஞ்சம் நாளாக தான் இந்த வேலைக்கு செல்கிறாள். தினமும் இதே போராட்டம் தான் இவளுடன். இன்று ஆதி அதனை பொறுக்காமல் கோவப்பட்டு விட்டான். அவன் கோபத்திலும் நியாயம் இருக்கு விதமாக தான் அவள் வேலையும் இருக்கும். சில நேரம் வரும் ஆர்டர் 10 ஆவது மாடியில் இருக்கும். புட் டெலிவரி செய்பவர்களை லிஃப்ட் பயன்படுத்தவும் விடமாட்டார்கள், ஆர்டர் செய்தவர்களும் கீழே வந்து வாங்க மாட்டார்கள். கூட ஒரு ஆள் வந்தால் கம்மி ஸ்டார் ரேட்டிங் போட்டு விடுவதால் சாரா அவர்களை வர விட மாட்டாள். அவர்களின் வரவு அவள் வேலையை கெடுக்கும் படியாக இருவரும் இருக்க கூடாது என்று நினைப்பர் எனவே வண்டி அருகே அவளுக்கு காத்து இருக்கும் படியாக இருக்கும். அந்நேரம் எல்லாம் அவள் திரும்பி வரும் வரை பதற்றமாக இருக்கும் இருவருக்கும். ,இரவில் திரும்ப ஹாஸ்டல் போகும் போது வாடிய கொடி போல் இருப்பாள். அவர்களை முடிந்த உதவி அவளுக்கு அவ்வபோது வண்டி ஓட்டி செல்வதும், கூட்டமாக இருக்கும் ஹோட்டலில் கொடுத்த ஆர்டர்க்கு பார்சல் வாங்கிகிட்டு வருவது என செய்வர்.

இந்த வேலையில் பெண்களுக்கு நிறைய சிக்கல் இருப்பதால் தான் இந்த வாக்கு வாதம்.

நன்றாக யோசித்த சாரா.. இருவருக்கு இடையில் வந்து அமர்ந்தாள். அர்ஜுன், ஆதி இருவரும் பக்கவாட்டாய் அவளை திரும்பி என்ன சொல்ல போகிறாள் என்பது போல் பார்த்தனர்.

“சரி, நான் முடிவு பண்ணிட்டேன்” என்றாள் சாரா.

ஆதி, அர்ஜுன் இருவரும் எதிர்பார்ப்போடு அவளை பார்க்க

“உங்க ரெண்டு பேரையும் அப்பரண்டீசா சேர்த்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என சீரியஸ் ஆக சொல்ல

மற்ற இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் அவளை பிடித்து தலையில் கொட்டினர்.


“கேடி கேடி… உனக்காக பேசுனா நீ எங்களையே கலாய்க்குறீயா? இரு உன்னைய… “ என அர்ஜுன் சொல்ல… சாரா ஓடும் முன் ஆதி பிடித்து விட ஆளுக்கு ஒரு காதை பிடித்து வலிக்காத வாரு திருக அதுக்கு வலிக்கும் படியாக ரியாக்ஷன் சாரா கொடுக்க என சண்டை முடிந்து சமாதானம் ஆகினர் .

இவர்கள் இருந்த இடம் காலேஜ் பழைய பில்டிங் எனவே காலேஜ் கேம்பஸ் உள்ளே தான் இருந்தது.

இவர்களை மறைந்து இருந்து ஒரு உருவம் பார்த்துக்கொண்டே இருந்தது வன்மத்துடன். அந்த நபர் பார்க்கும் நேரம் மூவரும் சிரித்தபடி பேசிக்கொண்டு வரும் போது சாராவின் கால் கள் தடுக்கி விட அர்ஜுன் குனிந்து அவள் காலில் அடிபட்டு விட்டதா என்று பார்க்க, ஆதியோ சாராவிடம் கரிசனமாக ஏதோ பேசிக்கொண்டு இருந்தான். இந்தனை பார்த்ததும் இன்னும் வயித்தெரிச்சலில் சென்றுவிட்டது.
 
Top